வடமதுரை, வடமதுரை அருகே நடந்த கோயில் திருவிழாவில் 14 எருமை கிடாய்கள் வெட்டி புதைக்கப்பட்டன. வடமதுரை பேரூராட்சி முதல் வார்டை சேர்ந்த கிராமம் கன்னிமார்பாளையம். மலை சார்ந்த பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்தில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழில். இங்குள்ள செல்வ விநாயகர், மருதகாளியம்மன், வீரஜக்கம்மாள் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உற்சவ திருவிழா நடக்கிறது. இந்தாண்டுக்கான 3 நாள் திருவிழா கரகம் பாலித்தலுடன் துவங்கியது. மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல், எருது ஓட்டம் விடுதல் உள்ளிட்ட பாரம்பரிய வழிபாடுகள் நடந்தன. இறுதி நாளில் மருதகாளியம்மனுக்கு நேர்த்திக்கடனுக்காக விடப்பட்டிருந்த 14 எருமை கிடாய்களை வெட்டி அங்கிருந்த குழியில் தள்ளி புதைத்தனர். இறுதியாக மஞ்சள் நீராட்டுடன் அம்மன் கங்கை செல்லும் நிகழ்வுடன் திருவிழா நிறைவடைந்தது.