வீரராகவ பெருமாள் கோவில் தை பிரம்மோற்சவம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2012 11:01
திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவள்ளூரில் வீற்றிருக்கும் வீரராகவ சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தை பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இவ்வாண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று காலை, 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க சப்பரத்தில் கனகவல்லித் தாயாரின் சொந்த ஊரான ஈக்காடு கிராமத்திற்கு உற்சவர் எழுந்தருளினார். அங்குள்ள கல்யாண வீரராகவ பெருமாள் கோவில் மண்டபத்தில் சிறிது நேரம் இளைப்பாறிய அவருக்கு சிறப்பான மரியாதை செய்விக்கப்பட்டது. தொடர்ந்து, அங்கிருந்து மீண்டும் தங்க சப்பரத்தில் புறப்பட்டு திருவள்ளூர் கோவில் வந்தடைந்தார். உற்சவத்தின் முதல்நாளான நேற்றும், மூன்றாவது நாளான (21ம் தேதி) கருட சேவை தினத்தன்றும், ஒன்பதாம் நாளான (27ம்தேதி) தீர்த்தவாரி அன்றும் சுவாமி ஈக்காடு சென்று திரும்புவார்.நேற்று துவங்கிய தை பிரம்மோற்சவ விழா தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், திருவீதி உலா நிகழ்ச்சியும் வழக்கம்போல் நடைபெறும். வரும், 25ம் தேதி காலை 7 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடைபெறும். அன்றிரவு சுவாமி விஜயகோடி விமானத்தில் எழுந்தருளுவார்.