பழங்காலத்து கிரேக்கக் கதை ஒன்று உண்டு. மிகச்சிறந்த வீராங்கனைக்கும், ஒரு இளவரசனுக்கும் ஓட்டப்பந்தயம் நடந்தது. மக்கள் ஏராளமாகக் கூடியிருந்தனர். ஆரம்பத்தில் இருவரும் மிகுந்த ஊக்கத்துடன் ஓடினார்கள். சிறிது நேரத்தில் அந்த வீராங்கனை, இளவரசனை முந்த ஆரம்பித்து விட்டாள். எனவே, அவளுடைய கவனத்தை திசை திருப்புவதற்காக இளவரசன் தங்கத்தால் ஆன ஆப்பிள் பழம் ஒன்றை தரையில் உருட்டி விட்டான். அது சூரிய ஒளியில் பளபளத்தபடியே அவளுக்கு முன்னால் சென்றது. அதைப்பார்த்ததும், அதை எடுத்துக் கொள்ளும் ஆவலில் சற்றே வேகத்தைக் குறைத்தாள். அதை எடுத்துக்கொண்டு மீண்டும் ஓட ஆரம்பித்தாள். அப்போது இளவரசன், முத்துக்களால் ஆன மற்றொரு ஆப்பிளை உருட்டி விட்டான். அதையும் எடுத்துக் கொண்ட வீராங்கனை, தனது ஓட்டத்தின் வேகத்தை மேலும் குறைத்தாள். இதையடுத்து, வைரத்தால் ஆன ஆப்பிள் ஒன்றை இளவரசன் உருட்டிவிட, அவளது கவனம் முழுமையாக சிதறிவிட்டது. ஓட்டத்தின் இலக்கையே மறந்து விட்டாள். இந்த இடைவெளியில் இளவரசன் அவளை வேகமாக முந்தி வெற்றி பெற்று விட்டான். வாழ்க்கையும் ஒரு ஓட்டப்பந்தயமே. அந்த பந்தயத்தில் நம் மன உறுதியை திசை திருப்பும்படியாக, சாத்தான் பலவிதமான உபாய தந்திரங்களைப் பயன்படுத்துகிறான். இதற்காக உலக இன்பங்கள், சுவையான உணவு போன்ற கவர்ச்சிகளை அனுப்புகிறான். இவற்றை அடைவதற்காக பாவ ஆசைகளையும் துõண்டி விடுகிறான். இதனால், ஏராளமானோர் தங்களுடைய இலக்குகளை மறந்து திசைமாறிச் சென்று கொண்டிருக்கின்றனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பைத்தவிர, வேறு எந்த இலக்கையும் அடைவது நமது நோக்கமாக இருக்கக்கூடாது. அவரது அன்பைப்பெற அவர் சொன்ன பாதையில் நடக்க வேண்டும்.