Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நீதி சுய சரிதை சுய சரிதை
முதல் பக்கம் » பல்வகைப் பாடல்கள்
தனிப் பாடல்கள்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
02:01

1. காலைப்பொழுது
 
காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல்
மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே.

கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் விடுத்தான்;
பார்த்த வெளியெல்லாம் பகலொளியாய் மின்னற்றே.

தென்னை மரத்தின் கிளையிடையே தென்றல் போய்
மன்னப் பருந்தினுக்கு மாலை யிட்டுச் சென்றதுவே.

தென்னை மரக்கிளைமேற் சிந்தனையோ டோர் காகம்
னவன்னமுற வீற்றிருந்து வானைமுத்த மிட்டதுவே.

தென்னைப் பசுங் கீற்றைக் கொத்திச் சிறு காக்கை
மின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே.

வன்னச் சுடர் மிகுந்த வானகத்தே தென் திசையில்
கன்னங் கருங்காகக் கூட்டம்வரக் கண்ட தங்கே.

கூட்டத்தைக் கண்டஃது கும்பிட்டே தன்னருகோர்
பாட்டுக் குருவிதனைப் பார்த்து நகைத்ததுவே.

சின்னக் குருவி சிரிப்புடனே வந்தாங்கு
கன்னங் கருங்காக்கை கண்ணெதிரே யோர்கிளைமேல்

வீற்றிருந்தேகிக் கிக்கீ;காக்காய் நீ விண்ணிடையே
போற்றியெதை நோக்குகிறாய்? கூட்டமங்குப் போவ தென்னே?:

என்றவுட னே காக்கை-என் தோழா! நீ கேளாய்,
மன்றுதனைக் கண்டே மனமகிழ்ந்து போற்றுகிறேன்.

என்றுசொல்லிக் காக்கை இருக்கையிலே ஆங்கணோர்
மின்திகழும் பச்சைக் கிளிவந்து வீற்றிருந்தே.

நட்புக் குருவியே ஞாயிற்றிளவெயிலில்
கட்புலனுக் கெல்லாம் களியாகத் தோன்றுகையில்,

நும்மை மகிழ்ச்சிடன் நோக்கியிங்கு வந்திட்டேன்!
அம்மவோ!காகப் பெருங்கூட்ட மஃதென்னே?

என்று வினவக் குருவிதான் இஃதுரைக்கும்;-
நன்றுநீ கேட்டாய்,பசுங்கிளியே!நானுமிங்கு.

மற்றதனை யோர்ந்திடவே காக்கையிடம் வந்திட்டேன்;
கற்றறிந்த காக்காய்,கழறுக நீ! என்றதுவே.

அப்போது காக்கை,அருமையுள்ள தோழர்களே!
செப்புவேன் கேளீர்,சில நாளாக் காக்கையுள்ளே.

நேர்ந்த புதுமைகளை நீர்கேட்டறியீ ரோ?
சார்ந்துநின்ற கூட்டமங்கு சாலையின்மேற் கண்டீரே?

மற்றந்தக் கூட்டத்து மன்னவனைக் காணீரே?
கற்றறிந்த ஞானி கடவுளையே நேராவான்;

ஏழுநாள் முன்னே இறைமகுடந் தான் புனைந்தான்;
வாழியவன் எங்கள் வருத்தமெல்லாம் போக்கிவிட்டான்.

சோற்றுக்குப் பஞ்சமில்லை; போரில்லை;துன்பமில்லை;
போற்றற் குரியான் புதுமன்னன்,காணீரோ?

என்றுரைத்துக் காக்கை இருக்கையிலே அன்னமொன்று
தென்திசையி னின்று சிரிப்புடனே வந்ததங்கே.

அன்னமந்தத் தென்னை யருகினிலோர் மாடமிசை
வன்னமுற வீற்றிருந்து,-வாழ்க,துணைவரே!

காலை யிளவெயிலிற் காண்பதெலாம் இன்பமன்றோ?
சால நுமைக் கண்டுகளித்தேன் சருவிநீர்,

ஏதுரைகள் பேசி யிருக்கின்றீர்? என்றிடவே
போதமுள்ள காக்கை புகன்றதந்தச் செய்தியெல்லாம்.

அன்னமிது கேட்டு மகிழ்ந்துரைக்கும்;-ஆங் காணும்!
மன்னர் அறம்புரிந்தால்,வையமெல்லாம் மாண்புபெறும்.

ஒற்றுமையால் மேன்மையுண்டாம்; ஒன்றையொன்று துன்பிழைத்தல்
குற்றமென்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே?

என்று சொல்லி அன்னம் பறந்தாங்கே ஏகிற்றால்;
மன்று கலைந்து மறைந்தனவப் புட்களெல்லாம்.

காலைப் பொழுதினிலே கண்டிருந்தோம் நாங்களிதை;
ஞால மறிந்திடவே நாங்களிதைப் பாட்டிசைத் தோம்.

2. அந்திப் பொழுது

காவென்று கத்திடுங் காக்கை-என்தன்
கண்ணுக் கினிய கருநிறக் காக்கை,
மேவிப் பலகிளை மீதில்-இங்கு
விண்ணிடை அந்திப் பொழுதினைக் கண்டே,
கூவித் திரியும் சிலவே;-சில
கூட்டங்கள் கூடித் திசைதொறும் போகும்.
தேவி பராசக்தி யன்னை -வின்ணிற்
செவ்வொளி காட்டிப் பிறைதலைக் கொண்டாள். 1

தென்னை மரக்கிளை மீதில்-அங்கோர்
செல்வப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்
சின்னஞ் சிறிய குருவி-அது
ஜிவ் வென்று விண்ணிடை யூசலிட் டேகுட்.
மன்னப் பருந்தொ ரிரண்டு-மெல்ல
வட்ட மிட்டுப்பின் நெடுந்தொலை போகும்,
பின்னர் தெருவிலார் சேவல்-அதன்
பேச்சினி லேசக்தி வேல் என்று கூவும். 2

செவ்வொளி வானில் மறைந்தே-இளந்
தேநில வெங்கும் பொழிந்தது கண்டீர்!
இவ்வள வான பொழுதில் அவள்
ஏறிவந்தே யுச்சி மாடத்தின் மீது,
கொவ்வை யிதழ்நகை வீச,-விழிக்
கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தான்.
செவ்விது,செவ்விது,பெண்மை!-ஆ!
செவ்விது,செவ்விது,செவ்விது காதல்! 3

காதலி னாலுயிர் தோன்றும்;-இங்கு
காதலி னாலுயிர் வீரத்தி லேறும்;
காலி னாலறி வெய்தும்-இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்;
ஆதலி னாலவள் கையைப் -பற்றி
அற்புத மென்றிரு கண்ணிடை யொற்றி
வேதனை யின்றி இருந்தேன்,-அவள்
வீணைக் குரலிலோப் பாட்டிசைத் திட்டாள். 4

காதலியின் பாட்டு

கோல மிட்டு விளக்கினை யேற்றிக்
கூடி நின்று பராசக்தி முன்னே
ஓல மிட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார்
உண்மை கண்டிலர் வையத்து மாக்கள்;
ஞால முற்றும் பராசக்தி தோற்றம்
ஞான மென்ற விளக்கினை யேற்றிக்
கால முற்றுந் தொழுதிடல் வேண்டும்,
காத லென்பதொர் கோயிலின் கண்ணே. 5

3. நிலாவும் வான்மீனும் காற்றும்
(மனத்தை வாழ்த்துதல்)

 
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோலவெறி படைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ!  1

தாரகை யென்ற மணித்திரள் யாவையும்
சார்ந்திடப் போமனமே,
சரச் சுவையதி லுறி வருமதில்
இன்புறு வாய்மனமே!
சீர விருஞ்சுடர் மீனொடு வானத்துத்
திங்களையுஞ் சமைத்தே
ஓரழ காக விழுங்கிடும் உள்ளத்தை
ஒப்பதொர் செல்வமுண்டா  2

பன்றியைப் போலிங்கு மண்ணிடைச் சேற்றில்
படுத்துப் புரளாதே
வென்றியை நாடியிவ் வானத்தில் ஓட
விரும்பி விரைந்திடுமே;
முன்றலில் ஓடுமோர் வண்டியைப் போலன்று
மூன்றுலகுஞ் சூழ்ந்தே
நன்று திரியும்வி மானத்தைப் போலொரு
நல்ல மனம் படைத்தோம்.  3

தென்னையின் கீற்றுச் சலசலச வென்றிடச்
செய்துவருங் காற்றே!
உன்னைக் குதிரைகொண் டேறித் திரியுமொர்
உள்ளம் படைத்துவிட்டோம்.
சின்னப் பறவையின் மெல்லொலி கொண்டிங்கு
சேர்ந்திடு நற் காற்றே!
மின்னல் விளக்கிற்கு வானகங் கொட்டுமிவ்
வெட்டொலி யேன் கொணர்ந்தாய்? 4

மண்ணுல கத்துநல் லோசைகள் காற்றெனும்
வானவன் கொண்டுவந்தான்;
பண்ணி விசைத்தவ வொலிக ளனைத்தையும்
பாடி மகிழ்ந்திடுவோம்.
நண்ணி வருமணி யோசையும்,பின்னங்கு
நாய்கள் குலைப்பதுவும்,
எண்ணுமுன்னேஅன்னக் காவடிப் பிச்சையென்
றேங்கிடு வான் குரலும்,
வீதிக் கதவை அடைப்பதும் கீழ்த்திசை
விம்மிடும் சங்கொலியும்,
வாதுகள் பேசிடு மாந்தர் குரலும்
மதலை யழுங் குரலும்,
ஏதெது கொண்டு வருகுது காற்றிவை
எண்ணி லகப்படுமோ?
சீதக் கதிர்மதி மேற்சென்று பாய்ந்தங்கு
தேனுண்ணு வாய்,மனமே!  6

4. மழை

திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட 1

வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்;-கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!  2

அண்டம் குலுங்குது,தம்பி!-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை
வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன
தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்! 3

5. புயற் காற்று

(நள வருடம் காத்திகை மாதம் 8ம் தேதி புதன் இரவு ஒரு கணவனும் மனைவியும்)

மனைவி: காற்றடிக்குது,கடல்குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகமே!
தூற்றல் கதவு சாளரமெல்லாம்
தொளைத்தடிக்குது, பள்ளியிலே.

கணவன்: வானம் சினந்தது;வையம் நடுங்குது;
வாழி பராசக்தி காத்திடவே!
தீனக்குழந்தைகள் துன்பப்படாதிங்கு
தேவி, அருள்செய்ய வேண்டுகிறோம்.

மனைவி:நேற்றிருந் தோம்அந்த வீட்டினிலே,இந்த
நேரமிருந்தால் என்படுவோம்?
காற்றெனவந்தது கூற்றமிங்கே,நம்மைக்
காத்ததுதெய்வ வலிமையன்றோ?

6. பிழைத்த தென்னந்தோப்பு

வயலிடை யினிலே-செழுநீர்-மடுக் கரையினிலே
அய லெவரு மில்லை-தனியே-ஆறுதல் கொள்ள வந்தேன்.

காற்றடித் ததிலே-மரங்கள்-கணக்கிடத் தகுமோ?
நாற்றி னைப்போலே-சிதறி-நாடெங்கும் வீழ்ந்தனவே.

சிறிய திட்டையிலே,உளதோர்-தென்னஞ் சிறுதோப்பு
வறியவ னுடைமை-அதனை-வாயு பொடிக்க வில்லை

வீழ்ந்தன சிலவாம்-மரங்கள்-மீந்தன பலவாம்;
வாழ்ந்திருக்க வென்றே-அதனை-வாயு பொறுத்து விட்டான்

தனிமை கண்டதுண்டு;-அதில்-சார மிருக்கு தம்மா!
பனிதொலைக்கும் வெயில்,-அது தேம்-பாகு மதுர மன்றோ?

இரவி நின்றது காண்-விண்ணிலே-இன்பவொளித்திரளாய்;
பரவி யெங்கணுமே-கதிர்கள்-பாடிக் களித்தனவே.

நின்ற மரத்திடையே-சிறிதோர்-நிழலினில் இருந்தேன்,
என்றும் கவிதையிலே-நிலையாம்-இன்பம் அறிந்து கொண்டேன்.

வாழ்க பராசக்தி!-நினையே-வாழ்த்திடுவோர் வாழ்வார்;
வாழ்க பராசக்தி!-இதையென்-வாக்கு மறவாதே

7. அக்கினிக் குஞ்சு

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.

8. சாதாரண வருஷத்துத் தூமகேது

தினையின் மீது பனைநின் றாங்கு
மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக்
ழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண் டிலகும்
தூம கேதுச் சுடரே,வாராய்!

எண்ணில் பல கோடி யோசனை யெல்லை
எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புனைந்த நின்னெடுவால் போவதென் கின்றார்.

மண்ணகத் தினையும் வால்கொடு தீண்டி
ஏழையர்க் கேதும் இடர்செயா தேநீ
போதி யென்கின்றார்;புதுமைகள் ஆயிரம்
நினைக்குறித் தறிஞர் நிகழ்த்துகின் றனரால்.

பாரத நாட்டில் பரவிய எம்மனோர்
நூற்கணம் மறந்துபன் னூறாண் டாயின;
உனதியல் அன்னியர் உரைத்தடக் கேட்டே
தெரிந்தனம்;எம்முளே தெளிந்தவர் ஈங்கிலை.

வாராய்,சுடரே!வார்த்தைசில கேட்பேன்;
தீயர்க் கெல்லாம் தீமைகள் விளைத்துத்
தொல்புவி யதனைத் துயர்க்கட லாழ்த்திநீ
போவை யென்கின்றார்; பொய்யோ,மெய்யோ?

ஆதித் தலைவி யாணையின் படிநீ
சலித்திடுந் தன்மையால்,தண்டம் நீ செய்வது
புவியினைப் புனிதமாப் புனைதற் கேயென
விளம்பு கின்றனர் அது மெய்யோ,பொய்யோ?

ஆண்டோர் எழுபத் தைந்தினில் ஒரு முறை
மண்ணைநீ அணுகும் வழக்கினை யாயினும்
இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்
விளையு மென்கின்றார்;மெய்யோ,பொய்யோ?

சித்திகள் பலவும்,சிறந்திடு ஞானமும
மீட்டும் எம்மிடைநின் வரவினால் விளைவதாப்
புகலு கின்றனர்; அது பொய்யோ,மெய்யோ?

9. அழகுத் தெய்வம்

மங்கியதொர் நிலவினிலே கனவிலிது கண்டேன்,
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை;
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்.
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்,
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து,
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்ததேன். 1 

யோகந்தான் சிறந்ததுவோ? தவம் பெரிதோ?என்றேன்;
யோகமே தவம்,தவமே யோகமென உரைத்தாள்.
ஏகமோ பொருளன்றி இரண்டாமோ?என்றேன்;
இரண்டுமாம்,ஒன்று மாம்,யாவுமாம்என்றாள்.
தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ?
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ?என்றேன்.
வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்
விருப்புடனே பெய்குவது வேறாமோ?என்றாள்.  2

காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ?என்றேன்.
காலமே மதியினுக்கோர் கருவியாம்என்றாள்.
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ?என்றேன்;
நானிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்என்றாள்
ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை?என்றேன்;
எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்என்றாள்.
மூலத்தைச் சொல்லவோ?வேண்டாமோ?என்றேன்;
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.  3

10. ஒளியும் இருளும்

வானமெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே! 1

சோதி என்னும் கரையற்ற வெள்ளம்
தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,
சோதி என்னும் பெருங்கடல்,சோதிச்
சூறை,மாசறு சோதி யனந்தம்,
சோதி என்னும் நிறைவிஃதுலகைச்
சூழ்ந்து நிற்ப,ஒரு தனி நெஞ்சம்
கோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே! 2

தேம லர்க்கொர் அமுதன்ன சோதி,
சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி,
காம முற்று நிலத்தொடு நீரும்
காற்றும் நன்கு தழுவி நகைத்தே
தாம யங்கநல் லின்புறுஞ் சோதி,
தரணி முற்றும் ததும்பி யிருப்ப,
தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
சிறிய நெஞ்சம் தியங்குவ தென்னே! 3

நீர்ச்சு னைக்கணம் மின்னுற் றிலக,
நெடிய குன்றம் நகைத்தெழில் கொள்ள,
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்
கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரம் கற்றும்
தெவிட்டொ ணாதநல்லின்பக் கருவாம்
வேர்ச்சு டர்பர மாண்பொருள் கேட்டும்
மெலிவொர் நெஞ்சிடை மேவுதல் என்னே! 4

11. சொல்

சொல் ஒன்று வேண்டும்,தேவ சக்திகளை
நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.

தேவர் வருகவென்று சொல்வதோ?-ஒரு
செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்,
ஆவ லறிந்துவரு வீர்கொலோ?-உம்மை
யன்றி யொருபுகலும் இல்லையே. 1

ஓம்என் றுரைத்துவிடிற் போதுமோ?-அதில்
உண்மைப் பொருளறிய லாகுமோ?
தீமை யனைத்துமிறந்தேகுமோ?-என்தன்
சித்தம் தெளிவுநிலை கூடுமோ?  2

உண்மை ஒளிர்கஎன்று பாடவோ?-அதில்
உங்கள் அருள்பொருந்தக் கூடுமோ?
வண்மை யுடையதொரு சொல்லினால்-உங்கள்
வாழ்வு பெறவிரும்பி நிற்கிறோம். 3

தீயை அகத்தினிடை மூட்டுவோம்-என்று
செப்பும் மொழிவலிய தாகுமோ?
ஈயைக் கருடநிலை யேற்றுவீர்-எம்மை
என்றுந் துயரமின்றி வாழ்த்துவீர்.  4

வான மழைபொழிதல் போலவே-நித்தம்
வந்து பொழியுமின்பங் கூட்டுவீர்;
கானை அழித்து மனை கட்டுவீர்-துன்பக்
கட்டுச் சிதறிவிழ வெட்டுவீர்.  5

விரியும் அறிவுநிலை காட்டுவீர்-அங்கு
வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்:
தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர்-நல்ல
தீரப் பெருந்தொழிலில் பூட்டுவீர்.  6

மின்ன லனையதி றல் ஓங்குமே-உயிர்
வெள்ளம் கரையடங்கிப் பாயுமே;
தின்னும் பொருளமுதம் ஆகுமே-இங்குச்
செய்கை யதனில் வெற்றி யேறுமே. 7

தெய்வக் கனல்விளைந்து காக்குமே-நம்மைச்
சேரும் இருளழியத் தாக்குமே;
கைவைத் ததுபசும்பொன் ஆகுமே-பின்பு
காலன் பயமொழிந்து போகுமே.  8

வலிமை,வலிமைஎன்று பாடுவோம்-என்றும்
வாழுஞ் சுடர்க்குலத்தை நாடுவோம்;
கலியைப் பிளந்திடக் கை யோங்கினோம்-நெஞ்சில்
கவலை யிருளனைத்தும் நீங்கினோம். 9

அமிழ்தம்,அமிழ்தம்என்று கூறுவோம்-நித்தம்
அனலைப் பணிந்துமலர் தூவுவோம்;
தமிழில் பழமறையைப் பாடுவோம்-என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம். 10

12. கவிதைத் தலைவி

வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி!
தினமும்இவ் வுலகில் சிதறியே நிகழும்
பலபல பொருளிலாப் பாழ்படு செய்தியை
வாழ்க்கைப் பாலையில் வளர்பல முட்கள்போல்
பேதை யுலகைப் பேதைமைப் படுத்தும்

வெறுங்கதைத் திரளை,வெள்ளறி வுடைய
மாயா சக்தியின் மகளே!மனைக்கண்
வாழ்வினை வகுப்பாய்,வருடம் பலவினும்
ஓர்நாட் போலமற் றோர்நாள் தோன்றாது
பலவித வண்ணம் வீட்டிடைப் பரவ

நடத்திடுஞ் சக்தி நிலையமே!நன்மனைத்
தலைவீ!ஆங்கத் தனிப்பதர்ச் செய்திகள்
அனைத்தையும் பயன்நிறை அனுபவ மாக்கி,
உயிரிலாச் செய்திகட்கு உயிர்மிகக் கொடுத்து,
ஒளியிலாச் செய்திகட்கு ஒளியருள் புரிந்து

வான சாத்திரம்,மகமது வீழ்ச்சி,
சின்னப் பையல் சேவகத் திறமை;
எனவரு நிகழ்ச்சி யாவே யாயினும்,
அனைத்தையும் ஆங்கே அழகுறச் செய்து,
இலௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும்

பேதை மாசத்தியின் பெண்ணே!வாழ்க!
காளியின் குமாரி!அறங்காத் திடுக
வாழ்க!மனையகத் தலைவீ வாழ்க!

13. கவிதைக் காதலி

வாராய்!கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!
பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன,
நின்னருள் வதனம் நான் நேருறக் கண்டே
அந்தநாள் நீயெனை அடிமையாக் கொள,யாம்
மானிடர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்து

எண்ணிலா இன்பத்து இருங்கடல் திளைத்தோம்;
கலந்துயாம் பொழிலிடைக் களித்தவந் நாட்களிற்
பூம்பொழிற் குயில்களின் இன்குரல் போன்ற
தீங்குரலு டைத்தோர் புள்ளினைத் தெரிந்திலேன்;
மலரினத் துன்தன் வாள்விழி யொப்ப

நிலவிய தொன்றினை நேர்ந்திலேன்;குளிர்புனற்
சுனைகளில் உன்மணிச் சொற்கள் போல் தண்ணிய
நீருடைத் தறிகிறேன்;நின்னொடு தமியனாய்
நீயே உயிரெனத் தெய்வமும் நீயென
நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன்.

வானகத் தமுதம் மடுத்திடும் போழ்து
மற்றத னிடையோர் வஞ்சகத் தொடுமுள்
வீழ்ந்திடைத் தொண்டையில் வேதனை செய்தன.
நின்னொடு களித்து நினைவிழந் திருந்த
எனைத்துயர்ப் படுத்தவந் தெய்திய துலகிற்

கொடியன யாவுளும் கொடியதாம் மிடிமை
அடிநா முள்ளினை அயல்சிறி தேகிக்
களைந்து பின்வந்து காண்பொழுத ஐயகோ!
மறைந்தது தெய்வ மருந்துடைப் பொற்குடம்
மிடிமைநோய் தீர்ப்பான் வீணர்தம் முலகப்

புன்தொழில் ஒன்று போற்றுதும் என்பாள்
தென்திசைக் கண்ணொரு சிற்றூர்க் கிறைவனாம்
திருந்திய ஒருவனைத் துணையெனப் புகுந்து,அவன்
பணிசெய இசைந்தேன்,பதகிநீ!என்னைப்
பிரிந்துமற் றகன்றனை பேசொணா நின்னருள்.

இன்பமத் தனையும் இழந்துநான் உழன்றேன்,
சின்னாள் கழிந்தபின் -யாதெனச் செப்புகேன்!
நின்னொடு வாழ்ந்த நினைப்புமே தேய்ந்தது.
கதையிலோர் முனிவன் கடியதாஞ் சாப
விளைவினால் பன்றியா வீழ்ந்திடு முன்னர்த்

தன்மக னிடை என் தனயநீ யான்புலைப்
பன்றியாம் போது பார்த்துநில் லாதே!
விரைவிலோர் வாள்கொடு வெறுப்புடை யவ்வுடர்ல
துணித்தெனைக் கொன்று தொலைத்தலுன் கடனாம்.
பாவமிங் கில்லையென் பணிப்பிஃ தாகலின்!

தாதைசொற்கு இளைஞன் தளர்வொடும் இணங்கினான்.
முனிவனும் பன் றியா முடிந்தபின்,மைந்தன்
முன்னவன் கூறிய மொரீயினை நினைந்தும்,
இரும்புகழ் முனிவனுக்குன இழியதா மிவ்வுடல்
அமைந்தது கண்டுநெஞ் சழன்றிடல் கொண்டும்.

வாள்கொடு பன்றியை மாய்த்திட லுற்றனன்,
ஆயிடை மற்றவ் வருந்தவப் பன்றி
இனையது கூறும்.ஏடா!நிற்க!
நிற்க!நிற்க!முன்னர்யாம் நினைந்தவாறு
அத்துணைத் துன்புடைத் தன்றிவ் வாழ்க்கை

காற்றும் புனலும் கடிப்புற் கிழங்கும்
இனையபல் லின்பம் இதன் கணே யுளவாம்;
ஆறேழ் திங்கள் அகன்றபின் வருதியேல்
பின்னெனைக் கோறலாம்பீழையோ டிவ்வுரை
செவியுறீஈ முடிசாய்த் திளையவன் சென்றனன்.

திங்கள்பல போனபின் முனிமகன் சென்ற
தாதைப் பன்றியோர் தடத்திடைப் பெடையொடும்
போத்தினம் பலவொடும் அன்பினிற் பொருத்தி
ஆடல்கண் டயிர்த்தனன். ஆற்றொணா தருகுசென்று
எந்தாய்!எந்தாய்!யாதரோ மற்றிது!

வேதநூ லறிந்த மேதகு முனிவரர்
போற்றிட வாழ்ந்தநின் புகழ்க்கிது சாலுமோ?
எனப்பல கூறி இரங்கினன்;பின்னர்
வாள்கொடு பன்றியை பாய்ததிடல் விழைந்தான்.
ஆயிடை முனிவன் அகம்பதைக் துரைக்கும்

செல்லடா! செல்க தீக்குணத் திழிஞ!
எனக்கிவ் வாழ்க்கை இன்புடைத் தேயாம்;
நினக்கிதில் துன்பம் நிகழுமேல் சென்றவ்
வாளினின் நெஞ்சை வகுத்து நீ மடிக
என்றிது கூறி இருந்தவப் பன்றிதன்

இனத்தொடும் ஓடி இன்னுயிர் காத்தது.
இன்னது கண்ட இளையவன் கருதும்.
ஆவா!மானிடர் அருமையின் வீழ்ந்து
புன்னிலை யெய்திய போழ்ததில் நெடுங்கால்
தெரு மரு கின்றிலர் சிலபகல் கழிந்தபின்

புதியதா நீசப் பொய்மைகொள் வாழ்வில்
விருப்புடை யவராய் வேறுதா மென்றும்
அறிந்திலரேபோன் றதிற்களிக் கின்றார்.
என்சொல்கேன் மாயையின் எண்ணரும் வஞ்சம்.
திமிங்கில வுடலும் சிறியபுன் மதியும்

ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன்
தன்பணிக் கிசைந்தென் தருக்கெலாம் அழிந்து
வாழ்ந்தனன் கதையின் முனிபோல் வாழ்க்கை!

14. மது

போகி

பச்சை முந்திரித் தேம்பழங் கொன்று
பாட்டுப் பாடிநற் சாறு பிழிந்தே
இச்சை தீர மதுவடித் துண்போம்;
இஃது தீதென் றிடையர்கள் சொல்லும்
கொச்சைப் பேச்சிற்கை கொட்டி நகைபோம்;
கொஞ்சு மாரும் கூட்டுணும் கள்ளும்
இச்சகத்தினில் இன்பங்க ளன்றோ?
இவற்றின் நல்லின்பம் வேறொன்று முண்டோ? 1

யோகி

பச்சை முந்திரி யன்ன துலகம்;
பாட்டுப் பாடடல் சிவக்களி எய்தல்;
இச்சை தீர உலகினைக் கொல்வோம்;
இனிய சாறு சிவமதை உண்போம்;
கொச்சை மக்களுக் கிஃதெளி தாமோ?
கொஞ்சு மாதொரு குண்டலி சக்தி
இச்சகத்தில் இவையின்ப மன்றோ?
இவற்றின் நல்லின்பம் வேறுளதாமோ? 2

போகி

வெற்றி கொள்ளும் படைகள் நடத்தி
வேந்தர் தம்முட் பெரும்புகழ் எய்தி
ஒற்றை வெள்ளைக் கவிதை உயத்தே
உலகம் அஞ்சிப் பணிந்திட வாழ்வோம்;
சுற்று தேங்கமழ் மென்மலர் மாலை
தோளின் மீதுருப் பெண்கள் குலாவச்
சற்றும் நெஞ்சம் கவலுத லின்றித்
தரணி மீதில் மதுவுண்டு வாழ்வோம். 3

யோகி

வெற்றி ஐந்து புலன்மிசைக் கொள்வோம்;
வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும்;
ஒற்றை வெள்ளைக் கவிதைமெய்ஞ் ஞானம்
உண்மை வேந்தர் சிவநிலை கண்டார்;
மற்றவர் தம்முட் சீர்பெற வாழ்வோம்;
வண்ம லர்நறு மாலை தெளிவாம்!
சுற்றி மார்பில் அருள்மது வுண்டே
தோகை சக்தியொ டின்புற்று வாழ்வோம். 4

போகி

நல்ல கீதத் தொழிலுணர் பாணர்
நடனம் வல்ல நகைமுக மாதர்
அல்லல் போக இருடன் கூடி
ஆடி யாடிக் களித்தின்பங் கொள்வோம்;
சொல்ல நாவு கனியுத டாநற்
சுதியிலொத்துத் துணையொடும் பாடி
புல்லும் மார்பினோ டாடிக் குதிக்கும்
போகம் போலொரு போகமிங் குண்டோ? 5

யோகி

நல்ல கீதம்,சிவத்தனி நாதம்,
நடன ஞானியர் சிற்கபை யாட்டம்;
அல்லல் போக இவருடன் சேர்ந்தே
ஆடி யாடிப் பெருங்களி கொள்வோம்;
சொல்ல நாவில் இனிக்கு தடா!வான்
சுழலும் அண்டத் திரளின் சுதியில்
செல்லும் பண்ணொடு சிற்சபை யாடும்
செல்வம் போலொரு செல்வமிங் குண்டோ? 6

ஞானி

மாத ரோடு மயங்கிக் களித்தும்
மதுர நல்லிசை பாடிக் குதித்தும்
காதல் செய்தும் பெறும்பல இன்பம்,
களில் இன்பம் கலைகளில் இன்பம்,
பூத லத்தினை ஆள்வதில் இன்பம்
பொய்மை யல்ல இவ்வின்பங்க ளெல்லாம்
யாதுஞ் சக்தி இயல்பெனக் கண்டோம்
இனைய துய்ப்பம் இதயம் மகிழ்ந்தே. 7

இன்பந் துன்பம் அனைத்தும் கலந்தே
இச்ச கத்தின் இயல்வலி யாகி
முன்பு பின்பல தாகியெந் நாளும்
மூண்டு செல்லும் பராசக்தி யோட
அன்பில் ஒன்றிப் பெருஞ்சிவ யோகத்
தறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார்,
துன்பு நேரினும் இன்பெனக் கொள்வார்
துய்ப்பர் இன்பம் மிகச்சுவை கொண்டே. 8

இச்சகத்தோர் பொருளையுந் தீரர்
இல்லை யென்று வருந்துவதில்லை;
நச்சி நச்சி உளத்தொண்டு கொண்டு
நானிலத்தின்பம் நாடுவதில்லை;
பிச்சை கேட்பது மில்லை;இன்பத்தில்
பித்துக் கொண்டு மயங்குவ தில்லை;
துச்ச மென்று சுகங்களைக் கொள்ளச்
சொல்லு மூடர்சொற் கேட்பதும் இல்லை. 9

தீது நேர்ந்திடின் அஞ்சுவ தில்லை.
தேறு நெஞ்சினொ டேசிவங் கண்டோர்;
மாதர் இன்பம் முதலிய வெல்லாம்
வைய கத்துச் சிவன் வைத்த வென்றே
ஆத ரித்தவை முற்றிலும் கொள்வார்;
அங்கும் இங்குமொன் றாமெனத் தேர்வார்;
யாது மெங்கள் சிவன்திருக் கேளி;
இன்பம் யாவும் அவனுடை இன்பம். 10

வேத மந்திர நாதம் ஒருபால்
வேயி னின்குழல் மெல்லொலி ஓர்பால்,
காதல் மாதரொ டாடல் ஒருபால்,
களவெம் போரிடை வென்றிடல் ஓர்பால்,
போத நல்வெறி துய்த்திடல் ஓர்பால்,
பொலியுங் கள்வெறி துய்த்தல்மற் றோர்பால்;
ஏதெ லாம்நமக் கின்புற நிற்கும்
எங்கள் தாய்அருட் பாலது வன்றே. 11

சங்கீர்த்தனம் (மூவரும் சேர்ந்து பாடுதல்)

மதுநமக்கு,மதுநமக்கு,மதுநமக்கு விண்ணெலாம்,
மதுரமிக்க ஹரிநமக்கு,மதுவெனக் கதித்தலால்;
மதுநமக்கு மதியுநாளும்,மதுநமக்கு வானமீன்,
மதுநமக்கு,மண்ணுநீரும் மதுநமக்கு,மலையெலாம்,
மதுநமக்கொர் தோல்விவெற்றி,மதுநமக்கு வினையெலாம்,

மதுநமக்கு,மாதரின்பம்,மதுநமக்கு மதுவகை;
மதுநமக்கு,மதுநமக்கு,மதுமனத்தொடாவியும்
மதுரமிக்க சிவநமக்கு மதுவெனக் கதித்தலால்.

15. சந்திரமதி

ராகம்-ஆனந்த பைரவி  தாளம்-ஆதி

பச்சைக் குழந்தை யடி!-கண்ணிற்
பாவை யடி சந்திரமதி!
இச்சைக் கினிய மது!;-என்தன்
இருவிழிக்குத் தே நிலவு;
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே-நல்ல
நாகமணி யுள்ளதென்பார்;
துச்சப்படு நெஞ்சி லே-நின்தன்
சோதி வளரு தடீ! 

பேச்சுக் கிடமே தடி!-நீ
பெண்குலத்தின் வெற்றி யடி!
ஆச்சர்ய மாயை யடி!-என்தன்
ஆசைக் குமாரி யடி!
நீச்சு நிலை கடந்த-வெள்ள
நீருக் குள்ளே வீழ்ந்தவர்போல்,
தீச்சுடரை வென்ற வொளி-கொண்ட
தேவி!நினை விழந்தேனடி! 

நீலக் கடலினிலே-நின்தன்
நீண்ட குழல் தோன்றுதடி!
கோல மதியினி லே-நின்தன்
குளிர்ந்த முகங் காணுதடி!
ஞால வெளியினி லே-நின்தன்
ஞான வொளி வீசுதடி!
கால நடையினி லே-நின்தன்
காதல் விளங்குதடி!   (பச்சைக் குழந்தை யடி!)

4. சான்றோர்

1. தாயுமானவர் வாழ்த்து

என்றும் இருக்க உளங்கொண்டாய்!
இன்பத் தமிழுக் கிலக்கியமாய்,
இன்றும் இருத்தல் செய்கின்றாய்!
இறவாய் தமிழோ டிருப்பாய் நீ!
ஒன்று பொருள ஃதின்பமென
உணர்ந்தாய், தாயு மானவனே!
நின்ற பரத்து மாத்திரமோ?
நில்லா இகத்தும் நிற்பாய் நீ!

2. நிவேதிதா

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
டாம்பயிர்க்கு மழையாய்,இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.

3. அபேதாநந்தா

சுருதியும் அரிய உபநிட தத்ன்
தொகுதியும் பழுதற உணர்ந்தோன்.
கருதிடற் கரிய பிரமநன் னிலையைக்
கண்டுபே ரொளியிடைக் களித்தோன்,
அரிதினிற் காணும் இயல்பொடு புவியின்
அப்புறத் திருந்துநண் பகலில்
பரிதியி னொளியும் சென்றிடா நாட்டில்
மெய்யொளி பரப்பிடச் சென்றோன். 1

வேறு

ஒன்றேமெய்ப் பொருளாகும்;உயிர்களெலாம்
அதன்வடிவாம்,ஓருங்காலை;
என்தேவன் உன்தேவன் என்றுலகர்
பகைப்பதெலாம் இழிவாம் என்று,
நன்றேயிங் கறிவுறுத்தும் பரமகுரு
ஞானமெனும் பயிரை நச்சித்
தின்றேபா ழாக்கிடுமைம் புலன்களெனும்
விலங்கின த்தைச் செகுத்த வீரன். 2

வேறு

வானந் தம்புகழ் மேவி விளங்கிய
மாசி லாதி குரவணச் சங்கரன்
ஞானந் தங்குமிந் நாட்டினைப் பின்னரும்
நண்ணி னானெனத் தேசுறு மவ்விவே-
கானந் தபெருஞ் சோதி மறைந்தபின்
அவனி ழைத்த பெருந்தொழி லாற்றியே
ஊனந் தங்கிய மானிடர் தீதெலாம்
ஒழிக்கு மாறு பிறந்த பெருந்தவன். 3

வேறு

தூய அபே தாநந்தனெனும் பெயர்கொண்
டொளிர்தருமிச் சுத்த ஞானி,
நேயமுடன் இந்நகரில் திருப்பாதஞ்
சாத்தியருள் நெஞ்சிற் கொண்டு,
மாயமெலாம் நீங்கியினி தெம்மவர்நன்
னெறிசாரும் வண்ணம் ஞானம்
தோயநனி பொழிந்திடமோர் முகில்போன்றான்
இவன்பதங்கள் துதிக்கின் றோமே 4

4. ஓவியர்மணி இரவிவர்மா

சந்திர னொளியை ஈசன் சமைத்து, அது பருகவென்றே
வந்திடு சாத கப்புள் வகுத்தனன்;அமுதண் டாக்கிப்
பந்தியிற் பருக வென்றே படைத்தனன் அமரர் தம்மை;
இந்திரன் மாண்புக் கென்ன இயற்றினன் வெளிய யானை. 1

மலரினில் நீல வானில் மாதரார் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன் இயற்றினான்,சீர்த்தி இந்த
உலகினில் எங்கும் வீசி,ஓங்கிய இரவி வர்மன்
அலகிலா அறிவுக் கண்ணால் அனைத்தையும் நுகருமாறே. 2

மன்னர்மா ளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம்
உன்னருந் தேசு வீசி உளத்தினைக் களிக்கச் செய்வான்
நன்னரோ வியங்கள் தீட்டி நல்கிய பெருமான்,இந்நாள்
பொன்னணி யுலகு சென்றான் புவிப்புகழ் போது மென்பான். 3

அரம்பைஊர் வசிபோ லுள்ள அமரமெல் லியலார் செவ்வி
திறம்பட வகுத்த எம்மான்!செய்தொழில் ஒப்பு நோக்க
விரும்பிய கொல்லாம் இன்று விண்ணுல கடைந்து விட்டாய்?
அரம்பையர் நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம். 4

காலவான் போக்கில் என்றும் கழிகிலாப் பெருமை கொண்ட
கோலவான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர் தாமும்,
சீலவாழ் வகற்றி ஓர்நாட் செத்திடல் உறுதி யாயின்
ஞாலவாழ் வினது மாயம் நவின்றிடற் கரிய தன்றோ? 5

5. சுப்பராம தீட்சிதர்

அகவல்

கவிதையும் அருஞ்சுவைக் கான நூலும்
புவியினர் வியக்கும் ஓவியப் பொற்பும்
மற்றுள பெருந்தொழில் வகைகளிற் பலவும்
வெற்றிகொண் டிலங்கிய மேன்மையார் பரத
நாட்டினில் இந்நாள் அன்னியர் நலிப்ப.

ஈட்டிய செல்வம் இறந்தமை யானனும்
ஆண்டகை யொடுபுகழ் அழிந்தமை யானும்
மாண்டன பழம்பெவரு மாட்சியார் தொழிலெலாம்;
தேவர்கள் வாழ்ந்த சீர்வளர் பூமியில்
மேவிய குரக்கர் விளங்குதல் போல.

நேரிலாப் பெரியோர் நிலவிய நாட்டில்
சீரிலாப் புல்லர் செறிந்துநிற் கின்றார்;
இவரிடை
சுரத்திடை இன்னீர்ச் சுனையது போன்றும்,
அரக்கர்தங் குலத்திடை வீடண னாகவும்,

சேற்றிடைத் தாமரைச் செம்மலர் போன்றும்,
போற்றதற் குரிய புனிதவான் குலத்தில்
நாரத முனிவன் நமர்மிசை யரளால்
பாரத நாட்டில் பழமாண் புறுகென
மீட்டுமோர் முறைஇவன் மேவினன் என்ன,

நாட்டுநற் சீர்த்தி நலனுயர் பெருமான்
தோமறு சுப்ப ராமனற் பெயரோன்
நாமகள் புளகுற நம்மிடை வாழ்ந்தான்
இன்னான் தானும் எமையகன் றேகினன்;
என்னே நம்மவர் இயற்றிய பாவம்!

இனியிவ னனையரை எந்நாட் காண்போம்?
கனியறு மரமெனக் கடைநிலை யுற்றோம்
அந்தோ மறலிநம் அமுனைக் கவர்ந்தான்!
நொந்தோ பயனிலை நுவல யா துளதே?

விருத்தம்

கன்னனொடு கொடைபோயிற்று;உயர்கம்ப
நாடனுடன் கவிதை போயிற்று
உன்னரிய புகழ்ப்பார்த்த னொடுவீரம்
அகன்றதென உரைப்பர் ஆன்றோர்;
என்னகநின் றகலாதோன் அருட் சுப்ப
ராமனெனும் இணையி லாவிற்
பன்னனொடு சுவைமிகுந்த பண்வளனும்
அகன் றதெனப் பகர லாமே.  1

கலைவிளக்கே!இளசையெனும் சிற்றூரில்
பெருஞ்சோதி கதிக்கத் தோன்றும்
மலைவிளக்கே!எம்மனையர் மனவிருளை
மாற்றுதற்கு வந்த ஞான
நிலைவிளக்கே!நினைப்பிரிந்த இசைத்தேவி
நெய்யகல நின்ற தட்டின்
உலைவிளக்கே யெனத்தளரும்;அந்தோ!நீ
அகன் றதுயர் உரைக்ற் பாற்றோ? 2

மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்
தங்களையும் வணங்க லாதேன்
தன்னனைய புகழுடையாய்!நினைக்கண்ட
பொழுதுதலை தாழ்ந்து வந்தேன்;
உன்னருமைச் சொற்களையே தெய்விகமாம்
எனக்கருதி வந்தேன்;அந்தோ!
இன்னமொரு காலிளசைக் கேகிடின்,இவ்
வெளியன்மனம் என்ப டாதோ?  3

6. மகாமகோபாத்யாயர்

செம்பரிதி ஒளிபெற்றான்;பைந்நறவு
சுவைபெற்றுத் திகழ்ந்தது;ஆங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று
எவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா
தப்புலவன் குறைவில் கீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல்,இதற்கென்கொல்
பேருவகை படைக் கின்றீரே?

அன்னியர்கள் தமிழ்ச்செல்வி யறியாதார்
இன்றெம்மை ஆள்வோ ரேனும்,
பன்னியசீர் மகாமகோ பாத்தியா
யப்பதவி பரிவுன் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ்செய் வாரேல்,
முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன்பெருமை மொழிய லாமோ?

நிதிய றியோம்,இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறி யோம்’ என்றுமனம் வருந்தற்க;
குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய்,அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே.

7. வெங்கடேசு ரெட்டப்ப பூபதி

1 (ஸ்ரீ எட்டயபுரம் ராஜ ராஜேந்த்ர மாகராஜ வெங்கடேசு ரெட்பப்ப பூபதி அவர்கள் சமூகத்துக்கு கவிராஜ ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதி எழுதும்
சீட்டுக் கவிகள்.)

பாரிவாழ்ந் திருந்த சீர்த்திப் பழந்தமிழ் நாட்டின் கண்ணே
ஆரிய!நீயிந் நாளில் அரசுவீற் றிருக்கின் றாயால்;
காரியங் கருதி நின்னைக் கவிஞர்தாங் காணவேண்டின்
நேரிலப் போதே யெய்தி வழிபட நினைகி லேயோ? 1

விண்ணள வுயர்ந்த கீர்த்தி வெங்கடேசு ரெட்டமன்னா!
பண்ணள வுயர்ந்த தென்பணி பாவள வுயர்ந்த தென்பா
எண்ணள வுயர்ந்த வெண்ணில் இரும்புகழ்க் கவிஞர் வந்தால்,
அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகி லாயோ? 2

கல்வியே தொழிலாக் கொண்டாய்!கவிதையே தெய்வமாக
அல்லுநன் பகலும் போற்றி அதைவழி பட்டுநின்றாய்!
சொல்லிலே நிகரி லாத புலவர்நின் சூழ லுற்றால்
எல்லினைக் காணப் பாயும் இடபம்போல் முற்ப டாயோ? 3

-சுப்பிரமணிய பாரதி
2.5.1919, எட்டயபுரம்

2 (ஸ்ரீ எட்டயபுரம் மகாராஜ ராஜேந்த்ர ஸ்ரீ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி அவர்கள் சமூகத்துக்கு கவிராஜ ஸ்ரீ.சி.சுப்பிரமணிய பாரதி எழுதும் ஓலைத் தூக்கு)

ராஜமகா ராஜேந்த்ர ராஜகுல
சேகரன் ஸ்ரீ ராஜ ராஜன்,
தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்க
டேசுரெட்ட சிங்கன் காண்க.
வாசமிகு துழாய்த் தாரான் கண்ணனடி
மறவாத மனத்தான்,சக்தி
தாசனெனப் புகழ்வளரும் சுப்ரமண்ய
பாரதிதான் சமைத்த தூக்கு.  1

மன்னவனே!தமிழ்நாட்டில் தமிழறிந்த
மன்னரிலை யென்று மாந்தர்
இன்ன லுறப் புகன்றவசை நீமகுடம்
புனைந்த பொழு திரிந்த தன்றே!
சொன்னலமும் பொருணலமும் சுவைகண்டு,
சுவைகண்டு,துய்த்தத் துய்த்துக்
கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல்
தமிழ்ச்சுவைநீ களித்தா யன்றே!  2

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே!
சுவைபுதிது,பொருள்புதிது,வளம்புதிது,
சொற்புதிது சோதி மிக்க
நவகவிதை,எந்நாளும் அழியாத
மகாகவிதை என்று நன்கு.  3

பிரான் ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர்
புலவோரும் பிறரு மாங்கே
விராவுபுக ழாங்கிலத்தீங் கவியரசர்
தாமுமிக வியந்து கூறிப்
பராவி யென்தன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப்
போற்றுகின்றார்;பாரோ ரேத்துந்
தராதிபனே!இளசை வெங்க டேசுரெட்டா!
நின்பால்அத் தமிழ் கொணர்ந்தேன். 4

வேறு

வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென்
கவிதையினை வேந்த னே!நின்
நயப்படுசந் நிதிதனிலே நான்பாட நீகேட்டு
நன்கு போற்றி,
ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள் பொற்பைகள்
ஜதிபல் லக்கு,
வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப் பல்லூழி
வாழ்க நீயே!

-சுப்பிரமணிய பாரதி
2.5.1919, எட்டயபுரம்

8. ஹிந்து மதாபிமான சங்கத்தார்
 
மண்ணுலகின் மீதினிலே எக்காலும்
அமரரைப் போல் மடிவில் லாமல்
திண்ணமுற வாழ்ந்திடலாம்,அதற்குரிய
உபாயமிங்கு செப்பக் கேளீர்!
நண்ணியெலாப் பொருளினிலும் உட்பொருளாய்ச்
செய்கையெலாம் நடத்தும் வீறாய்த்
திண்ணியநல் லறிவொளியாய்த் திகழுமொரு
பரம்பொருளை அகத்தில் சேர்த்து, 1

செய்கையெலாம் அதன்செய்கை,நினைவெல்லாம்
அதன்நினைவு,தெய்வ மேநாம்
உய்கையுற நாமாகி நமக்குள்ளே
யொளிர்வ தென உறுதி கொண்டு,
யொய்,கயமை,சினம்,சோம்பர்,கவலை,மயல்,
வீண் விருப்பம்,புழுக்கம்,அச்சம்,
ஐயமெனும் பேயையெலாம் ஞானமெனும்
வாளாலே அறுத்தத் தள்ளி.  2

எப்போதும் ஆனந்தச் சுடர் நிலையில்
வாழ்ந்துயிர்கட் கினிது செய்வோர்,
தப்பாதே இவ்வுலகில் அமரநிலை
பெற்றிடுவார்;சதுர்வே தங்கள்
மெய்ப்பான சாத்திரங்கள் எனுமிவற்றால்
இவ்வுண்மை விளங்கக் கூறும்
துப்பான மதத்தினையே ஹிந்துமத
மெனப்புவியோர் சொல்லு வாரே.  3

அருமையுறு பொருளிலெலாம் மிக அரிதாய்த்
தனைச்சாரும் அன்பர்க் கிங்கு
பெருமையுறு வாழ்வளிக்கும் நற்றுணையாம்
ஹிந்துமதப் பெற்றி தன்னைக்
கருதியதன் சொற்படி யிங் கொழுகாத
மக்களெலாம் கவலை யென்னும்
ஒருநரகக் குழியதனில் வீழ்ந்துதவித்
தழிகின்றார் ஓய்வி லாமே.  4

இத்தகைய துயர்நீக்கிக் கிருதயுகந்
தனையுலகில் இசைக்க வல்ல,
புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதனைப்
பாரறியப் புகட்டும் வண்ணம்;
தத்துபுகழ் வளப்பாண்டி நாட்டினிற்
காரைக்குடியூர் தனிலே சால
உத்தமராந் தனவணிகர் குலத்துதித்த
இளைஞர்பலர்,ஊக்கம் மிக்கார்.  5

உண்மையே தாரகமென் றுணர்ந்திட்டார்,
அன்பொன்றே உறுதி யென்பார்,
வண்மையே குலதர்ம மெனக்கொண்டார்
தொண்டொன்றே வழியாக் கண்டார்;
ஒண்மையுயர் கடவுளிடத் தன்புடையார்;
அவ்வன்பின் ஊற்றத்தாலே
திண்மையுறும் ஹிந்துமத அபிமான
சங்கமொன்று சேர்த்திட்டாரே.  6

பலநூல்கள் பதிப்பித்தும்,பல பெரியோர்
பிரசங்கம் பண்ணு வித்தும்
நலமுடைய கலாசாலை புத்தகசா
லைபலவும் நாட்டி யுந்தம்
குலமுயர நகருயர நாடுயர
உழைக்கின்றார்,கோடி மேன்மை
நிலவுறஇச் சங்கத்தார் பல்லூழி
வாழ்ந்தொளிர்க,நிலத்தின் மீதே!  7

9. வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு

ஆசிரியப்பா
வருக செல்வ!வாழ்கமன் நீயே!
வடமேற் றிசைக்கண் மாபெருந் தொலையினோர்
பொற்சிறு தீவகப் புரவலன் பயந்த
நற்றவக் புதல்வ! நல்வர வுனதே!
மேதக நீயும்நின் காதலங் கிளியும் 5

என்றனைக் காணுமா றித்தனை காதம்
வந்தனிர்!வாழ்திர்!என் மனம்மகிழ்ந் ததுவே
செல்வகேள்! என்னரும் சேய்களை நின்னுடை
முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்
நெஞ்செலாம் புண்ணாய் நின்றனன் யாஅன். 10

ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்
ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில.
போனதை எண்ணிப் புலம்பியிங் கென்பயன்?
மற்றுன் நாட்டினோர் வந்ததன் பின்னர்,
அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின. 15

போர்த்தொகை அடங்கிஎன் ஏழைப் புத்திரர்
அமைதிபெற் றுய்வ ராயினர். என்வே,
பாரத தேவி பழமைபோல் திருவருள்
பொழிகர லுற்றனள்,பொருள்செயற் குரிய
தொழிற்கணம் பலப்பல தோன்றின,பின்னும் 20

கொடுமதப் பாவிகள் குறும்பெலாம் அகன்றன.
யாற்றினிற் பெண்களை எறிவதூஉம்,இரதத்
துருளையிற் பாலரை உயிருடன் மாய்த்தலும்,
பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்,
எனப்பல தீமைகள் இறந்துபட் டனவால். 25

மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான
ஒண்பெருங் கதிரின் ஓரிரு கிரணம் என்
பாலரின் மீது படுதலுற் றனவே.
ஆயினும் என்னை?ஆயிரங் கோடி
தொல்லைகள் இன்னும் தொலைந்தன வில்லை. 30

நல்குர வாதி நவமாம் தொல்லைகள்
ஆயிரம் எனைவந் தடைந்துள நுமரால்
எனினுமிங் கிவையெலாம் இறைவன் அருளால்
நீங்குவ வன்றி நிலைப்பன வல்ல.
நோயெலாந் தவிர்ப்பான் நுமரே எனக்கு. 35

மருத்துவ ராக வந்தனர் என்பதூஉம்
பொய்யிலை.ஆதலிற் புகழ்பெறும் ஆங்கில
நாட்டின ரென்றும் நலமுற வாழ்கவே!
என்னருஞ் சேய்களும் இவரும்நட் பெய்தி
இருபான் மையர்க்கும் இன்னலொன் றின்றி 40

ஒருவரை யொருவர் ஒறுத்திட லிலாது,
செவ்விதின் வாழ்க!அச் சீர்மிகு சாதியின்
இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க!
வாழ்க நீ! வாழ்கநின் மனமெனும் இனிய
வேரிமென் மலர்வாழ் மேரிநல் லன்னம்! 45
மற்றென் சேய்கள் வாழிய! வாழிய!

 
மேலும் பல்வகைப் பாடல்கள் »
temple news

நீதி ஜனவரி 21,2012

1. புதிய ஆத்திசூடி காப்பு-பரம்பொருள் வாழ்த்து ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்துமோனத் திருக்கும் முழுவெண் ... மேலும்
 
temple news

சுய சரிதை ஜனவரி 21,2012

1. கனவு பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்மெல்லப் போனதுவே.-பட்டினத்துப் பிள்ளை முன்னுரை வாழ்வு ... மேலும்
 
temple news

வசன கவிதை ஜனவரி 21,2012

1. காட்சி முதற்கிளை : இன்பம் 1. இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து;காற்றும் இனிது. தீ இனிது. நீர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar