பதிவு செய்த நாள்
02
ஜூலை
2018
11:07
கோவை:திருக்கோவில் பக்தர்கள் பொதுநலச்சங்கம் மற்றும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோவில் பக்தர் பேரவை சார்பில், 200 வது மாத உழவாரப்பணி விழா முன்னிட்டு, 12 ராசிகளுக்கு கோமாதா பூஜை, பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லுாரி மைதானத்தில், நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று காலை, 5:30 மணிக்கு, கல்லுாரி வளாகத்தில் கணபதி ேஹாமம் நடந்தது. பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோவிலில், பட்டீஸ்வரர், அம்பாள் மற்றும் பாலதண்டபாணி சுவாமிகளுக்கு அபிஷேக, அலங்கார பூஜையும், 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது. கல்லுாரி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், மடத்துக்கு சொந்தமான பசுவுக்கு முதலில் பூஜை செய்யப்பட்டு, பின், மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த, பசுக்களுக்கு பொதுமக்கள் தீவனங்கள் வழங்கி, பூஜை செய்தனர். பட்டீஸ்வரர் கோவில் ஓதுவார் ஞானமூர்த்தி தலைமையில், பூஜைகள் செய்யப்பட்டன. பேரூராதீனம் இளைய சந்நிதானம் சுவாமி வேதாந்தானந்தா, திருக்கோவில் பக்தர் பேரவை நிறுவனர் சண்முகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.