பந்தலுார்: பந்தலுாரில் பழமை வாய்ந்த முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் புனரமைப்பு பணிகள் துவக்கப்பட உள்ளது.இதற்காக கோவில் கட்டுமானத்தில் உள்ள பிரச்னை; மேற்கொள்ள வேண்டிய பரிகாரம்; கிராம மக்கள் நலன்; பிரச்னைகள் குறித்தும், கோவில் வரலாறு குறித்தும் தெரிந்துக்கொள்ளும் வகையில் தாம்பூல பிரசன்ன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.வயநாடு மாவட்டத்தை சேர்ந்த சனோஜ்பணிக்கர் பங்கேற்று, வெற்றிலையில் பிரசன்னம் பார்த்து, நிறை, குறைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பரிகாரங்கள் குறித்து விளக்கினார்.மேலும், அவிநாசியை சேர்ந்த முத்துவிஸ்வகார்மா ஸ்தபதி கோவில் கட்டுமானம் குறித்து விளக்கினார். பணிக்கர் தெரிவித்த பரிகாரங்களை நிறைவு செய்த பின்னர், கோவில் கட்டுமான பணிகள் துவக்க முடிவு செய்யப்பட்டது.நிகழ்ச்சியில், கோவில் கமிட்டிதலைவர் ஹரிராமன் தலைமை வகித்தார். செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சிவராஜ் முன்னிலை வகித்தனர். கோவில் குருக்கள் ரமேஷ், பாபு, மகேந்திரன், ஜெகன் உள்ளிட்ட கோவில் கமிட்டி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.