சாயல்குடி, சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியில் பழமையும், புராதன சிறப்பையும் பெற்ற உமையநாயகி அம்மன் கோயில் உள்ளது.இங்குள்ள மூலவர் உமையநாயகி அம்மன் மேற்கூரை இன்றி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆடி முழுவதும் மூலஸ்தானம் மற்றும் பிரகார மண்டபம் அடைக்கப்படுவது வழக்கமாகநிகழ்ந்து வருகிறது.
ஆவணி முதல் நாளன்று நடக்கும் அம்மனின் முதல் பார்வை நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக கூடுவார்கள். கோயில் நிர்வாகிகள் திக் விஜயன், ராஜாராம், செந்துார் பாண்டியன் கூறியதாவது:ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்நிகழ்வு கோயிலில் நிகழ்த்தப்படுகிறது.ஆடி என்றாலே அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், கூழ் காய்ச்சி ஊற்றுதல், முளைப்பாரி உள்ளிட்டநிகழ்ச்சி நடக்கும். ஆனால் அதற்கு விதிவிலக்காக, இங்குள்ள மூலவர் நடைசாத்தப்படுகிறது. உமையநாயகி அம்மன் இங்கிருந்து ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடுவதற்காக செல்வதாக ஐதீகம் (சம்பிரதாயம்) உள்ளது. அதுவரை ஆடி முழுவதும் கோயில் கதவு பூட்டியே வைக்கப்பட்டிருக்கும். காலங்காலமாக நிலவும் நடைமுறையை கடைப்பிடித்து வருவதை பெருமையாக கருதுகிறோம், என்றனர்.