பதிவு செய்த நாள்
18
ஜூலை
2018
12:07
சேலம்: சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கருப்பண்ணன், 38, சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் வரதராஜனிடம் அளித்த புகார் மனு: சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள, 438 பி கடை எண்ணில், சுப்ரமணி வாடகைதாரராக உள்ளார். மாதம், 2,020 ரூபாய் செலுத்த வேண்டும். 2016 ஜன., 1 முதல், 2017 ஜூன், 30 வரை, வாடகையை, கோவில் செயல் அலுவலர் மாலாவிடம் வழங்க முன்வந்த நிலையில், வாங்க மறுத்துவிட்டார். கடந்த, 2017 மே, 16, 25ல், வாடகை வங்கி வரைவோலையை, பதிவு தபாலில் அனுப்பிய நிலையில், வாங்க மறுத்துவிட்டார். வாடகை பணம், 24 ஆயிரத்து, 240 ரூபாயை பெற மறுத்து, கோவில் நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளார். அதேபோல், மேலும், 11 கடைகளின் உரிமையாளர்கள், வாடகை பணத்தை வாங்க மறுத்தார். அதனால், மூன்று லட்சத்து, 45 ஆயிரத்து, 480 ரூபாய், வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளார். அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து, இழப்பு பணத்தை, அவரிடம் வசூலிக்க வேண்டும். மேலும், கடைக்காரர்களிடம், கடையை காலி செய்யாமல் இருக்க லஞ்சம் பெற்றுள்ளார். அதற்கான வீடியோ ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ள அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் நகல்கள், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், சேலம் மாவட்ட உதவி கமிஷனருக்கு அனுப்பியுள்ளனர். கோவில் செயல் அலுவலர் மாலா கூறுகையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கடைகள் காலி செய்யப்பட்டுள்ளன. என் மீது களங்கம் ஏற்படுத்த, தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். இதை, சட்டப்படி சந்திப்பேன், என்றார்.