பதிவு செய்த நாள்
18
ஜூலை
2018
12:07
அரூர்: அரூர் பகுதியில், ஆடிப் பண்டிகையை முன்னிட்டு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, தேங்காய் சுட்டு கொண்டாடினர். தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று, ஆடிப்பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. புதுமண தம்பதிகள் மற்றும் பொதுமக்கள், தீர்த்தமலை, அனுமந்தீர்த்தம் உள்ளிட்ட, கோவில்களுக்கு சென்று, நீராடினர். மேலும், சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன், அழிஞ்சி மரக் குச்சியில், தேங்காயை கோர்த்து, பாசிப்பருப்பு, அவல், வெல்லம் உள்ளிட்டவைகளை, சேர்த்து தீயில் சுட்டனர். பின், அவற்றை சுவாமிக்கு படைத்து வழிபட்ட பின், நண்பர்களுக்கு வழங்கினர்.
* நேற்று, ஆடி மாதம் பிறந்ததையொட்டி, கிருஷ்ணகிரி பெரியமாரியம்மன் கோவில், பழையபேட்டை அங்காளம்மன் கோவில், கருமாரியம்மன் கோவில், முண்டகன்னி அம்மன் கோவில் போன்ற அம்மன் கோவில்களிலும், பர்கூரில் உள்ள காளியம்மன் கோவில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில், நேற்று காலையில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை போன்றவை நடந்தது. கிருஷ்ணகிரி வெங்கடாபுரத்தில் உள்ள முண்டகன்னி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து,மேள, தாளம் முழங்க, நகர் வலமும் வந்து, பக்தர்களுக்கு, அம்மன் அருள்பாலித்தார்.