பதிவு செய்த நாள்
18
ஜூலை
2018
12:07
ஈரோடு: தட்சிணாயன புண்ணிய காலமான, ஆடி மாதம் நேற்று பிறந்தது. ஈரோடு, கருங்கல்பாளையம், காவிரிக்கரை, சுந்தரவல்லி உடனுறை சோழீஸ்வரர் கோவிலில், வில்வ லிங்கம் மற்றும் மூலவருக்கு, 1,008 குடம் தீர்த்த நீரில் அபி?ஷகம் நடந்தது. முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து, கோவில் வரை, வரிசையாக நின்ற நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஆற்றிலிருந்து ஒருவர் கைமாற்றி ஒருவராக, தீர்த்தம் எடுத்துக் கொடுக்க, சிவாச்சாரியார்கள் அபி?ஷகம் செய்தனர். அதைத் தொடர்ந்து, பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபி?ஷகம், மஹா தீபாராதனை நடந்தது. இதேபோல் மாநகரில் காவிரிக்கரை கன்னிமார் கருப்பண்ணசாமி கோவில், பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், வலசு மாரியம்மன், சத்திரம் மாரியம்மன், கருங்கல்பாளையம் மாரியம்மன், கொங்கலம்மன், கள்ளுக்கடை மேடு காளியம்மன், திருவள்ளுவர் வீதி பொட்டு அம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனால், அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
கூடுதுறை வெறிச்: பவானி சங்கமேஸ்வரர் கோவில், தமிழகத்தின் பிரசித்தி பெற்ற, பரிகார தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் ஆடி மாத பிறப்பான நேற்று, பக்தர்கள் கூட்டம், குறைவாகவே காணப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து, காவிரி ஆற்றில், குடிநீருக்காக விநாடிக்கு, 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலேயே வந்த பக்தர்கள், ஆற்றில் புனித நீராடினர். சங்கமேஸ்வரர், வேதநாயகி, பெருமாள் சன்னதிகளில் தரிசனம் செய்து, வழிபட்டனர். அதேபோல், புதுமண தம்பதியரை காண்பதும் அரிதாக இருந்தது. வரும் ஆடி அமாவாசை, ஆடி, 18 நாட்களில், கூட்டம் அதிக அளவில் வருமென, பக்தர்கள் கூறினர்.
கோபி கோவில்களில் சிறப்பு வழிபாடு: பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில், வழக்கத்தை விட, அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்தனர். இதேபோல், பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில், கோபி சாரதா மாரியம்மன் கோவில்களில், பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. சிறப்பு அபி?ஷகம், தீபாராதனை நடந்தது.