கவுமாரியம்மன் கோயில் ஆனி திருவிழா : அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2018 10:07
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி திருவிழா நிறைவு நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவுக்காக ஜூலை 3ல் கம்பம் நடுதல் மற்றும் சாட்டுதல் நடந்தது.
ஜூலை 9ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. பத்துநாட்கள் நடந்த விழாவில் தினமும் திருக்கண் அபிேஷகம் மற்றும் மண்டகபடிதாரர்கள் நடத்திய நிகழ்ச்சியில் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் உலா வந்தார்.
நிறைவாக 10ம் நாளான நேற்று தென்மாவட்டங்களில் பல பகுதிகளில் இருந்து வந்து அதிகாலை 2:00 மணி முதலே ஆயிரக்கணக்கன பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். சிதம்பரசூரியநாராயணன் நினைவாக தென்கரை வர்த்தக சங்க தலைவர் சிதம்பரசூரியவேலு, குடும்பத்தினர் திருக்கண் அபிேஷகம் நடத்தினர். அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பெரியகுளம் நகராட்சி முன்னாள் தலைவர் ஓ.ராஜா தரிசனம் செய்தனர். நகராட்சி சுகாதாரத்துறை மேற்பார்வையில், பணியாளர்கள் துாய்மைப்பணி செய்தனர். டி.எஸ்.பி., ஆறுமுகம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை செயல்அலுவலர் அண்ணாதுரை, மண்டகபடிதாரர்கள் மற்றும் பூஜாரிகள் செய்தனர்.