உளுந்துார்பேட்டை: திருவெண்ணெய்நல்லுார் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதி நட்சத்திரத்தையொட்டி சுந்தரர் குரு பூஜை நடந்தது. திருவெண்ணெய்நல்லுார் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதி நட்சத்திரத்தையொட்டி சுந்தரர் குரு பூஜை மற்றும் அன்னதான விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 8 :00 மணிக்கு சுந்தரர் திருமண கோலத்தில் வீற்றியிருக்கும் காட்சியும், காலை 9:00 மணிக்கு திருமணம் நடக்கும் வேளையில், சிவபெருமான் முதிய அந்தணராக வடிவெடுத்து, சுந்தரர் தனக்கு அடிமை என சாசனத்தை காண்பிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் , காலை 10:00 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு, பகல் 12:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு 63 நயன்மார்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் சுந்தரருக்கு குரு பூஜை நடந்தது. பகல் 12:00 மணிக்கு அன்னம் தயார் செய்து அன்னத்தால் லிங்கம் அமைத்து, மகேஸ்வரர் பூஜை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு அன்னதான விழா நடந்தது. பிற்பகல் 3:00 மணிக்கு சுந்தரர் முதலை வாயில் இருந்து பிள்ளை எடுக்கும் ஐதீக நிகழ்ச்சியும், இரவு 9:00 மணிக்கு சுந்தரர் திருவீதியுலாவும் நடந்தது.