கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் 108 பால்குடம், 108 அக்னிசட்டி ஊர்வலம் நடந்தது. கள்ளக்குறிச்சி சிதம்பரம்பிள்ளை தெரு பின்புறம் அமைந்துள்ள பெரியாண்டிச்சி, பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிமாத சிறப்பு வைபவம் கடந்த 15ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் பாரத சொற்பொழிவு நடத்தப்பட்டு, பெரியாண்டிச்சி அம்மன் மற்றும் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கடந்த 21ம் தேதி காலை விக்னேஷ்வர பூஜையுடன் 108 கோமாதா பூஜையும், இரவு சுவாமிகள் வீதியுலா உற்சவமும் நடந்தது. நேற்று காலை 108 பால்குடம், 108 அக்னிசட்டி ஏந்தி பெண் பக்தர்களின் ஊர்வலம் கோமுகி நதிக்கரையிலிருந்து துவங்கி, கோவிலை வந்தடைந்து சுவாமிக்கு அபிஷேகம் நடத்தினர்.தொடர்ந்து காளி கோட்டை இடித்தல், மயான சூறை விடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.