பதிவு செய்த நாள்
26
ஜூலை
2018
01:07
பவானி: பவானி கூடுதுறையில், பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பெண்கள் பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் பின்புறம், கூடுதுறை பகுதியில் தினமும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினரோடு வந்து, இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், பிண்டம் விடுதல் போன்ற காரியங்களை செய்த பின், அங்கு குளித்து விட்டு சுவாமியை வழிபட்டு செல்வர்.
இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து, 80 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பவானி கூடுதுறை இரட்டை விநாயகர் படித்துறையின் மேல் பகுதி வரை, தண்ணீர் பாய்ந்து ஓடி செல்கிறது. இதையடுத்து, பெண்கள் குளிக்கும் இடமான காயத்ரி மண்டபம், கிழக்கு கோபும் பகுதிகளில் குளிக்க தடை விதித்து, கோவில் நிர்வாகத்தினர் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். ஆண்கள் குளிக்கின்ற பகுதியில், பாதுகாப்பு கருதி, சுவுக்கு மரத்தினால் வேலி கட்டப்பட்டு, ஆபத்து இன்றி குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதுறையில் குளித்து கொண்டிருந்த பக்தர் ஒருவர், தண்ணீரில் அடித்த செல்லப்பட்டதாக தகவல் பரவியது. இது குறித்து விசாரித்த போது, அது வதந்தி என தெரியவந்தது. இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில்,‘ மொபைல்போன் மூலமாக, வீண் வதந்தி பரப்பி இருக்கலாம்; அது முற்றிலும் தவறான தகவல். இங்கு, பக்தர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது’ என்றனர்.