பதிவு செய்த நாள்
26
ஜூலை
2018
01:07
கோவை: கோவை, ஈஷா யோகா மையத்தில் நாளை, 27ம் தேதி குரு பவுர்ணமி விழா கோலாகலமாக நடக்கிறது. இது குறித்து, ஈஷா யோகா மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பூமத்திய ரேகைக்கு வடக்கே சூரியனின் ஓட்டம் இருக்கும்போது (தை முதல் ஆனி வரை) உத்திராயணம் என்கிறோம். சூரியனின் ஓட்டம் தெற்கே இருக்கும்போது (ஆடி முதல் மார்கழி வரை) தட்சிணாயணம் என்கிறோம். உத்திராயணத்தில் வரும் முதல் பவுர்ணமி தன்ய பவுர்ணமி; தட்சிணாயணத்தில் வரும் முதல் பவுர்ணமியை குரு பவுர்ணமி என்கிறோ.ம்.
சப்தரிஷிகள் ஏழு பேர் சிவனிடமிருந்து பெற்ற யோகப் பயிற்சிகளை 84 ஆண்டு தொடர்ந்து செய்தனர். அவர்களின் தீவிரத்தை உணர்ந்த சிவன் மனமிரங்கி, தட்சிணாயனத்தின் முதல் பவுர்ணமியன்று தெற்கு நோக்கி அமர்ந்து, அவர்களுக்கு முறையான போதனைகளை வழங்கினார். சிவன், குருவாக அமர்ந்து போதனை வழங்கியதால் அந்த பவுர்ணமி குரு பவுர்ணமி எனப்படுகிறது. உத்திராயணத்தில், ஜனவரியிலிருந்து ஜூன் வரை இந்த பூமி ஆண் தன்மை வாய்ந்ததாக, நிறைவடையும் தன்மை கொண்டதாக இருக்கும். அடுத்த ஆறு மாதங்கள், ஜூலை முதல் டிசம்பர் வரை, தட்சிணாயனத்தில் பெண்தன்மை வாய்ந்ததாக, உள்வாங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. எனவேதான் சிவன், தட்சிணாயனத்தின் முதல் பவுர்ணமியை தேர்ந்தெடுத்து குருவாக அமர்ந்து போதனை வழங்கினார். ஈஷா யோகா மையத்தில், ஒவ்வொரு ஆண்டும், தியானலிங்கத்தில் குரு பவுர்ணமி விழா, குரு பூஜையுடன் கொண்டாடப்படுகிறது. ஆன்மிக சாதகர்கள் அனைவரும், அன்று தங்கள் குருவுக்கு பூஜை செய்து, அடுத்துவரும் ஆறு மாதங்களுக்கு ஆன்மிகப் பயிற்சியை தீவிரமாக செய்து வந்தால், உரிய பலன்கள் கிடைக்கும். ஜூலை 27ல், ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்னிலையில், சத்குருவுடன் குரு பவுர்ணமி கொண்டாட்டத்தில் அனைவரும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு போன்: 8300083111