பேரையூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரையூர் தாலுகா சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு ஏழு நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலையில் ஆக., 8 ஆடி அமாவாசை விழா நடக்கிறது. இதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். கலெக்டர்கள் வீரராகவ ராவ் (மதுரை), சிவஞானம் (விருதுநகர்) முன்னிலை வகித்தனர். கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது: ஆக., 8 முதல் 14 வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படும். அதிகாலை 4:00 முதல் மாலை 4:00 மணி வரை மலை ஏற அனுமதியுண்டு. தீப்பற்றக் கூடிய பொருட்கள், பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள, நெரிசலை ஒழுங்குபடுத்த 6 ஆயிரம் போலீசார் வரவுள்ளனர். வனத்துறை மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் முன்னேற்பாடு பணி செய்யப்படும். முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு அமைக்கப்பட உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும், என்றார்.