பதிவு செய்த நாள்
06
ஆக
2018
12:08
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவில் ஆடி கிருத்திகை விழா நேற்று கோலாகலமாக நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் அருகே வல்லக்கோட்டை யில், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, 7 அடி உயரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆடிக்கிருத்திகை விழா, நேற்று இந்த கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, மூலவருக்கு 300 லிட்டர் பால் அபிஷேகத்துடன் பரணி அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை, 4:00 மணிக்கு தங்ககிரீடம், தங்க வேல் அணிவிக்கப்பட்டு, சந்தன காப்பு செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பால் குடம், பல்லக்கு ஏந்தி, அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.