பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழா செப்.4ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2018 10:09
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா செப்.4ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.நகரத்தார் கோயிலான விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். செப்.,4ல் காலை மூஷிக படம் தாங்கிய கொடி திருவீதி வலம் வருதலும், கொடிமரம் அருகே உற்ஸவர் விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்குசத்தேவர் எழுந்தருளலும் நடைபெறும். தொடர்ந்து கொடிப்படத்திற்கும், கொடிமரத்திற்கும் சிறப்பு பூஜை நடந்து கொடியேற்றம் நடைபெறும். பின்னர் விழா துவங்கி இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதி வலம் வருவார். தொடர்ந்து தினசரி இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.
இரண்டாம் நாள் முதல் எட்டாம் நாள் வரை காலை 9:30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். செப்.,9 மாலை 5:00 மணிக்கு கஜமுகா சூரசம்ஹாரமும், செப்.,12ல் மாலை தேரோட்டமும் நடைபெறும். அன்று மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூலவர் சந்தனக்காப்பில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரம் நடைபெறும். பத்தாம் திருநாளான விநாயகர் சதுர்த்தியன்று காலை கோயில் குளத்தில் தீர்த்தவாரி, மதியம் திருமுக்கூரணி மோதக கொழுக்கட்டை படையல், இரவில் ஐம்பெரும் கடவுளர் வீதி உலாவுடன் சதுர்த்தி விழா நிறைவடையும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் கோனாபட்டு அருணாசலம் செட்டியார் மற்றும் அரிமளம் சிதம்பரம் செட்டியார் செய்கின்றனர்.