பதிவு செய்த நாள்
03
செப்
2018
01:09
சேலம்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் மாவட்டம் முழுவதும், பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், சேலம், சோனா கல்லூரியில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா, நேற்று கொண்டாடப்பட்டது. அதற்காக, அமைக்கப்பட்டிருந்த மேடையில், சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் - பலராமர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. காலை, 9:30 மணிக்கு பஜனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து, கிருஷ்ணர் லீலை நாடகம், பஜனை, அபி ?ஷகம், மஹா ஆரத்தி ஆகியவை நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு, சுவாமியை தரிசித்தனர்.
* காளிப்பட்டி, சென்றாய பெருமாள் கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு, திருமஞ்சனம், விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. பூஜைக்கு பின், திருக்கோடி தீபமேற்றி, கோவிலை வலம் வந்து, பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, கோவில் முன்புறமுள்ள கல்விளக்கு கம்பத்தில் வைக்கப்பட்டது. வீரபக்த ஆஞ்சநேயருக்கு, வெள்ளி கவசம் சார்த்தப்பட்டது.
* வேம்படிதாளத்திலுள்ள, பண்டரிநாதர் பஜனை மடம் கிருஷ்ணர் கோவிலில், ஏராளமான பக்தர்கள், கிருஷ்ணர் பாடல்களை பாடி, கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனர். மாலை, 20க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர், வண்ண உடைகளில் தலையில் மயிலிறகு, கையில் புல்லாங்குழல்களுடன், கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்திருந்தனர். சிறப்பாக வேடமணிந்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, உறியடி விழா நடந்தது.
* சங்ககிரி அருகே, நாட்டாம்பாளையம், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், வட்டார யாதவா சங்கம் சார்பில், கண்ணபிரான் சுவாமி கோவிலில், விழா கொண்டாடப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, ஆராதனை நடந்தது. உற்சவர் கண்ணபிரான் சுவாமியை, பல்லக்கில் வைத்து, பக்தர்கள் கோவிலைச் சுற்றி வலம் வந்து தரிசனம் செய்தனர். அப்போது, கிருஷ்ணன் அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். அதேபோல், ஆத்தூர், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள், முல்லைவாடி கிருஷ்ணர் உள்ளிட்ட கோவில்களில், கிருஷ்ணர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். வாழப்பாடி, பஸ் ஸ்டாண்டில், விஸ்வ இந்து பரிஷத் சார்பில், கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது.