பதிவு செய்த நாள்
04
செப்
2018
10:09
மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ஜென்மாஷ்டமியை ஒட்டி கொண்டாடப்படும், தஹி ஹண்டி எனப்படும், உறியடித் திருவிழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஹிந்து கடவுளான கிருஷ்ணர் பிறந்த நாளை, ஜென்மாஷ்டமி என்ற பெயரில், இங்கு கோலாகலமாக கொண்டாடுகின்றனர். தலைநகர் மும்பையில், ஜென்மாஷ்டமியை ஒட்டி நடத்தப்படும், தஹி ஹண்டி எனப்படும், உறியடித் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு, பா.ஜ., - சிவசேனா, தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்கள், பல இடங்களில், உறியடி திருவிழாவை துவக்கி வைத்தனர்.கோர்ட் உத்தரவுப்படி, 14 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் ஒன்று கூடி, மனித பிரமிடு அமைத்து, உயரத்தில், கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்ட, தயிர் பானையை உடைத்து மகிழ்ந்தனர்.மும்பையின் முக்கிய பகுதிகளான, கட்கோபர், தாதர், அந்தேரி, காந்திவலி, ஒர்லி, வடாலா, முல்லண்ட் உள்ளிட்ட இடங்களில் நடந்த உறியடி திருவிழாவில், பெருந்திரளான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.