பதிவு செய்த நாள்
11
செப்
2018
12:09
காளையார்கோவில்: காளையார்கோவில் அருகே உள்ள உடப்பூரணி மஞ்சபுத்து காளியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.உடப்பூரணி கிராம கண்மாய் கரையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கோயிலாக உருவான மஞ்சள் நீராடும் ஸ்ரீமஞ்சபுத்து காளிய ம்மன், தர்ம முனீஸ்வரர் மற்றும் சோனையா சுவாமி கோயில்களில் திருப்பணி செய்யப் பட்டுள்ளன. இக்கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த செப்., 9 ல் அனுக்ஞை விக்னேஸ்வர் ஹோமத்துடன் துவங்கியது.
நேற்று (செப்., 10ல்) காலை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் நடந்தது. மாலையில் வாஸ்து சாந்தியும், இரவில் முதல்கால யாக சாலை பூஜையும் நடைபெற்றது. இன்று (செப்., 11ல்) காலை 8:00 மணிக்கு இரண்டாம் காலயாக சாலை பூஜையும், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜையும் நடைபெறுகிறது. நாளை காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, கோ பூஜையும் காலை 9:15 முதல் 10:15 மணிக்குள் 3 கோயில்களின் கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அதன்பிறகு மகா அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. காலை 11:00 மணிக்கு மேல் அன்னதானம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கமலக்கண்ணன் மற்றும் மேட்டுப்பட்டி பரம்பரை கோயில் பூஜாரிகள் செய்து வருகின்றனர்.