பதிவு செய்த நாள்
13
செப்
2018
12:09
மும்பை: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், இன்று கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, விநாயகர் சிலைகள் மற்றும் சிலைகளுக்கு அணிவிக்கப்படும் நகைகளுக்கு, 600 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். இதுகுறித்து, விநாயகர் சதுர்த்தி விழா அமைப்பாளர்கள் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக, பிரமாண்ட விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன. விநாயகர் சிலைகளுக்கு, தங்க நகைகள் அணிவிக்கப்படும். இந்த பண்டிகையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர்.
மும்பையின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு அமைப்புகளால் நிறுவப்படும் விநாயகர் சிலைகள், நகைகள் பாதுகாப்புக்காக, 600 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளது. இதில், தனிநபர் விபத்துக்கான இன்சூரன்சும் அடங்கும். இந்த தொகை, கடந்தாண்டை விட, 20 சதவீதம் அதிகம். மும்பையில், விநாயகர் சதுர்த்தியை பெரியளவில் நடத்தும் அமைப்பாக, ஜி.எஸ்.பி., சேவா மண்டல் திகழ்கிறது. மும்பை, கிங்ஸ் சர்க்கிளில் செயல்படும் இந்த அமைப்பு, இந்தாண்டு, 265 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்துள்ளது. ஜி.எஸ்.பி., சேவா மண்டல் உருவாக்கியுள்ள விநாயகர் சிலை, 90 கிலோ தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நகைகளை, வங்கி லாக்கரில் இருந்து எடுக்கும் நேரம் முதல், மீண்டும் லாக்கரில் வைக்கும் வரை, இன்சூரன்ஸ் பாலிசி அமலில் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.