பதிவு செய்த நாள்
14
செப்
2018
02:09
சபரிமலை:புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மறுநாள் (செப்., 16ல்)மாலை திறக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் குடிநீர், உணவுடன் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரள அடைமழையில் பம்பை உருக்குலைந்துள்ளது. நிறைபுத்தரிசி, ஆவணி மாத பூஜை, திருவோணம் பூஜைகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதற்காக விரதம் துவங்கியவர்கள், தொடர்ந்து விரதம் இருந்து வருகின்றனர். இதனால் வழக்கத்தை விட புரட்டாசி பூஜைக்கு கூட்டம் அதிகரிக்கும் என தேவசம்போர்டும் கருதுகிறது.
ஆனால் இன்னமும் மின் இணைப்பு சரியாகவில்லை. குடிநீர் ஆதாரமான குன்னாறு அணை மண் மேவி கிடப்பதால் சன்னிதானத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பாத்திரங்களில் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.
உணவும் கொண்டு செல்வது நல்லது. கழிப்பறை பிரச்னையும் உள்ளது.
பம்பையில் போலீஸ் அனுமதித்துள்ள இடத்தில் மட்டுமே குளிக்க வேண்டும். திருவேணி பாலம் வழியாக கணபதி கோயில் செல்ல வேண்டும்.
புல்மேடு பாதை பத்தணந்திட்டை- - பம்பை பாதையில் பிலாந்தோடு, கம்பகத்தும் வளைவு, மைலாடும் பாறை ஆகிய இடங்களில் 16 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ரோடு சீரமைக்கப் படாமல் உள்ளது.
பம்பையில் பாம்புகள் அதிகரித்துள்ளன. ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும், காடுகளி லும் பக்தர்கள் செல்ல கூடாது. மணல் குவிந்துள்ள இடங்களில் புதைகுழிகள் உள்ளதால் அனுமதிக்கப் படாத இடங்களில் பக்தர்கள் செல்ல முயற்சிக்க கூடாது.பம்பை பெட்ரோல் பங்க் முதல், ஆறாட்டு கடவு வரை கல் தடுப்பு சுவர் முழுமையாக இடிந்து பம்பையாற்றில் விழுந்துள்ளது. இதனால் இந்த பகுதியிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தமிழக பக்தர்கள் குமுளி, வண்டிபெரியாறு, புல்மேடு பாதையை பயன்படுத்தலாம். இந்த பாதையை திறந்துவிட வனத்துறையிடம் தேவசம் போர்டு வலியுறுத்தியுள்ளது.பம்பை, சன்னிதானத்தின் நிலையை உணர்ந்து அதற்கேற்ப பக்தர்கள் குடிநீர், உணவு உள்ளிட்ட முன்னேற்பாட்டுடன் வருமாறு தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.