பதிவு செய்த நாள்
14
செப்
2018
02:09
தஞ்சாவூர்:தஞ்சாவூர் பெரிய கோவிலில், சரபோஜி மன்னர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்ட மராட்ட விநாயகருக்கு, 200 ஆண்டுகளுக்கு பின், நேற்று (செப்., 13ல்) சந்தனத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில், ராஜராஜ சோழனால், 1010ம் ஆண்டு கட்டப் பட்டது. இங்கு, மராட்டியர் காலத்தில், இரண்டாம் சரபோஜி மன்னரால், மராட்ட விநாயகர் சன்னதி கட்டப்பட்டு, கோவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டது. அத்துடன், நாயக்கர்களாலும் இக்கோவில் மேம்படுத்தப்பட்டு உள்ளது என்பது வரலாறு.
இக்கோவிலில் ஆண்டு தோறும், சித்திரை திருவிழா, சதய விழா, ஐப்பசி மாதம் அன்னாபி ஷேகம், பிரதோஷம் மற்றும் காணும் பொங்கல் நாளில் மஹா நந்திக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனையும் நடைபெறுவது வழக்கம். ஆனால், விநாயகர் சன்னதி இருந்தும், 200 ஆண்டு களாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறாமல் இருந்தது. இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முதன் முறையாக, 30 கிலோ சந்தனத்தில், மராட்ட விநாயருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்த வந்திருந்த பக்தர்கள் பங்கேற்று, விநாயகரை வழிபட்டனர்.
பெரிய கோவிலில், 200 ஆண்டுக்கு பின் விநாயகர் சதுர்த்தி விழா நடந்ததால், நேற்று (செப்., 13ல்) பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.