பதிவு செய்த நாள்
06
பிப்
2012
10:02
பழநி : பழநியில் தைசப்பூச விழாவை முன்னிட்டு கொட்டும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி நோக்கி செல்கின்றனர். பாதுகாப்பு பணியில் 3500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், என ஜெயச்சந்திரன், எஸ்.பி., தெரிவித்தார். அவர் கூறியதாவது:பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து பாதுகாப்புபணிக்கு 3500 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அடிவாரம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட 20 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து இடங்களில் ஸ்பீடு ஜூம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து சீரமைப்பு, குற்றங்களை தடுக்கவும் பத்துக்கும் மேற்பட்ட போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நகருக்குள் லாரி, பஸ், கார் போன்ற வாகனங்கள் வராமல் பைபாஸ் ரோடு வழியாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, காரைக்குடி போன் ற பகுதிகளில் இருந்து வரும் புறநகர் பேருந்துகள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் புறநகர் பேருந்துகள் தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டிலும் நிறுத்தப்படும். ஒட்டன்சத்திரத்தில் இருந்து கள்ளிமந்தயம் வழியாக பழநி செல்ல ஒரு வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.
டன் கணக்கில் வாழைப்பழம் : விழாவை முன்னிட்டு, பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழம், "டன் கணக்கில் குவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விளைச்சல் குறைவால், அதிக விலைக்கு விற்கப்படுகிறது. தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. குழுக்களாக வருபவர்கள் தாங்களே பஞ்சாமிர்த தயாரிப்பில் ஈடுபட்டு, பகிர்ந்து கொள்கின்றனர். பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழங்களை அதிகம் வாங்குகின்றனர். இந்தாண்டு, கர்நாடக மாநில குடகு மலைப்பழம், பாச்சலூர், கொடைக்கானல் மலைப்பகுதி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. விளைச்சல் குறைந்த காரணத்தால், ஒரு பழம் மூன்று ரூபாய் முதல், ஐந்து ரூபாய் வரை விற்கப்படுகிறது. வியாபாரி ஒருவர் கூறுகையில், "வாழைப்பழம் விளைச்சல் குறைவு காரணமாக விலை கூடுதலாக உள்ளது. கடந்த ஆண்டு, 100 டன்னுக்கு மேல் மலை வாழைப்பழம் விற்பனையானது. இந்த ஆண்டு இதுவரை 60 டன் மட்டுமே விற்பனையாகியுள்ளது என்றார்.