பதிவு செய்த நாள்
06
பிப்
2012
10:02
மதுரை :மதுரையில் மத்திய அரசு வழங்கிய ரூ.2.25 கோடியில், மாநகராட்சி சார்பில் மாரியம்மன் தெப்பக்குளத்தைச் சுற்றி அழகுபடுத்தும் பணி அரைகுறையாக நிற்கிறது. நடைமேடையையொட்டி அமைக்கப்பட்ட பூங்கா தடுப்புகளை, நாளை(பிப்.,7) நடக்கும் தெப்பத் திருவிழாவிற்காக, மாநகராட்சியினர் உடைத்து அப்புறப்படுத்துவதால், மத்திய அரசு நிதி வீணாகியுள்ளது. சுற்றுலா பயணிகளை கவர, தெப்பக்குளத்தைச் சுற்றி இருபுறமும் "மினி பூங்கா அமைக்கும் பணி ஓராண்டாக நடக்கிறது. நடைமேடையையொட்டி செடிகள் நடப்பட்டு, பாதுகாப்பாக இருக்க கம்பி வலைகள் அமைக்கப்பட்டன. ஆண்டுதோறும் இங்கு நடக்கும் தெப்பத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும்போது, இவை பாதுகாப்பாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து, கடந்த அக்.,12ல் "தெப்பக்குளத்தை சுற்றி ரூ2.25 கோடி வீணாகும் அபாயம் தலைப்பில் தினமலர் இதழ் செய்தி வெளியிட்டது. அதில், தெப்பத்தை இழுக்கும் வடத்தை நான்கு திசைகளிலும் கொண்டு வரும்போது, அழகிய செடிகளும், கம்பி வலைகளும் சேதமடையும். இதனால் நிதி வீணாகும் என சுட்டிகாட்டியது. தற்போது அந்த அவலம் நடக்கிறது. நாளை நடக்கும் தெப்பத்திருவிழாவிற்காக, "மினி பூங்கா தடுப்புகளை உடைத்து, ரூ2.25 கோடியை மாநகராட்சி ஊழியர்கள் வீணாக்குகின்றனர். தெப்பத்திருவிழாவின் போது வடம் இழுப்பது தெரியும். சேதமடைய வாய்ப்புண்டு என்பதும் தெரியும். அப்படி இருந்தும்"கமிஷன் பார்ப்பதற்காகவே, தொலை நோக்கு பார்வையின்றி, சில அரசியல்வாதிகள் இத்திட்டத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். விழா முடிந்ததும், மீண்டும் பூச்சு வேலை நடக்கும். அதற்கு டெண்டர் விடப்படும். "கமிஷன் கிடைக்கும். இப்படி ஒவ்வொரு ஆண்டும் கமிஷனுக்காக டெண்டர் விட்டால், மக்கள் வரிப்பணம் என்னாவது? அடுத்த தெப்பத்திருவிழாவிற்குள்ளாவது பூங்கா தடுப்புகளை உடைக்காமல், மாற்று ஏற்பாடுகளை கையாள மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.