பதிவு செய்த நாள்
29
செப்
2018
11:09
பழநி: பொதுவாக நம்மூரில் 9 நாள் திருவிழா என்றால் நினைவிற்கு வருவது நவராத்திரிவிழா தான். இவ்விழா நாட்களில் ஒவ்வொரு வீட்டிலும் "கொலு” பொம்மைகள் மூலம் அலங்கரித்து,தினம் ஒருவகை உணவு படைத்து லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை என பெண் தெய்வங்களை போற்றி வழிபடுகிறோம். நமது வீடு மற்றும் கோயில்களில் பிரத்யேகமாக மரப்படிக்கட்டு மேடை அமைத்து, அதில் வண்ணமயமான, விதவிதமான சுவாமி, அம்பாள் பொம்மைகளை வைத்து, வீட்டில் 9 நாளும் தெய்வம் குடியிருப்பது போல கருதி கொலு வைக்கிறோம். உறவுகள், நண்பர்கள் வட்டாரங்களை அழைத்து பக்தி பாடல் பாடி, வழிபடுவது வழக்கம்.
இந்தாண்டு அக்., 10ல் துவங்கி 19 வரை இவ்விழா நடக்கிறது. இதற்காக விதவிதமான வண்ண பொம்மைகள் ஆன்மிக நகரான பழநியில் விற்பனைக்கு வந்துருக்குங்க. பழநியின் சிறப்பு அயிட்டமான மலைக் காவடிகுழு, கருடசேவை, கார்த்திகை தீபம், கிரகப்பிரவேசம், சஞ்சீவி மலை, பள்ளிக்கூட மாணவர்கள் போன்றவை இவ்வாண்டு புதுவரவு. மேலும் மகாபாரத பீமன் மகன் கடோத்கஜன் (மாயாபஜார் படத்தில் கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம் என்ற அறுசுவை பாடலை நினைவுபடுத்தும்) பொம்மை செட் உள்ளது.பேன்ட், சர்ட், தொப்பியுடன் விளையாடும் கிரிக்கெட் விநாயகர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், சங்கராச்சாரியார், ராகவேந்திரர், பாபா போன்ற நாயகர்களும், ராமர்பாலம், சீமந்தம் (வளைகாப்பு), ராம் வில்லு, சீதா கல்யாணம், ராவண தர்பார், துளசிமாடம், வள்ளி தெய்வானை, ராமர் பட்டாபிஷேகம், திருப்பதி பிரம்மோற்ஸவ பெருமாள் அலங்காரங்கள் போன்ற பொம்மைகளும் வந்துள்ளன.
பழநி சன்னதிவீதி வியாபாரி எம்.நாகராஜன் கூறியதாவது: நவராத்திரிக்கு ஒருமாதம் முன்பே காஞ்சிபுரத்தில் இருந்து பொம்மைகள் வந்துவிடும். தனிபொம்மை ரூ.150 முதல் ரூ.600 வரை, குழுபொம்மை ரூ.400 முதல் ரூ.6ஆயிரம் வரைவிலையில் உள்ளது” என்றார். -மேலும் விபரங்களுக்கு 94861 61676ல் பேசலாம்.