பதிவு செய்த நாள்
29
செப்
2018
12:09
அலகாபாத் : உத்தர பிரதேசத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கும்பமேளாவில், பாது காப்பு பணியில் ஈடுபடும் போலீசார், மது மற்றும் புகைப் பழக்கம் இல்லாதவராகவும், சைவ உணவுப் பழக்கம் உடையவராகவும் இருக்க வேண்டும் என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
நேர்முக தேர்வு: இங்குள்ள அலகாபாத் மாவட்டத்தில், அடுத்த ஆண்டு, ஜன., 15ல் துவங்கி, மார்ச், 4 வரை, கும்பமேளா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள, பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள், அலகாபாத் வர உள்ளனர்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் திட்டமிட துவங்கி உள்ளது.மூன்று மாதங்கள் நடைபெற உள்ள இந்த விழாவின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு, மது மற்றும் புகைப் பழக்கம் இருக்கக் கூடாது என த்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சைவ உணவுப் பழக்கம் கொண்டவராகவும், அனைவரிடமும், நட்புடன் பேசும் சுபாவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புக்கு அனுப்பப்படும் போலீசாரிடம், சம்பந்தப்பட்ட மாவட்ட, எஸ்.பி.,க்கள் நேர்முக தேர்வு நடத்தி, அவரது நடத்தை குறித்து சான்று அளித்த பிறகே, அவர் பணியில் நியமிக்கப் படுவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரவு: பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படும் கான்ஸ்டபிள்கள், 35 வயதுக்கு உட்பட்ட வராகவும், தலைமை கான்ஸ்டபிள்கள், 40 வயதுக்கு உட்பட்டவராகவும், சப் - இன்ஸ் பெக்டர்கள், 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.