பதிவு செய்த நாள்
04
அக்
2018
11:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை ரோட்டின் இரு புறமும் நிறுத்துவதால் நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்
களை நிறுத்த தனி இட வசதி செய்ய வேண்டும்.
கோயிலுக்கு திங்கள், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் வாகனங்களை சுவாமி சன்னதி உட்பட முக்கிய ரோடுகளில் கண்டபடி நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சன்னதி தெரு, மேல ரத வீதி, கீழ ரத வீதி, பெரிய ரத வீதிகளில் டூவீலர்கள், கார்கள் வரிசை யாக நிறுத்தப்படுகின்றன.
பஸ்கள் கிரிவல ரோட்டில் நிறுத்தப்படுகிறது. வாகனங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சைக்கிளுக்கு 3, டூவீலர்களுக்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதற்கு மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. திருவிழா, முகூர்த்த நாட்களில் பக்தர்கள் வாகனங்களில் அதிகளவில் வருவதால், நிறுத்த இடமின்றி அவதியுறுகின்றனர்.
திருவிழா காலங்களில் சுவாமி புறப்பாடு, சிறிய வைரத்தேர், சட்ட தேரும் வீதிவுலா வரும். ரோட்டின் இரு புறமும் நிறுத்தப்படும் வாகனங்களால் வீதிவுலா செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
மேம்பாலத்தின் ஒருபுறம் சர்வீஸ் ரோடு அமைக்கப்படாததால் நிலையூர், சம்பக்குளம் அரசு டவுன் பஸ்கள் மேல, பெரிய ரதவீதி வழியாக சென்று திரும்புகின்றன. திருப்பங்களில் பஸ்கள் திரும்ப 20 நிமிடங்களாகிறது.
எனவே வாகனங்களை நிறுத்த தனி இட வசதி செய்ய வேண்டும் என பக்தர்கள் நீண்ட காலமாக வலியுறுத்துகின்றனர்.வரும் இடைத்தேர்தலில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ., இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.