பதிவு செய்த நாள்
11
அக்
2018
06:10
விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் அமிர்தவள்ளி நாயகி சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் கடந்த 9ம் தேதி முதல் 18ம் தேதி வரை நவராத்திரி சிறப்பு ஹோமம் நடக்கிறது. இதையொட்டி, கடந்த 9ம் தேதி மாலை 7:00 மணிக்கு ேஹாமம் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் ேஹாமம் நடக்கிறது. இதையடுத்து, வரும் 18ம் தேதி இரவு 7:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடக்கிறது. பின் பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
தினந்தோறும் நடைபெறும் ஹோமத்தில், பகை விலகுதல், உடல் நல பிணியில் இருந்து நீங்க சுதர்சனம், தன்வந்திரி ஹோமங்களும், பிள்ளைகள் நன்றாக பயில ஹயக்கிரீவருக்கும், வியாபாரத்தில் லாபம் பெருக மகாலட்சுமிஹோமங்கள் நடக்கிறது. மகாலட்சுமி ஹோமத்தில் துர்கா சுவாமி பெயரை 1 லட்சம் முறை ஜெபிக்கும் ேஹாமமும் நடக்கிறது. ஹோமத்தில், நெய், பழங்கள், தேன், பட்டுபுடவை போடப்படுகிறது. நவராத்திரியை முன்னிட்டு நேற்று சிறப்பு ேஹாமம் நடந்தது. இதில், மூலவர் பெருமாள் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சுவாதி ஹோமம்: இன்று சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, கோவிலில் 205வது சுவாதி சுதர்சன நரசிம்ம ஹோமம் நடக்கிறது. இன்று காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை மூலவருக்கு அபிேஷகமும், காலை 7:30 மணிக்கு மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது. பின், காலை 8:30 மணிக்கு சுவாதி ஹோமம் ஆரம்பம், வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் யாகசாலைக்கு புறப்பாடு மற்றும் காலை 9:00 மணிக்கு சுதர்சன நரசிம்ம ஹோமம் ஆரம்பம், சுதர்சன பெருமாள், நரசிம்ம பெருமாள் மந்திரங்கள் ஜெபம் செய்யப்பட்டு, ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, பகல் 11:30 மணிக்கு வசுத்தாரா ஹோமம், பகல் 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடக்கிறது. பகல் 12:30 மணிக்கு கலசம் புறப்பாடாகி மூலவர் மற்றும் உற்சவர் விக்ரஹங்களுக்கு கலச தீர்த்தம் சேர்க்கப்படுகிறது. மூலவர் பெருமாள் தங்க கவசத்தில் அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை, செயல் அலுவலர் ஜெயக்குமார், கோவில் முதன்மை அர்ச்சகர் பார்த்தசாரதி மற்றும் கோவில் பணியாளர்கள், அப்பகுதி பொதுமக்கள் செய்துள்ளனர்.