பதிவு செய்த நாள்
12
அக்
2018
01:10
சௌந்தர்யலஹரி முதன்முதலில் சிவபிரான் கயிலையில் எழுதப்பட்டதென்றும் பிறகு மேருமலையில் அதனைப்பெயர்த்து புட்பதந்தன் என்ற முனிபுங்கவன் எழுதினாரென்றும் அதனைக் கற்றறிந்த கௌடபாதர் ஸ்ரீ ஆதிசங்கரருக்கு எடுத்துச்சொல்லிட சங்கரர் அதனை மக்களுக்குக் காவியமாக வகுத்துத்தந்ததாகவும் கூறுவர். சௌந்தர்யலஹரியைத் தமிழில் மொழி பெயர்த்த வீரைக்கவிராயர் பண்டிதர் அன்னைபராசக்தியின் திருவருள் பெற்ற அருட்கவியாவார். இவர் இயற்றிய பலநூல்களில் சாக்தர்கள் போற்றும் வாராகிமாலை ஆனந்தமாலை என்ற இரு நூல்களும் அன்னையின் அருட்சக்தியைத் தரவல்லது.
சிவபிரான் யோகநிஷ்டையில் இருக்கும்போது காமன் மலர்க்கணைகளை ஏவி நிஷ்டையைக் கலைத்தான். சிவபிரானின் கோபத்தினால் அவரது நெற்றிக்கண்ணினின்றும் எழுந்த தீப்பொறிகள் காமனை எரித்து சாம்பலாக்கியது. அச்சாம்பலிலிருந்து ‘பண்டாசுரன்” என்ற அசுரன் தோன்றி தேவர்களையும், தேவருலகையும், துன்பத்திற்குள்ளாக்கினான். இதிலிருந்து விடுபட தேவர்கள் சேர்ந்து வேள்வி ஒன்றை நடத்தினர். அவ்வேள்வியினின்றும் மஹாசக்தி அம்சமாக ஸ்ரீ லலிதாம்பிகை தோன்றினாள். அவளுக்குரிய சக்ரமே, ஸ்ரீ சக்ரமென்றும், சியாமள சக்ரமென்றும், லலிதா சக்ரமென்றும் கூறுவர். 43 முக்கோணங்களையுடைய இச்சக்கரம், மந்திரசக்தி மிகுந்த யந்திரமென்பர். பராசக்தியின் முழுவடிவையும், இயங்கு இயக்கக்சக்தியின் ‘சின்னம்” மட்டுமல்லாமல், இச்சக்கரத்தை முறையாக பூஜிப்பவர்கள், யாவற்று சக்திகளையும் அடைவர் என்பதை ஸ்ரீ ஆதிசங்கரர் விளக்கியுள்ளார். பல இடங்களில் ஸ்ரீ சக்ரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். 1. ஸ்ரீசைலம் : ஸ்ரீ பிரமராம்பாள், 2. ஜலாந்திரம் : கூர்ஜரம் - திரிபுரமாலினி யோகசூத்திரம் நூலை உலகிற்கு அருளிய ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியால் விளக்கப்படும் யோக நிலைகளின் அடிப்படை குறியீடுகள் இச்சக்கரம் மூலம் வெளிப்படுவதாகக் கூறுவர்.
ஸ்ரீ சக்ரவிளக்கம்
பிரபஞ்ச ஸ்வரூபமாயிருக்கும் ‘ஓம்” ஒலியும் அதனால் உருவான அணுச்சலனத்திற்கு ஆதாரம் என்ற ‘மூலாதாரம்” என்பது பூமியும், அதன் கர்த்தா புவனத்தின் நாயகன் நர்த்தனன் அவனே. முதல்சக்கரமான நாற்சதுரபீடத்தின் இதழ்கள் நான்கு மஹாமேருபீடம். 3 முக்கிய ஒலி, ஒளி. நாடிகளான இட, பிங்க, சூஷ்மனா நாடிகளென்ற மூன்றினைக் காட்டுவதே நாற்சதுர 3 கோடுகள். ஆதிசங்கரரின் 8 பாடலில் கூறியிருப்பதை கவிராஜ பண்டிதர் இவ்விதம் கூறுகிறார்.
ஆர் அமுது இன் கடல் வேலி செழும் தரு
வாய் மணி பம்பிய தீவு ஊடே
பார கடம்பு அடர் கானில் அருங்கொடை
பாய் மணி மண்டப வீடு ஊடே
கோர சிவன் பரமேசன் உன் மஞ்சம், ஒர்
கூர் பரி அங்கம் எனா மேலே
சீர் அடரும் பரஞானம் உறும் களி
தேவர் அருந்துவர் பூமாதே!
வீரைக்கவிராஜபண்டிதர்
தமிழில் சௌந்தர்யலஹரி
‘சாக்தம்” என்ற சக்தி வழிபாட்டில் ஆதிசங்கரர் வெகுவாக சௌந்தர்ய லஹரியில் பராசக்தியின் பெருமைகளைப் பாடுகிறார். படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல், என ஐந்தொழில்களைப் புரிகின்ற, பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகியவர்கள் 5 மூர்த்திகள். சக்தியானவள், அமுதக்கடலின் நடுவில் கற்பக விருட்ஷங்களால் சூழப்பெற்ற ரத்தினமயமான தீவில், சிந்தாமணியால் இழைக்கப்பட்ட அரண்மனையில் மஞ்சத்தில் அன்னை அமர்ந்திருக்க அம்மஞ்சத்தின் நான்கு கால்களாக, பிரமன், விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், ஆகிய நால்வரும் இருப்பதோடு அக்கால்கள் தாங்கி நிற்கும் மஞ்சப் பலகையாக சதாசிவன் பரந்திருக்க, அதன்மேல் காமேஸ்வரனோடு கூடிய காமேஸ்வரியாக காட்சிதருபவள், அன்னை பராசக்தி. பரப்பிரம்மத்துடன் இணைந்த பராசக்தியை, ஸ்ரீ வித்யாவாகவும், அன்னையின் மந்திரத்தை ஸ்ரீ வித்யை எனவும், அன்னையின் சக்கரவடிவத்தை ஸ்ரீ சியாமளசக்கரமெனவும், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா திரிசதி, ஸ்ரீ காயத்திரி, ஸ்ரீபஞ்சதசாட்ஷரி ஆகிய மந்திர ரூபமாகவும், யோகசித்தாம்ச வடிவில் துவாதசாந்தப் பெருவழி ஜோதிவடிவாயுமிருப்பவளாகும். இதனைக் கண்டுணர்ந்து உலகிற்கு உணர்த்தியவர்கள் பன்னிருவரே. 1. சிவன் 2. முருகன் 3. இந்திரன் 4. சூரியன் 5. சந்திரன் 6. அக்னி 7. குபேரன் 8. மன்மதன் 9. மனு 10. அகத்தியர்
11. துர்வாசர் 12. வாக்தேவதைகளில் ஒருவரான, அகத்தியரின் பத்தினி லோபாமுத்ரா ஆகியவர்களாகும். ஆதித்யன், அம்பு, அங்கி, என்ற முச்சுடர்களின் மத்தியில் ஒளிரும் அம்பிகையை 64 கோடி யோகினிகள் வணங்குகிறார்கள். “எண்ணிலார் போற்றும் தையலை” என அபிராமிபட்டர் உருகிப் பாடுகிறார்.
அம்பிகையின் ஸ்ரீ சக்கரம் ஒன்பது சுற்றுக்களைக் கொண்டதாகும், நவாவர்ணம் என்பர். ஆவரணம் என்பது சுற்று, அடைப்பு எனப் பொருள்படுவதாகும்.
ஸ்ரீ ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரியில், கூறுகிறபடி, நாற்பத்திநான்கு தத்துவங்களாக விளங்குகிற சியாமளசக்கரம் அமைப்பு.
1. பிரகாரங்கள் - 3 சதுரங்கள்
2. மேகலைகள் - 3 வட்டங்கள்
3. தளங்கள் - 16 தாமரை இதழ்கள்
4. சிவரூபசக்கரங்கள் - 4
5. சக்திரூப சக்கரங்கள் - 5
6. மூலகாரண தாதுக்கள் - 9
7. பிந்துஸ்தான மந்திரகோணங்கள்
8. எட்டுத் தளங்கள் தாமரை இதழ்கள்
என்று மஹாசக்தி பிரவாகமாக விளங்கும் ஸ்ரீ சக்கரம் சூட்சமமான வடிவிலுள்ளதாகும். இதை பெரியோர்கள் மூலம் அறியத்தக்கதாகும். ஒன்றின் கீழ் ஒன்றாக ஒன்றுக்குள், நேர்கோணங்கள் 4. தலைகீழ் ஒன்றாக ஒன்றுக்குள் முக்கோணங்கள் 5. முக்கோணங்கள் 14. வெளிமுக்கோணங்கள் 10, உள்முக்கோணங்கள் 10, நடுமுக்கோணம் 1 சிறியது, ஒரு புள்ளி 1 (சிறுமுக்கோண நடுவில்).
சிவகோணம் முன்பகர்வது ஒரு நாலு சக்தி நெறி
செறிகோணம் அத்தொடு ஒரு மருவு கோன்
நவகோணம் உட்படுவது எழுமூ இரட்டி ஒரு
நவில் கோணம் உற்றதுவும் வலயமாய்
இவரா நிரைந்த தளம் இருநாலும் எட்டுஇணையும்
ஏழிலாய வட்ட மொடு சதுரமாய்
உவமானம் அற்ற தனி தனி மூவகைக்கணும் என்
உமை பாதம் உற்ற சிறு வரைகளே.
லோக நாயகி யோக நாயகியாய், யோக நெறியின் விளக்கமாக உள்ளதே ஸ்ரீ சக்ரம் என்பர். யோக தத்துவங்களின் விளக்கங்களாக அந்தக்கரணம், மன விருத்திகள், என எண்ணப்பரவல்களின் நிலைப்பாடு, குறித்து மேம்படுத்தும் நிலையாகும். 3 சதுரபிரகாரங்களில் ஒன்றான சித்த விருத்தி மனமாறுதலை அடக்கி விகாரம் இல்லாமல் செய்தல் யோகமாகும். சத்வகுண, தமோ குண, ரஜோகுண நிலைகளை மாற்றி சத்வகுண மேம்பாட்டை ஏகாக்ரஹ சிந்தையை வைராக்கிய நிலையில் வைத்திருக்கும் போது கிடைக்கும் அட்டமா சித்திகளைப் பெறச் செய்யும் அணிமா, மகிமா, லஹிமா கரிமா பிராப்தி பிராகாம்யம், ஈசித்வம் வசித்வம் அளிக்கும் 8 தேவதைகளும், காமம், குரோதம், மோஹம், லோபம, மதம, மாச்சர்யம், புண்ணியம், பாவம் என்ற எண் தேவதைகளும், அடுத்து ஆதாரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம் அனாகதம், விசுத்தி ஆக்ஞை, சகஸ்ராரம், பரவெளி என 8 ஆதாரசக்தி தேவதைகளும், 3 மேகலையாக விழிப்பு, உறக்கம், கனவு, வீடு, மோட்ஷம் என்பது சுத்த சைதன்ய ரூபமான புருஷனுக்கு அந்தக்கரணம் முதலிய உபாதிகள் விலக்கி அவனது உண்மையான ஸ்வரூபத்தில் நிலை பெறச் செய்து, தன்னையும் தன்னுள் அடங்கிய மஹாசக்தியை வெளிப்படுத்தி உலகை உய்யச்செய்யும் ஸ்ரீ ஆதிபராசக்தியின் அதி அருள் சூட்சும வடிவே இந்த ஸ்ரீசக்தியாகும்.
எங்கெங்கும் காணினும் சக்தியடா - எனவும்,
ஆதிப்பரம் பொருளின் ஊக்கம் - அதை
அன்னையெனப் பணிதல் ஆக்கம்
மூலம் பழம்பொருளின் நாட்டம் - இந்த
மூன்று புவியும் உனது ஆட்டம் எனவும்,
அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம், இப்படி பாரதியின் பாடல்கள் நம்மை அன்னையிடம் சரணடைய வைக்கிறது. வடிவமைக்கப்பட்ட ஒலியின் சக்தியேற்றிய வார்த்தைகளைத் துதியாகவும் தோத்திரங்களாகவும் மந்திரம், விஞ்சையென்றெல்லாம் இறையருட் பெற்றவர்களால் உருவாக்கப்பட்ட ‘ஒலிவழி’ வழிபாடாகும். ஒலிக்குரிய தெய்வங்களை உருவவழியாக உருவாக்கி “உருவ வழிபாடாகவும்”, அருஉரு வடிவ வழிபாட்டை வரி கோடுகளால் ‘வரிப்படம்” என்றும் அதற்கு அப்படியே பிம்பங்கள் என உருக்கொடுத்து அதனை மேரு எனவும், ‘சக்ர” வழிபாடு எல்லாவழிபாட்டிற்கும் அர்த்தமுள்ள தெனவும், எல்லா சக்தியையும் அளிக்கவல்லதும், எல்லாவற்றிற்கும் சக்தியாயிருப்பவளுமான யந்திரரூபியே ஸ்ரீசக்ரநாயகியாகவும் அம்பிகை ‘சர்வயந்திராத்மிகாயை” மஹாயந்திரா சக்ரராஜ நிகேதனாய எனப்பல நாமங்களையுடையவளாகும்.
43 முக்கோணங்களையுடைய சியாமள சக்கரத்தின் வேறு சில அம்சங்களையும் பார்ப்போம். இந்த 43 முக்கோணங்களின் உச்சியில் இருப்பது பிந்து ஸ்தானம், அதுவே பராசக்தியின் உருவம். இப்பிந்துஸ்தானத்தை சகஸ்ரதளம் என்றும் யோக சாஸ்திரம் கூறுகிறது. இதைச்சுற்றி எட்டு முக்கோணங்களில் கீழ் நோக்கியுள்ள ஐந்தும் சக்திபரம். மேல்நோக்கியுள்ள நான்கும்-சிவபரம், மேருவின் வெளிப்பிரகாரம், மனம், புத்தி, சித்தம் அஹங்காரம் ஆகிய தத்துவங்களால் அமைந்தவை. இவற்றில் சியாமளை வாராகி விஷ்ணு ஈசானன் என சகல தேவதைகளும் இருக்கின்றனர். பிந்து புள்ளி உள்ள முக்கோணத்திற்கு சர்வ சித்திப்பிரதம் எனவும், எட்டு முக்கோணத்திற்கு, சர்வரோஹ ஹரத்துவம் எனவும், பெயர், உள்பத்துக்கோணம் சர்வசாகம் வெளிபத்துக் கோணம். சர்வார்த்த சாதகம், அதைச்சுற்றியுள்ள 14 கோணங்களும் சர்வ சௌபாக்கி தாயகம்.