பதிவு செய்த நாள்
07
பிப்
2012
05:02
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்ற காலங்கள் தொடர்ந்தன. காலை 7 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடிய தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனையைத்தொடர்ந்து சுவாமி அலைவாயுகந்தபெருமான், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன், வடக்குரதவீதியிலுள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதன்பின், சுவாமி, அம்பாள்களுடன் தங்கமயில் வாகனத்தில் வீதியுலா வந்து கோயிலைச்சேர்ந்தார்.பக்தர்கள் குவிந்தனர்:தைப்பூசத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாதயாத்திரையாக வந்த ஏராளமான பக்தர்கள் இங்கு குவிந்தனர். அவர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி, கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.