பதிவு செய்த நாள்
21
அக்
2018
02:10
பெ.நா.பாளையம்:கோவை மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில்களில் முக்கியமானது, துடியலுார் அருகே வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவில். இக்கோவில், 1,300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என, சான்றுகளின் உதவியுடன் வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.பழம்பெரும் புராணமான ஸ்கந்த புராணத்தில் இந்த கோவில், திருத்துடிசையம்பதி என, குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழாம் நுாற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் அவிநாசி கோவிலில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரரையும், கருணாம்பிகையையும் வழிபட்டார். பின், பசியோடு இக்கோவிலுக்கு வந்த போது, வேடன் உருவத்தில் சிவனும், பார்வதியும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விருந்து படைத்ததால், இக்கோவில் விருந்தீஸ்வரர் கோவில் என, அழைக்கப்படுகிறது. தற்போது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, 17 ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்யப்பட்டது.ஆனால், போதிய நிதி இல்லாமல், திருப்பணிகள் முடியாமல், இழுபறியாக இருந்தது. தற்போது, பெரும்பாலான கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.கோவில் திருப்பணிக்குழு தலைவர் மணி கூறுகையில், கோவில் வளாகத்தில் மீதமிருக்கும் திருப்பணிகளை முடிக்க, தனியார் அமைப்புகள் முன்வந்துள்ளன. இதனால், வரும் மாசி மாதம் கும்பாபிேஷகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.