பதிவு செய்த நாள்
25
அக்
2018
11:10
ஊட்டி: நீலகிரியின் பல்வேறு கோவில்களில், அன்னாபிஷேக பெருவிழா நடந்தது.ஊட்டியில் காசிவிஸ்வநாதர் கோவிலில், மாலை, 5:00 மணிக்கு, அன்னாபிேஷக விழா நடந்தது. அதில், மூலவருக்கு, அன்னத்தால், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இரவு, 7:00 மணிவரை, கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
*குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை அருகே, அமைந்துள்ள பாறை முனீஸ்வரர் கோவிலில், சென்னை நண்பர்கள் குழு சார்பில், 16வது ஆண்டு அன்னாபிஷேக பெருவிழா நடந்தது. சிவபெருமானுக்கு அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில், நீலகிரியில் விளையும் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறி களின் விளைச்சல் அதிகரிக்க சிவனுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நடந்த அன்னதானத்தை, அருவங்காடு தொழிற்சாலை துணை பொதுமேலாளர்கள் பெகரா, டாக்டர் ஷெட்டி ஆகியோர் துவக்கி வைத்தனர்.தொழிற்சாலை ஊழியர்கள், குடும்பத்தினர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
* கூடலூர், நம்பாலகோட்டை சிவன்மலை, கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பிற்பகல், 2:30 மணிக்கு அன்னத்தால் சிவலிங்கத்துக்கு சிறப்பு அலகாரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது.மாலை 3:30 மணிக்கு சிவன் மலை அடிவாரத்திலிருந்து கிரிவலம் ஊர்வலம் துவங்கியது. அதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நந்தட்டி சிவன் கோவிலும் அன்னாபிஷேகம் நடந்தது.