பதிவு செய்த நாள்
09
நவ
2018
06:11
அகிலம் யாவும் அன்னையின் அருளாலேயே வாழ்கிறது. அன்னை உலகைக் காக்கப் பல்வேறு வடிவங்கள் எடுத்து இரட்சிக்கிறாள். மதுரையில் மீனாட்சியாகி, காஞ்சியில் காமாட்சியாகி, காசியில் விசாலாட்சியாகி அருள் பாலிப்பதுடன், திருக்கடலூரில் அபிராமியாகி, திருமயிலையில் கற்பகாம்பாளாகித் தலங்கள் தோறும் ஒவ்வொரு திருநாமமும் பெற்று விளங்குகிறாள்.
இவற்றோடு, தன் அருள் பெற்ற சில குழந்தைகளையும் அவள் பிறக்கச் செய்து அருள் பாலிக்கிறாள். உமாதேவியான பரமேச்வரி, இலக்குமி, ஸரஸ்வதி இந்த மூன்று தெய்வங்களின் மகளாகத் தோன்றியவள்தான் தேவி ஸந்தோஷி மாதா. தன்னைத் தொழுபவர்களைச் ஸந்தோஷமாக வைப்பவள். ஆதலால், அவளுக்கு முத்தேவியும் ஐங்கரனும் அந்தப் பெயரைச் சூட்டினார்கள்.
ஸந்தோஷி மாதா குலமங்கையர் தொழவேண்டிய குலவிளக்கு. விரத மஹிமையை உலகிற்கு உணர்த்திய வெற்றித் தெய்வம் இவள்.
இந்தத் தெய்வத்தாயின் கதை புனிதமானது; உருக்கமானது; எல்லோருக்கும் முக்கியமாகப் பெண்களுக்கு வரப்பிரசாதம் போன்றது. அதனை அறிந்து அந்தத் தெய்வத்தாயைப் போற்றி வெள்ளிக்கிழமை விரதமிருந்தால் எல்லோரும் பெருவாழ்வு பெறலாம். பெருமை மிக்க ஸந்தோஷிமாதாவின் வரலாற்றை இனிக் காண்போம்.
ஸ்ரீஸந்தோஷி மாதா வரலாறு
ஆவணி மாதம் பவுர்ணமி நன்னாள்.
வடதேசமெங்கும், தங்கள் சகோதரர்களுக்கு ஸகல மங்களங்களும் உண்டாக வேண்டும் என்று சகோதரிகள் ரட்சைகளைக் கட்டும் ரட்சாபந்தன் பெருவிழா நடக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் குதூகலம்; ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஆனந்தம்.
மண்ணுலகில் இவ்விழா இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் வேளையில் விண்ணுலகில் கயிலைமலையில் விநாயகப் பெருமான் தம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் அருளால் சித்திக்கும், புத்திக்கும் பிறந்த இரு ஆண்பிள்ளைகள் அவரை நோக்கி ஓடி வருகிறார்கள். அப்பொழுது நாரதமகாமுனிவர் அங்கு வந்து சேருகிறார். ரட்சாபந்தனத்தின் மகத்துவம் பற்றிக் கூறுகிறார். உடனே அந்தப் பிள்ளைகள் நாங்களும் இனி ரட்சை சுட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு எங்களுக்கும் ஒரு சகோதரி வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.
“சகோதரி மீண்டும் என்றால் எங்கே போவது” என்று விநாயகப் பெருமான் கேட்கிறார்.
“ஸ்கலருக்கும் ஸகல ஸௌபாக்கியங்களையும் நல்கும் பெருமாளே? நீங்கள் நினைத்தால் நடவாதது என்ன? உங்கள் அருளால் இந்தப் பிள்ளைகளுக்கு ஒரு சகோதரியை உண்டாக்கிக் கொடுங்கள் ” என்று நாரதர் கூறுகிறார். உடனே விநாயகப் பெருமான் சித்தி, புத்தி என்ற தம் சக்திகள் மூலம் அழகே உருவான ஒரு சகோதரியை அந்தப் பிள்ளைகளுக்கு உருவாக்கிக் கொடுக்கிறார்.
அந்தக் குழந்தை பார்வதியின் சக்தியும், லட்சுமி தேவியின் செல்வத்தையும், ஸரஸ்வதி தேவியின் கல்விச் சிறப்பையும் பெற்றுத் திகழுமாறு விநாயகப் பெருமான் அருள் பாலிக்கிறார். மூன்று தேவிமார்களும் அங்குத் தோன்றி அந்தக் குழந்தைக்கு ஆசி வழங்குகிறார்கள்.
தோன்றிய குழந்தை தம் சகோதரர்களுக்கு ரட்சையைக் கட்டி வாழ்த்துகிறாள். “இந்தப் பிள்ளைகளுக்குச் சந்தோஷத்தை உண்டாக்கியதால் இக்குழந்தை ‘சந்தோஷி’ என்ற பெயரைப் பெற்று வாழ்வாள்! இவளை வணங்குபவர்கள் எல்லாச் செல்வங்களையும் அடைந்து சந்தோஷமாக வாழ்வார்கள்” என்று மும்மூர்த்திகளும் வாழ்த்துகிறார்கள்.
“வெள்ளிக்கிழமை உங்கள் மகள் பிறந்துள்ளாள். வெள்ளிக்கிழமை அவளை எண்ணி விரதமிருப்போர் ஸகல ஸௌபாக்யங்களையும் அடைவார்கள். பெருமாளே! உங்கள் அன்பால் உருவான உங்கள் மகளை மண்ணுலகத்து மக்கள் வணங்கி வாழ்வாங்கு வாழ அருள புரிய வேண்டும்” என்று நாரதமுனிவர் வேண்டுகிறார்.
அவ்வாறே விநாயகப் பெருமான் அருள் புரிகிறார். ஸந்தோஷி மாதாவின் கதையை அறிந்து, அவள்மேல் பக்தி கொண்டு, வெள்ளிக்கிழமை விரதமிருந்து, எண்ணற்றவர்கள் பலன் பெற்றார்கள் என்றாலும்; பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஸந்தோஷி மாதாவை வணங்கி வழிபட்டு விரதமிருந்து பெரும் பலன் பெற்ற சுனீதி என்ற உத்தமியின் கதையை இனிக் காண்போம்.