பதிவு செய்த நாள்
09
நவ
2018
06:11
சுனீதியின் கதை
ஆனந்த நகர் என்பது ஓர் அழகிய ஊர். அந்த ஊரில் கோபால் நாத் என்று ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த பக்தர், அற்புதமாகப் பாடும் ஆற்றல் பெற்றவர்.
அவருக்கு சுனீதி என்ற ஒரு மகள். இளமையிலேயே அவள் தாயை இழந்து விட்டாள். அதனால் கோபால் நாத்தே தாயாகவும், தந்தையாகவும் இருந்து சுனீதியை மிகவும் அன்போடு வளர்த்து வந்தார். தாயைப் போலப் பிள்ளை என்பார்கள். தாய் இல்லையாயினும், தந்தையே தாயாகவும் விளங்கியதால் அவர் போலவே சுனீதி மிகுந்தபக்தி உள்ளவளாக வளர்ந்தாள்.
அவளுடைய பக்தியையும், பணிவையும் கண்டு கோபாலநாத் மனம் பூரித்தார். தன் ஒரே மகள் மிகச் சிறந்த வாழ்க்கையைப் பெற வேண்டும் என அவர் விரும்பினார். அதனால் ஒரு வெள்ளிக்கிழமையன்று ஸந்தோஷிமாதா படம் ஒன்றை வாங்கி வந்தார். மகளிடம் அதைக் கொடுத்து ஸந்தோஷிமாதாவின் அற்புத மஹிமைகளையெல்லாம் கூறினார்.
சுனீதி பக்திப் பரவசத்தோடு ஸந்தோஷிமாதா படத்தைப் பெற்றுக் கொண்டாள். வெள்ளிக்கிழமை தோறும் பாடல்கள் பாடி மாதாவைத் துதித்தாள். அவள் ஸந்தோஷிமாதாவிடம் கொண்ட பக்தியைக் கண்ட கோபால்நாத் “மகளே உனக்கு மிகவும் சிறந்த கணவன் வாய்ப்பான்” என்று கூறினார்.
அந்தக் கிராமத்திற்குப் பக்கத்தில் ‘சனந்தகடி’ என்ற ஒரு கிராமம் இருந்தது. அந்த ஊரில் கிழவி ஒருத்தி வசித்து வந்தாள். அவளுக்கு ஏழு பிள்ளைகள், அவர்களில் முதல் ஆறுபேறும் தக்க உத்தியோகத்தில் இருந்தார்கள். இளைய மகன் போலாநாத் மட்டும் இளமை முதலே சிறந்த பக்தனாகவும் பஜனைகள் பாடுவதில் வல்லவனாகவும் இருந்தான்.
போலாநாத் மிகவும் நல்லவனாக இருந்து என்ன பயன்? முதல் ஆறுபிள்ளைகளும் வருமானம் உள்ளவர்களாக இருந்ததால் அவர்களையே கிழவி மிகவும் போற்றி வந்தாள். ஒருவர் பின் ஒருவராக அந்த ஆறு பேர்களுக்கும் திருமணங்களைக் கிழவி முடித்து வைத்தாள். அண்ணன்மார்கள் மட்டுமல்லாமல் அவர்கள் மனைவிமார்களும் போலாநாத்தை மிகவும் அலட்சியமாகவே நடத்தினார்கள்.
“இவனுக்கு யார் பெண்கொடுக்கப் போகிறார்கள்” என்று அவர்கள் கேலிபேசி வந்தார்கள். ஆறு மருமகள்களோடும் கிழவியும் சேர்ந்து கொண்டு, தான் பெற்ற மகன் போலாநாத்தையே குறைவாக எண்ணத்தொடங்கினாள்.
போலாநாத் இதையெல்லாம் ஒரு போதும் பொருட்படுத்தியதில்லை. வெள்ளிக்கிழமையானால் கோயிலுக்குப் பஜனை செய்யப் போய்விடுவான். அவனுக்கு அந்த வகையில் சில நல்ல நண்பர்கள் இருந்தார்கள். இதனால் வெளியில் போலாநாத்துக்கு மிகவும் நல்ல பெயர் இருந்து வந்தது.
ஒரு வெள்ளிக்கிழமையன்று கோபால்நாத் தன் வீட்டு முற்றத்தில் அமர்ந்து ராமாயணம் படித்துக் கொண்டிருந்தார்.
சுனீதி ஸந்தோஷி மாதாவுக்குப் பூஜை செய்துவிட்டுத் தன் தந்தைக்குப் பிரசாதங்கள் கொண்டுவந்து கொடுத்தாள்.
“மகளே நான் ராமாயணம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஸீதாப் பிராட்டியை மணக்க இராமபிரான் வந்தது போல மகாபக்தையான உன்னை மணக்கவும் ஓர் உத்தமன் வருவான்” என்று கூறி அவர் ஆசீர்வதித்தார்.
அன்று மாலை அந்த ஊர்க் கோயிலில் நடந்த திருவிழாவிற்குப் பஜனைபாடப் போலாநாத் தன் நண்பர்களோடு வந்திருந்தான். அவனது பக்தி சிரத்தையான பாடலும், ஆடலும் கோபால் நாத்தையும் சுனீதியையும் மிகவும் கவர்ந்தன.
பஜனை முடிந்ததும் கோபால்நாத், போலாநாத்தைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
போலாநாத்தின் பண்பும், பணிவும் கோபாலநாத்துக்கு மிகவும் பிடித்தன. காலையில் தன் மகளிடம் ராமச்சந்திர மூர்த்தியைப் போல உனக்கும் ஒரு கணவன் வருவான் என்று சொன்னது பலித்து விட்டதென்றே அவர் நினைத்தார்.
போலாநாத்தின் தாயைக் கோபால்நாத் போய் பார்த்தார். தன் மகளை மருமகளாக்கிக் கொள்ளும்படி வேண்டினார்.
ஏழைப் பெண் என்றதும் நன்றாக வேலை வாங்கலாம் என்று முன்னர் அந்த வீட்டிற்கு வந்த ஆறு பேரும் நினைத்தார்கள். அவர்கள் எண்ணுவது தானே சட்டம்? அவர்கள் இந்தப் பெண்ணையே போலாநாத்துக்கு மணம் முடித்து விடலாம் என்று கூறினார்கள். கிழவி உடனே அதற்கு உடன்பட்டாள்.
போலாநாத்துக்கும், சுனீதிக்கும் திருமணம் அம்மனின் அருளாலும், ஸ்ரீராமரின் அருளாலும் நன்றாக நடந்தேறியது. போலாநாத்தின் அண்ணன்மார்களின் மனைவியர் ஆறு பேரும் அவனிடமும், அவன் மனைவியிடமும் நிறைய வேலை வாங்கினார்கள். இருவரும் மிகவும் பொறுமையோடு குடும்பம் நடத்தி வந்தார்கள்.
நாள்தோறும் சமையல் முடிந்தவுடன் கிழவி தன் ஆறு பிள்ளைகளையும் அழைத்து உணவு படைப்பாள். பின் அவர்கள் சாப்பிட்டு மீந்ததை எடுத்து ஒரு தட்டில் வைப்பாள். பிறகு போலாநாத்தை அழைத்து அதைப் புதிய உணவு போலக் கொடுப்பாள். நாள் தோறும் இப்படியே அவள் செய்து வந்தாள். இதை அறியாத போலாநாத் வேறுபாடில்லாமல் அந்த உணவுகளை உண்பதுடன் தாயிடம் எப்போதும் போல பற்றோடும், பக்தியோடும் இருந்து வந்தான்.
ஒருநாள் தன் கணவனுக்கு அவன் தாய் எச்சில் உணவுகளை எடுத்து வைத்துக் கொடுப்பதை சுனீதி பார்த்துவிட்டாள். அவள் உள்ளம் வேதனையால் விம்மியது; கண்கள் கலங்கின.
அன்று இரவில் சுனீதி தன் கணவனிடம் இதைப் பற்றிக் கூற விரும்பினாள். ஆனாலும், கணவன் சினம் அடைவானோ என்று தயங்கினாள்.
அவள் தயக்கத்தைக் கண்டு வியப்படைந்த போலாநாத் “எதுவாக இருந்தால் என்ன? தைரியமாகச் சொல்” என்று கூறினான்.
அவள் அன்னை அவனுக்கு எச்சில் உணவுகளைப் படைப்பது பற்றி எடுத்துக் கூறினாள்.
“ஒரு போதும் என்தாய் இப்படிச் செய்யமாட்டாள்” என்று அவன் கூறினான்.
“உங்களுக்கு உங்கள் தாயிடம் மரியாதையும், பற்றும், பக்தியும் இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். அதே சமயம் என் கணவரின் மானமும், மரியாதையும் எனக்கு முக்கியமல்லவா? நான் என் கண்களால் பார்த்ததையே கூறுகிறேன். நீங்கள் ஒரு முறை பாருங்கள். உங்களுக்கு அப்பொழுதுதான் என் பேச்சில் நம்பிக்கை ஏற்படும்” என்று சுனீதி கூறினாள்.
மறுநாளே இதுபற்றிய உண்மையை அறிந்து கொண்டு விட வேண்டும் என்ற துடிப்பு அவனுக்கு ஏற்பட்டது.
அவன் நினைத்தற்கு ஏற்ப மறுநாள் பெரிய பண்டிகை. எனவே, பலவகைத் தின்பண்டங்களைச் செய்தார்கள். தன் எண்ணத்தைச் செயலாக்கிக்கொள்ள நினைத்த போலாநாத் வயிற்று வலி என்று கூறிவிட்டு, சமையல் கட்டின் ஒரு மூலையில் படுத்துக்கொண்டான். போர் வையை வேறு இழுத்துப் போர்த்திக் கொண்டான்.
வழக்கம் போல் கிழவி ஆறு பிள்ளைகளையும் சாப்பிட அழைத்தாள். அவர்கள் சாப்பிட்டுச் சென்ற பிறகு போலாநாத் தூங்குவதாக நினைத்து, அவள் அவர்கள் உண்டு மீந்த எச்சில் பொருட்களைத் தட்டில் எடுத்து வைத்தாள்.
பிறகு அதை எடுத்துக் கொண்டு போலாநாத் படுத்திருந்த இடத்திற்கு சென்றாள். தட்டி எழுப்பினாள். தூங்குவது போலப் படுத்திருந்த அவனும் எழுந்தான். “சாப்பிடு” என்று அன்போடு கூறுபவள் போல நடித்தாள்.
தாயின் ஓரவஞ்சனையான செயல்களை கண்ட போலாநாத் மிகுந்த வேதனையை அடைந்தான். துயரத்தால் அவன் மனம் குன்றியது. நாம் சம்பாதிக்காததுதானே இந்த நிலைக்குக் காரணம் என்று மனம் புழுங்கினான். தன் மனைவி சொன்னது முற்றிலும் உண்மை என்பதை உணர்ந்தான். தாயின்மீது அவனுக்குக் கடுமையான வெறுப்பு ஏற்பட்டது. ஆயினும், பெற்றவள் என்பதால் பெரும் மரியாதை வைத்த அவன் தன் வெறுப்பை வெளியே காட்டவில்லை. “அம்மா எனக்குத்தான் வயிற்று வலி என்று சொன்னேனே, சாப்பாடு வேண்டாம் ” என்று கூறினான்.
ஒப்புக்குத்தானே அவள் சாப்பாடு போடுகிறாள், உண்மையாகவா போடுகிறாள்? எனவே அவன் வேண்டாம் என்று கூறியதும் அவள் சாப்பாட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
“அம்மா” என்று போலாநாத் அழைத்தான், “என்ன?” என்று தாய் கேட்டாள்.
“அம்மா ” நான் நாளை வெளியூர் போகலாம் என்று இருக்கிறேன் என்று கூறினான்.
“ஏன்?!” என்று தாய் கேட்டாள்.
போலாநாத் மவுனமாக இருந்தான். மகன் ஏதோ வெறுப்பாகப் பேசுகிறான் என்பதைக் கிழவி புரிந்து கொண்டாள். அவன் போய்விட்டால் எச்சில் சோறு கூடப் போட வேண்டாமல்லவா? “நாளை போவதை இன்றைக்கே போயேன் ” என்று அவள் சீறினாள்.
அப்பொழுதே புறப்படுவதெனப் போலாநாத் முடிவு செய்தான். தூரத்தில் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்ற சுனீதியின் கண்களில் நீர் பெருகியது.
போலாநாத்தின் கண்களும் கலங்கின. அவன் அங்கிருந்து மனைவி நிற்கும் இடத்திற்குச் சென்றான். அவளை மாட்டுத் தொழுவம் பக்கம் அழைத்துச் சென்றான்.
மாமியார் ஏதாவது கூறுவாள் என்று பயந்து அவள் சாணத்தைத் தட்டத் தொடங்கினாள்.
“சுனீதி! நான் வெளியூர் போவதென முடிவு செய்து விட்டேன் ” என்று போலாநாத் கூறினான்.
அவன் முடிவு அவளுக்கு மகிழ்ச்சியே தந்தது என்றாலும் கணவன் உண்ணாமல் பட்டினியாகப் புறப்படுவதை எண்ணிக் கலங்கினாள்.
“சாப்பிடாமல் போகிறீர்களே ” என்று அவள் கேட்டாள்.
“நாயினும் கேவலமாக எச்சில் உணவை உண்டு செல்வதைக் காட்டிலும்; உண்ணாமல் செல்வதே மேல். நீ இவர்களிடமிருந்தால் மிகவும் துன்பப்படுவாய். எனவே உன் தந்தையிடம் போய்விடு. நான் வந்த பிறகு வரலாம்!” என்று அவன் கூறினான்.
“நான் பிறந்த இடத்திற்கு போக மாட்டேன். துன்பமோ, இன்பமோ புகுந்த இடத்திலேயே இருப்பேன்; நீங்கள் சீக்கிரம் வந்து விடுங்கள்” என்று அவள் கூறினாள்.
“சுனீதி, உன் உயர்ந்த பண்புக்கு ஒரு குறையும் வராது நீ என்றும் தெய்வபக்தியோடு தர்மத்தை மதித்து நட; பெரியோர்களை வணங்கி வாழ்ந்துவா” என்று அவன் கூறினான்.
“என்னைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதீர்கள் நமக்குத் தெய்வம் துணை நிற்கும் ” என்று கூறினாள்.
“உங்கள் அன்பின் அடையாளமாக எனக்கு ஏதாவது தந்து செல்லுங்கள்” என வேண்டினாள். உடனே அவன தன் விரலில் இருந்த மோதிரத்தை எடுத்து அவளுக்கு அணிவித்தான்.
“உன் அன்பின் அடையாளமாக ஏதாவது எனக்குக் கொடு” என்று அவன் கூறினான்.
“சுவாமி! என்னிடம் என்ன இருக்கிறது? அன்புதான் இருக்கிறது ” என்று கூறியவள், தன்னை மறந்து கணவனைத் தழுவிக் கொண்டதால் அவள் கை அடையாளங்கள் அவன் முதுகில் பட்டன.
சாணிக்கை பட்டுவிட்டதே... என்று அவள் வருந்தினாள், “வருந்தாதே, அதுவும் அன்பின் அடையாளம் தானே ” என்று கூறினான்.
“இந்தப் பேதையை நீங்க் ஒரு போதும் மறந்து விடாதீர்கள்” என்று கண்களில் நீர் மல்க வேண்டியவள், அவன் பாதங்களில் விழுந்து வணங்கி விடை கொடுத்தாள். போலாநாத் புறப்பட்டுச் சென்றான்.
அவன் சென்ற பிறகு மாமியாரும், மூத்த மருமக்கள் ஆறுபேரும் சுனீதியை எந்த நேரமும் இரக்கமில்லாமல் வேலை வாங்கத் தொடங்கினார்கள். மாட்டுக் கொட்டிலைக் கழுவுவது, சாணி தட்டுவது, மாட்டைக் குளிப்பாட்டுவது, பால்கறப்பது ஆகிய எல்லா வேலைகளையும் அவளே செய்தாள். ஆனால், அவற்றை அவள் சுமையென நினையாமல் புண்ணியமாக எண்ணியே செய்து வந்தாள்.
இராமபிரானிடமிருந்து கொண்டு வந்து அனுமான் கொடுத்த கணையாழியைக் கண்டு ஆனந்தப்பட்ட ஸீதாப்பிராட்டியைப் போல், வேலைகள் முடிந்த நேரத்தில் கணவன் கொடுத்த மோதிரத்தைப் பர்த்து அவள் மகிழந்தாள். அவன் விரைவில் வரவேண்டும் என்று தான் இளமைக் காலம் முதலே வணங்கி வரும் ஸ்ரீ சந்தோஷிமாதாவைப் பிரார்த்தித்தாள்.
போலாநாத் பசி தாகத்தோடு நடந்து கொண்டே இருந்தான். களைப்பால் அவன் மிகுந்த இன்னலுக்கு ஆளானான். இரண்டாம் நாள் அவன் மாதவன்பூர் என்ற ஊரை அடைந்தான். மாலை நேரத்தில் செய்வதறியாது கடைவீதி வழியே நடந்து கொண்டிருந்தான். கடை வீதியின் கடைசிப்பகுதியில் சில லேவாதேவிக் கடைகள் (கொடுக்கல் வாங்கல்) இருந்தன. அதில் அந்த நேரத்திலேயே சில கடைகளை அதன் முதலாளிகள் மூடிக் கொண்டு சென்று விட்டார்கள். ஒரு கடையில் வியாபாரி ஒருவர் தனியாக உட்கார்ந்திருந்தார். அங்கு சந்தடி குறைவாக இருந்தது. பக்கத்துக் கடைகளும் மூடி இருந்தன. இதைப்பயன்படுத்திக்கொண்டு அவரை அடித்துப் போட்டு விட்டுப் பணங்களையும், நகைகளையும் அள்ளிச் செல்லும் நோக்கத்தோடு திருடன் ஒருவன் அந்த வியாபாரிக்குப் பின்புறம் கையில் தடியோடு, அடிமேல் அடிவைத்து வந்து கொண்டிருந்தான்.
இந்தக் காட்சியை அப்பக்கமாக வந்து கொண்டிருந்த போலாநாத் பார்த்துவிட்டான். இயல்பாகவே ஈவு, இரக்கம் மிகுந்த அவனுக்கு வியாபாரியைக் காப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டது. அசுரத்தனமாகத் தைரியம் ஏற்பட்டது. உடம்பில் தெம்பு பிறந்தது. பாய்ந்து சென்று அந்தத் திருடனை அவன் பிடித்தான். அகப்பட்டுக் கொண்ட திருடன் தப்பினால் போதும் என்று ஓடத் தொடங்கினான்.
வியாபாரி நடந்ததை அறிந்தார். போலாநாத்தின் உதவியை மிகவும் போற்றினார். “காலத்தால் செய்யும் உதவிதான் சிறந்தது” அதை நீ செய்திருக்கிறாய் என்று பாராட்டினார். பிறகு போலாநாத்தை ஆதரவுடன் தன் அருகில் அமரச் சொன்னார். அவனை பற்றி விவரங்களை கேட்டார்.
போலாநாத் அவரிடம் தன் சோதனை மிகுந்த கதையைக் கூறினான். “இன்றிலிருந்து உனக்கு நற்காலம்தான்; என் உயிரைக் காத்தாய்; உன் துயரத்தை நான் போக்குகிறேன். இனி நீ என் பிள்ளை போல!” என்று கூறி அவனைத்தன் இல்லத்திற்கு அவர் அழைத்துச் சென்றார்; குளிக்கச் சொன்னார்; புதிய ஆடைகளை கொடுத்தார்; உணவு உண்ணச் சொன்னார்; தன் கடையிலே வேலை பார்க்குமாறும், தக்க ஊதியம் தருவதாகவும் கூறினார்.
மறுநாள் முதல் போலாநாத் கடைக்குச் சென்றான். பொறுப்போடு காரியங்களைக் கவனித்து வரலானான்.
இந்தச் சூழ்நிலையில் இவன் இருக்க, பல்வேறு துன்பங்களுக்கு இலக்காகி வந்த சுனீதி நாள்தோறும் மானசீகமாக ஸ்ரீஸந்தோஷி மாதாவை வணங்கி வந்தாள். நாட்டில் ஸ்ரீஸந்தோஷிமாதாவை வணங்குபவர்களும் அவள் விரதத்தை மேற்கொள்பவர்களும் பெருகி வருவதை ‘உமாமகேசுவரியும், இலக்குமியும், ஸரஸ்வதியும்’ கண்டார்கள்.
“விண்ணுலகின் வெற்றித் தெய்வங்களான நமக்கில்லாத பெருமை மண்ணுலகில் இந்தச் ஸந்தோஷிக்கு இருக்கிறதே!” என்று அவர்கள் எண்ணினார்கள். பெருந்துன்பத்திற்கு இலக்காகி நிற்கும் சுனீதி தங்களை நினைக்காமல் ஸந்தோஷியைத்தானே நினைக்கிறாள் என்று அவர்கள் வருத்தமுற்றார்கள்.
எனவே, அந்த முத்தேவிகளும் போலாநாத்தைப் பெரியவனாக்கி, அதன் மூலம் அவன் சுனீதியை மறக்கும் படிச் செய்ய நினைத்தார்கள்.
உமாமகேச்வரி அவனுக்குத் தைரியத்தை நல்கினாள். இலக்குமி பொருளை நல்கினாள். ஸரஸ்வதி கல்வியை நல்கினாள்.
போலாநாத் நாளுக்குநாள் மிகவும் திடமாக, மிக நுட்பமாகத் தொழிலைக் கவனித்தான். பணம் ஒன்றுக்கு பத்தாகப் பெருகியது.
போலாநாத் சாமார்த்தியத்தையும், அதிர்ஷ்டத்தையும் கண்ட அந்த வியாபாரி அவனைச் சமப்பங்குதாரன் ஆக்கி அவனிடம் கடை மேற்பார்வையை ஒப்படைத்தான். பின் கவலையற்ற நிலையில் தீர்த்த யாத்திரை புறப்பட்டான்.
கடை வேலைகளாலும் கணக்கின்றிப் பொருள் பெருகியதாலும் போலாநாத் சுனீதியை முற்றும் மறந்தான். மூன்று தேவியின் எண்ணமும் அதுதானே!
சுனீதி நிலைமை நாளுக்குநாள் மோசமாயிற்று. மாடுகளோடு அவள் மாடாக உழைத்தாள். மாட்டுக் கொட்டிலில் அவள் குடியிருக்கும் நிலைமை உண்டாயிற்று. வீட்டுவேலைகளைப் பார்ப்பதோடு மட்டும் கிழவி அவளை விட்டு விடவில்லை. காட்டிற்குச் சென்று விறகு கொண்டு வரும்படியும் கட்டாயப்படுத்தினாள்.
கணவன் ஒருநாள் வருவான், கவலைகள் அனைத்தும் தீரும் என்று நம்பி எல்லாக் கொடுமையையும் அவள் பொறுத்துக் கொண்டு வந்தாள். என்றாலும் நாள் ஆக ஆகக் கணவன் வராததும், எந்தத் தகவலும் வராததும் அவளுக்குப் பெருங்கவலையைத் தந்தது.
ஒரு நாள் அவள் விறகுக்கட்டுடன் வீட்டை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தாள். கணவன் நலமுடன் வருவாரா? என்று எண்ணமிட்டுக் கொண்டே வந்தவள் கணவன் நலமுடன் வர வேண்டுமென்று ஸ்ரீஸந்தோஷி மாதாவைப் பிரார்த்தித்துக் கொண்டே நடந்தாள்.
சற்றுத் தொலைவிலிருந்து கோயில் மணி ஓசை கேட்டது. அது அவளுக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது.
மணி ஓசை வந்த பக்கம் அவள் போனாள். அங்கே அழகிய சிறிய கோயில் ஒன்று இருப்பதைக் கண்டாள். விறகுக் கட்டையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
அங்கே ஒரு பெண் கதை படித்துக் கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி சில பெண்கள் உட்கார்ந்து கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
சுனீதி ஒரு ஓரமாக நின்று அந்தக் கதையைக் கேட்டாள். அந்த அம்மாள் ஸ்ரீஸந்தோஷிமாதாவின் கதையைத்தான் படிக்கிறாள் என்பது அவளுக்குப் புரிந்தது. ஆனாலும், அதற்கு மேல் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை.
கதை படித்து முடித்ததும் அம்பாளுக்கு ஆரத்தி எடுத்து, அனைவருக்கும் பிரஸாதம் வழங்கியபோது அந்த அம்மாள் சுனீதி நிற்பதைக் கண்டாள். அவளைத் தன் அருகில் அழைத்து விசாரித்தாள்.
விறகு வெட்ட வந்தவள் மணி ஓசை கேட்டு இங்கு வந்தேன். “நீங்கள் என்ன செய்கிறீர்கள்” என்று அவள் கேட்டாள்.
“நாங்கள் அனைவரும் ஸந்தோஷிமாதாவின் விரதத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்று அந்த அம்மாள் கூறினாள்.
“எனக்கு ஸந்தோஷிமாதா கதை தெரியும். ஆனால் விரதம் எடுக்கும் விவரங்கள் தெரியாது! அதை எடுப்பதால் என்ன பயன்?” என்று அவள் கேட்டாள்.
“ஸந்தோஷிமாதா விரதம் இருப்பதால் பல நன்மைகள் உண்டாகும். இந்த விரதத்தை மேற்கொண்டால் எண்ணியது நடக்கும்! இனிய கணவன் கிடைப்பான்! பிரிந்த கணவன் வருவான். சந்தான பாக்கியம் உண்டாகும். செல்வம் பெருகும், குடும்பத்தில் குழப்பம் இருந்தால் நீங்கும். ஸகல நலன்களும் உண்டாகும். அனைவருக்கும் ஸந்தோஷி மாதா விரதம் பெரும் பலனைத் தருவதோடு பெண்களுக்கு ஈடு இணையற்ற பலனைத் தரும்.
“பிரிந்த கணவன் வருவாரா”? என்று மிகுந்த ஆவலோடு சுனீதி கேட்டாள்.
“கண்டிப்பாக வருவார்! களிப்பான வாழ்க்கை தருவார் தங்கையே! உனக்கு ஓர் உண்மையை சொல்கிறேன்.”
உமாமகேச்வரியான ஆதிபராசக்தியால் மனோவலிமை பெருகும். லட்சுமியால் செல்வம் சிறக்கும். ஸரஸ்வதியால் கல்வி உயரும். ஆனால், குடும்பத்தில் கணவன், மனைவியருக்குமிடையே ஸந்தோஷம் பெருகுவது ஸந்தோஷிமாதாவாலேயே நடக்கும். மூன்று தேவியர்களின் அருளைப் பெற்றுப் பிறந்தவள்தான் இந்தச் ஸந்தோஷிமாதா என்றாலும் அவளுக்கே இந்தச் சக்தி உரியதாக விளங்குகிறது என்று அந்தப் பெண் கூறினாள்.
ஸந்தோஷிமாதாவின் விரத மகிமையைக் கேட்டுப் பக்திப் பரவசத்திற்கு ஆளான சுனீதி “அன்பு சகோதரி! தயவு செய்து ஸந்தோஷிமாதா விரதம் பற்றிய விவரங்களை கூறினீர்களானால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்று கூறினாள். சுனீதியைத் தன் அருகில் அமரச் சொன்ன அந்தப் பெண் விரதம் மேற்கொள்ளத் தக்க விவரங்கள் கூறினாள்.
தெய்வம் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், சில தெய்வங்களுக்குச் செய்யும் விரதங்களுக்கு, பெரும் பொருட்செலவு ஏற்படும். ஸந்தோஷிமாதா விரதத்தைப் பரம ஏழை கூடச் செய்யலாம். அவ்வளவு எளிமையானது. ஆனால், பலன் தருவதில் மிகவும் வலிமை மிக்கது. விரதத்தை வீட்டின் உள்ளேயோ, வீட்டுக்கு வெளியேயோ எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் செய்யுமிடம் அமைதி உடையதாகத் தூய்மை உடையதாக இருக்க வேண்டும். இந்த விரதத்தை வெள்ளிக்கிழமை தொடங்கலாம். ஸந்தோஷிமாதாவின் படம் ஒன்றை வாங்கி வந்து ஒரு பலகையில் வைக்க வேண்டும். அதற்கு முன் விளக்கை ஏற்ற வேண்டும். ஒரு கலசத்தில் நீரை நிறைத்து, மாவிலைகள் வைத்து, அதன் மீது ஒரு தேங்காயை வைக்க வேண்டும். ஸந்தோஷிமாதாவிற்கு மிகவும் பிடித்தது வறுத்த கடலையும் வெல்லமும் தான். அவரவர்களின் சக்திக்குத் தகுந்தவாறு வறுத்தகடலையும், வெல்லமும் வாங்கி ஸந்தோஷிமாதாவின் படத்திற்கு முன்னால் வைத்துக் கொள்ள வேண்டும். விரதத்தை ஆரம்பிக்கும் முன்னர் வறுத்தகடலையும், வெல்லத்தையும் எடுத்துக் கொண்டு சங்கல்பம் செய்ய வேண்டும். பிறகு ஸந்தோஷி மாதாவைப் பூஜைசெய்து கதையைச் சிரத்தையோடு படிக்க வேண்டும், அல்லது படிக்கச் சொல்லிக் கேட்க வேண்டும்.
கதை முடிந்ததும் ஸந்தோஷிமாதாவைப் பற்றி தோத்திரப்பாடலைப் பாடி ஆரத்தி எடுக்க வேண்டும். பின் நைவேத்தியம் செய்து கலசத்தில் உள்ள நீரை தீர்த்தமாகத் தானும் உட்கொண்டு அனைவருக்கும் கொடுத்த பின், நீரை துளசிச் செடிக்கு ஊற்ற வேணடும் என்று கூறிய அந்தப் பெண் மேலும், சில விவரங்களைக் கூறினாள்.
பூஜையைக் காலங்களில் அல்லது மாலையில் தொடங்கலாம். பூஜை செய்யும் இடம் அமைதியுடையதாக இருக்க வேண்டும். பூஜையைத் தொடங்குமுன் சாப்பிடக்கூடாது. எதையும் முறையாக ஒழுங்காகப் பயபக்தியோடு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் மாதாவின் அருள் விரைவில் கிட்டும். நாம் நினைத்த காரியம் முடிந்து விட்டால் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். பூரி, முந்திரிப் பருப்பு பாயஸம், கடலைப் பருப்பு இவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். அன்று அவசியம் தேங்காய் உடைத்துப் பூஜை பண்ண வேண்டும். பூஜை முடிந்ததும் எல்லோருக்கும் பிரஸாதம் கொடுக்க வேண்டும். விரதம் பூர்த்தியாகும் அன்று வீட்டில் மச்சினர் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு உணவு படைக்க வேண்டும். இல்லையேல் வேறு எட்டுக் குழந்தைகளுக்குச் சாப்பாடு போடவேண்டும். அவர்கள் சாப்பிட்ட பின் கண்டிப்பாகத் தட்சிணை கொடுக்கக்கூடாது. இவற்றில் மிக முக்கியம் என்னவென்றால், விரதம் பூர்த்தியாகிற வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புளிப்புப் பதார்த்தம் சாப்பிடக்கூடாது. விரதம் பூர்த்தியாகிற அன்று புளிப்புப் பொருட்களை சாப்பிடாமல் இருப்பதோடு, யாருக்கும் கொடுக்கவும் கூடாது. “கொடுத்தால் விரதம் பங்கப்படும்” என்று அந்த அம்மாள் கூறினாள்.
சுனீதி மன நிறைவோடு சன்னிதிக்குச் சென்று ஸந்தோஷி மாதாவை வணங்கி விட்டு அங்கிருந்த பெண்களிடம் விடை பெற்றுக்கொண்டு விறகுக் கட்டைத்தலையில் வைத்துக் கொண்டு புறப்பட்டாள்.
வீட்டிற்கு வரும் வழியிலேயே ஸந்தோஷிமாதா விரதத்தை எடுத்துக் கொள்வது என்ற முடிவிற்கு சுனீதி வந்தாள். விரதம் செய்வதற்கென்று மாட்டுக்கொட்டிலுக்குப் பக்கத்தில் அவள் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தாள். அடுத்து வந்த வெள்ளிக்கிழமையன்று அவள் விரதத்தை மேற்கொண்டாள்; நீராடினாள். ஸந்தோஷிமாதா படம் ஒன்றைப் பீடத்தின் மீது வைத்தாள். வறுத்த கடலையும், வெல்லமும் வாங்கி வந்தாள். அந்திப்பொழுது வந்ததும் விளக்கை ஏற்றினாள். கலசத்தில் நீரை ஊற்றித் தேங்காயை வைத்தாள். மாதாவின் பெயரைச் சொல்லிச் சங்கல்பம் செய்து கொண்டாள். தன் கணவன் விரைவில் வரவேண்டும். குடும்பத்தில் நிம்மதி பெருக வேண்டும் என்று பூரிப்போடு பிரார்த்தித்தாள். பிறகு பூஜை செய்து பிரஸாதத்தை உண்டாள்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுனீதி தவறாமல் விரதம் இருந்து வந்தாள். அவள் பக்திக்கு மாதா இரங்கினாள்.
உமாமகேச்வரியான பராசக்தி, லக்ஷ்மி, ஸரஸ்வதி இவர்கள் ஒன்றுகூடிச்செய்த முடிவின்படி போலாநாத் சுனீதியை மறந்திருந்தான். இப்பொழுது ஸந்தோஷிமாதாவின் அருளால் மீண்டும் அவனுக்கு மனைவியின் நினைவு வந்தது. அவனிருந்த மாதவன்பூரிலிருந்து வெளியூர் புறப்பட்ட ஒருவன், போலாநாத்தின் சொந்த ஊரின் வழியாகச் செல்லுவதாகக் கூறினான். அவனிடம் சுனீதியை விசாரித்து வருமாறு போலாநாத் சொல்லி அனுப்பினான். அவன் மூன்றாம் வெள்ளிக்கிழமை வந்து போலாநாத் விசாரித்து வரச் சொன்னதாக சுனீதியிடம் தகவலைக் கூறிச்சென்றான். பின் ஆச்சரியமாக ஏழாம் வெள்ளிக்கிழமையன்று போலாநாத் கொடுக்கச் சொன்னதாகக் கூறி இருநூறு ரூபாய் வேறொருவன் கொடுத்துச் சென்றான். அந்த ரூபாய்களை உடனே சுனீதி தன் மாமியாரிடம் மிகுந்த கனிவுடன் கொடுத்து விட்டாள்.
கணவனை நினைத்து சுனீதி மிக்க மகிழ்ச்சி அடைந்தாள். எப்போதும் ஸந்தோஷிமாதாவைத் துதித்த வண்ணமே இருந்தாள்.
சுனீதியின் மாமியாரும் மைத்துனர்களும், அவர்களின் மனைவிமார்களும் அவள் மிகவும் துயரப்பட்டுக்கொண்டிருந்த பொழுது அவள்மீது பொறாமைப்பட்டவர்கள், ஸந்தோஷப்படுகிறாள் என்றால் அவர்கள் எப்படிச் சும்மா இருப்பார்கள்? மிகவும் பொறமைப்பட்ட ஆரம்பித்தார்கள். இழிவாகப் பேசினார்கள்; கொடுமையாக நடத்தினார்கள். இவற்றையெல்லாம் சுனீதி பொறுமையாக சகித்துக் கொண்டாள், அரக்கர்களிடம் அகப்பட்ட ஸீதாதேவி எவ்வாறு ராமபிரானையே நினைத்துக்கொண்டு ஸகல துன்பங்களையும் பொறுத்துக் கொண்டாளோ அதே போல.
ஸந்தோஷிமாதாவின் கோயிலுக்குச் சென்றாள். அவள் பாதங்களைப் பற்றிக்கொண்டாள். கண்ணீர் பெருக்கினாள். “தாயே, உன்னை நான் பொன் வேண்டும். பொருள் வேண்டும் என்றா கேட்கிறேன்? என் கண்கண்ட தெய்வம் கணவன் வேண்டும் என்று தான் மன்றாடுகிறேன். அவரோடு சேர்ந்து வாழும் பாக்கியம் வேண்டும் என்று தானே கொஞ்சுகிறேன்” என்று வேண்டினாள்.
ஸதோஷிமாதா மனம் இரங்கினாள். தூங்கிக் கொண்டிருந்தபோதே போலாநாத்தின் கனவில் தோன்றினாள். ‘மகனே! இங்குச் சுகமாக இருக்கிறாய்! ஆனால், உன் மனைவி அங்கு பெருந்துன்பங்களுக்கு ஆளாகி தவிக்கிறாள். உனக்குப் பணம் காசு, நவரத்தினங்கள் இவைகள் சொத்தாக இருக்கலாம். ஆனால் கற்புடைப் பெண்ணுக்குக் கணவன்தான் சகலசொத்து, உன் வரவுக்காக அந்த உத்தமி ஒவ்வொரு கணமும் ஏங்குகிறாள். நீயோ இங்கும் கவலையில்லாமல் தூங்குகிறாய்! நீ உடனே அவளிடம் செல்வாயாக ” என்று தூண்டினாள்.
கொடுத்த பணங்கள் வசூலாகாமல் இருக்கின்றன, முதலாளியோ ஊரில் இல்லை. நான் எப்படி உடனே போகமுடியும்” என்று போலாநாத் கேட்டான்.
“மகனே! மனமிருந்தால் மார்க்கமா இல்லை! நாளை முதலில் காலையில் நீராடிவிட்டு, ஸந்தோஷிமாதாவான என் நாமத்தைக் கூறி நெய் விளக்கேற்றி விழுந்து வணங்கிப் பிரார்த்தனை செய், விரைவிலேயே உன் எண்ணம் பலிதமாகும்” என்று கூறித் தாய் மறைந்தாள்.
மறுநாள் எழுந்து இரவு கண்ட கனைவப்பற்றி மற்றவர்களிடம் அவன் கூறினான். அவர்கள் கனவு உண்மையாகுமா? என்று கூறி அவனை கேலி செய்தார்கள், என்றாலும் முழு நம்பிக்கையுடன் அவன் ஸந்தோஷி மாதாவை முறைப்படித் துதித்தான். பின்பு கடையில் அமர்ந்தான். வசூல் ஆகவேண்டிய தொகைகள் ஆச்சரியமாக வசூல் ஆயின. யாத்திரை சென்றிருந்த முதலாளி எதிர்பாராத நிலையில் வந்து சேர்ந்தார். அவன் ஊருக்கு போக விரும்புவதையறிந்து பெரும் பணமும் ஏராளமான பொருள்களும் கொடுத்தார். போலாநாத் ஊரை நோக்கிப் புறப்பட்டான்.
ஒரு வெள்ளிக்கிழமையன்று வழக்கம்போலச் சுனீதி காட்டிற்கு விறகு கொண்டுவரச் சென்றாள். தாயை வணங்கிவிட்டுக் கோயிலில் உட்காரும் பொழுதெல்லாம் தாயின் அரவணைப்பில் கிடைக்கும் ஆனந்தமே அவளுக்கு ஏற்பட்டு வந்தது.
அந்தச் சமயத்தில் ஆகாயத்தில் தூசி எழுவதை அவள் கண்டாள். இது எக்காரணத்தால் ஏற்படுகிறது? என்று மாதாவை நோக்கிக் கேட்டாள்.
“மகளே! உன் கணவன் வந்து கொண்டிருக்கின்றான் கொண்டு வந்துள்ள விறகுகளை மூன்று கட்டுகளாகக் கட்டி ஒன்றை நதிக்கரையில் வைத்து விடு. யாத்ரீகர்கள் அதைப் பயன்படுத்துவார்கள். உனக்கு நன்மைகள் பெருகும். இரண்டாவது கட்டை என் கோயிலிலே வை. வரும் உன் கணவன் இங்குத் தங்கி உணவு தயாரித்து உண்டு, பின் வருவான். இன்னொரு கட்டையை நீ சுமந்து செல். உன் கணவன் வந்து, வீட்டிற்குள் உள்ளே செல்லும் சமயம் பார்த்து “மாமி! நாள்தோறும் கொண்டு வருவது போலவே இன்றும் விறகு கொண்டு வந்திருக்கின்றேன், வழக்கமாகக் கொடுக்கும் தவிட்டு ரொட்டியும், கொட்டாங்கச்சியில் தண்ணீரையும் கொடுங்கள்” என்று கேள். அதோடு உன் கணவன் வந்ததைக் காட்டிக் கொள்ளாமல் “இன்று நம் வீட்டிற்கு விருந்தாளி யார் வந்திருக்கிறார்கள் என்று கேள், நான் சொன்னவற்றை உன் மாமியாருக்குப் பயப்படாமல் தைரியமாகச் சொல். அதனால் உன் நிலையைக் கணவன் நன்கு புரிந்து கொள்வான். இதனால் உன் மீது உன் கணவனுக்கு அன்பும், அனுதாபமும், அக்கரையும் ஏற்படும்” என்று மாதா கூறினாள்.
அன்னை கூறியபடியே விறகுகளை மூன்று கட்டுகளாக்கி சுனீதி ஒன்றை ஆற்றங்கரையில் வைத்து விட்டு, இன்னொன்றை மாதாவின் கோயிலில் வைத்துவிட்டு<, மற்றுமொன்றைத் தூக்கிக் கொண்டு ஊரை நோக்கிப் புறப்பட்டாள்.
போலாநாத் வரும் வழியில் ஸ்ரீ ஸந்தேஷிமாதா கோயிலில் தங்கி சுனீதி வைத்துச் சென்ற விறகை எடுத்து அவற்றைக் கொண்டு உணவு சமைத்து சாப்பிட்டு விட்டு ஊரை நோக்கிச் சென்றான்; வீட்டை அடைந்தான்.
அவன் வீட்டுக்குள் நுழைந்த நேரம் பார்த்து சுனீதி வந்தாள். “மாமி! நாள்தோறும் கொண்டு வருவது போலவே இன்றும் விறகு கொண்டு வந்திருக்கிறேன். வழக்கமாகக் கொடுக்கும் தவிட்டு ரொட்டியும். கொட்டாங்கச்சியில் தண்ணீரையும் தாருங்கள்” என்று கூறியதோடு “இன்று நம் வீட்டிற்கு விருந்தாளி யார் வந்திருக்கிறார்கள்?” என்று கேட்டாள்.
உடனே கிழவி வெளியே வந்தாள். விருந்தாளியா; உன் கணவனல்லவா வந்திருக்கிறான். விரைவாகச் சென்று புதிய துணிமணிகளையெல்லாம் அணிந்து கொள்” என்று கூறி அவசரப்படுத்தினாள்.
இந்த நிலையில் போலாநாத் வெளியே வந்தான்.
போலாநாத்துக்குச் சுனீதியை அடையாளமே தெரியவில்லை. யாரோ வேலைக்காரி என்று முதலில் அவன் நினைத்து விட்டான். தான் வெளியூர் புறப்படும்போது அவள் கையில் அணிவித்த மோதிரம் அவன் பார்வையில் பட்டது. உடனே சுனீதிக்கா இந்த நிலை? என்று எண்ணிக் கலங்கினான். கிழவி செய்வதறியாது திருவடியைப் போல விழித்தாள். பிறகு சுனீதியைப் பற்றித் தவறாகச் சொல்ல முயன்றாள். போலாநாத் அதை நம்புவானா? பெற்ற மகனான தனக்கே எச்சில் உணவு படைத்தவளாயிற்றே என்று எண்ணிய அவன், அவள் பேச்சைப் பொருட்படுத்தாமல் வேறு ஒரு வீட்டுச்சாவியை அவளிடம் பெற்றுக் கொண்டு அவன் மனைவியை அழைத்துக் கொண்டு அங்கே சென்றான்.
அவளை அன்போடு தழுவி ஆறுதல் கூறினான். கண்களில் வழிந்த நீரை துடைத்தான். “ஸ்ரீஸந்தோஷி மாதாவின் அருளால் நாம் ஒன்று சேர்ந்துவிட்டோம். இனி ஸகல ஸௌகர்யங்களோடும் வாழ்வோம்” என்று கூறித் தான் கொண்டுவந்த பொருள்களையெல்லாம் மகிழ்ச்சியோடு அவளுக்கு காட்டினான்.
அந்த வீடு அரண்மனை போல ஆயிற்று. ஆனந்தமாக அவர்கள் அதில் வாழத் தொடங்கினார்கள்.
ஒரு நாள் ஸ்ரீஸந்தோஷிமாதாவின் விரத மஹிமையைச் சுனீதி தன் கணவனிடம் விவரித்தாள். வரும் வெள்ளிக்கிழமை விரதத்தை நிறைவு (உத்யாபனம்) செய்வோம் என்று கூறினாள். அவன் விரத மஹிமையை உணர்ந்தான். நிறைவு செய்ய உடன்பட்டான்.
வெள்ளிக்கிழமையன்று விரதத்தை நிறைவு செய்யச் சிறப்பான ஏற்பாடுகளைச் சுனீதி செய்தாள். அன்று அந்த விழாவிற்கு மைத்துனர்களின் பிள்ளைகளைச் சாப்பிட அழைத்தாள். சுனீதியின் விரதத்தைப் பங்கம் செய்ய இது தான் தக்க தருணம் என்று அந்தப் பிள்ளைகளின் தாய்மார்கள் எண்ணினார்கள். எனவே அவர்கள் பிள்ளைகளிடம் போகும்போதே, ‘நீங்கள் சாப்பிடும் போதே புளிப்புப் பண்டம் வாங்கி அங்கேயே சாப்பிட்டு விடுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார்கள்.
சுனீதி மைத்துனர்களின் பிள்ளைகளை வரிசையாக அமர்த்தி பூரி, பாயஸம், பருப்பு வகைகளைப் படைத்தாள். அவற்றை வயிறு புடைக்கத் தின்ற அவர்கள் “இனிப்பை அதிகமாகத்தின்று விட்டோம். புளிப்புப் பண்டம் ஏதாவது கொடுங்கள்” என்று அடம்பிடித்தார்கள் அவர்களை சுனீதி சமாதானப்படுத்தினாள். பிறகு தட்சிணைப்பணம் வேண்டும் என்று பொல்லாத பிள்ளைகள் கேட்டார்கள். தட்சிணைப் பணம் கொடுக்க கூடாது என்பதை மறந்து விட்ட சுனீதி உடனே அவர்களுக்குத் தட்சிணைப் பணம் கொடுத்தாள். அதை வாங்கி அந்தப் பையன்கள் உடனே கடைக்குச் சென்று புளியம் பழம் வாங்கி வந்து சுனீதி உத்யாபனம் செய்து இடத்திலேயே சாப்பிட்டார்கள். இதனால் சுனீதி பெரும் பயத்திற்கு, கலக்கத்திற்கும் ஆளானாள்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்ப மறுநாள் அவ்வூர் அரசனிடம் போலாநாத்தை அழைத்துச் சென்றார்கள். “உன் கணவன் வெளியூரில் பொருட்களைத் திருடிக்கொண்டு வந்து விட்டான். அதனால்தான் அரசர் அழைத்துப் வரச்சொல்லியுள்ளார். சரியான தண்டனை கிடைக்கும்” என்று சுனீதியின் மைத்துனன்மார் மனைவிகள் அவளைப் பெரிதும் பயமுறுத்தினார்கள்.
திக்கற்றவர்களுக்குத் தெய்வம்தானே துணை, “திக்கற்ற நிலையை அடைந்துவிட்டோமோ? கணவனுக்கு என்ன நேருமோ?” என்று கலவரத்திற்கு ஆளான சுனீதி ஸந்தோஷிமாதா கோயிலுக்கு ஓடினாள். மாதாவின் கால்களைப் பற்றிக் கொண்டாள். ‘தாயே நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்துவிடு; நான் ஒன்றுமறியாத பேதை என்று கதறினாள்.
ஸந்தோஷிமாதா பிரஸன்னமானாள், பெருங்கோபங்கொண்டு சீறினாள். “மகளே நீ என் விரதத்தைப் பங்கம் செய்து விட்டாய்! அந்தப் பிள்ளைகள் பணம் கேட்டபோது நீ கொடுத்திருக்கக்கூடாது. கொடுத்ததால் தானே அவர்கள் புளிப்பைத்தின்று விரதத்தின் புனிதத்தைக் கெடுத்து விட்டார்கள்” என்று மாதா கேட்டாள்.
“தாயே! நான் அறியாமை நிறைந்தவள். உன் விரதத்தைச் செய்கிற அளவுக்கு ஞானம் இல்லாதவள். குழந்தையின் கை கண்ணில் பட்டுவிட்டால் வெட்டிய எறிவார்கள்? அதைப் போலப் பேதை நான் செய்த தவற்றைப் பொறுத்தருள்வாயாக, மீண்டும் நான் முறைப்படி உத்யாபனம் செய்து விரதத்தை முடிக்கிறேன்” என்று கெஞ்சினாள்.
சுனீதியின் கள்ளங்கபடமற்ற பக்தியைக் கண்டு ஸந்தோஷி மாதா மிகவும் மனம் இரங்கினாள். “மகளே! உன் பக்தியை மெச்சுகிறேன். உனக்கு எந்தத் தீங்கும் நேராது. உனக்கு நான் என்றென்றும் துணையாய் இருப்பேன்” என்று கூறினாள்.