சபரிமலை புனிதத்தை கெடுக்கும் விஷப்பரீட்சை வேண்டாம்! : திண்டுக்கல் குருசாமிகள் அறிவுரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2018 12:11
திண்டுக்கல் : சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் விஷப் பரீட்சை வேண்டாம் என திண்டுக்கல் மூத்த குருசாமி திருப்பதி, 75, அறிவுறுத்தினார்.
அவர் கூறியது: என் சொந்த ஊர் புதுக்கோட்டை. திண்டுக்கல் வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. மலைக்கோட்டை அடிவாரம் ஐயப்பன் கோவிலில் தங்கி இருக்கிறேன். 1971ல் முதன் முறையாக சபரிமலை சென்றேன். ஒரே ஆண்டில் இரண்டு, மூன்று முறை செல்வேன். 30 ஆண்டுகள் சபரிமலைக்கு சென்றிருக்கிறேன். வயது முதிர்வால் சில ஆண்டுகளாக மலைக்கு செல்லவில்லை. இருமுடி கட்டும் பணியை தொடர்கிறேன்.
எருமேலி வரை வாகனத்தில் செல்வோம். அங்கிருந்து நடைப்பயணத்தை தொடங்குவோம். அடர்ந்து படர்ந்த வனத்தில் தான் இரவுவாசம். எந்த நேரமும் விலங்குகள் அபாயம் இருக்கும். பயணத்தில் காட்டு யானைகளை பார்த்து இருக்கிறேன். ஆனால் பயம் இருந்ததில்லை. வழித்துணையாய் வருவது ஐயப்பன் அல்லவா! காட்டு பயணத்துக்கு கூட பயப்படாத என்னை, உச்சநீதிமன்ற உத்தரவு பதைபதைக்க வைத்தது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்ல எதன் அடிப்படையில் உத்தரவிடப்பட்டது என்பது புதிராக இருக்கிறது. பிரமச்சாரியான ஐயப்பனை குறிப்பிட்ட வயது பெண்கள் பார்க்கக்கூடாது என்பது காலம்காலமாக கடைபிடிக்கப்படும் வழக்கம்.
பெண்களே எதிர்பார்க்காத, கேட்காத இந்த அனுமதி எதற்கு. நான் 10-50 வயது பெண்களுக்கு மாலை அணிவிக்க மாட்டேன். திண்டுக்கல் வட்டார ஐயப்ப பக்தர்கள் சங்கமும் இம்முடிவை எடுத்துள்ளது. நீதிமன்றம் அனுமதித்தாலும் பெண்கள் சபரிமலை வர தயாராக இல்லை. இவ்வாறு கூறினார்.
பெண்கள் காத்திருக்கணும்! குருசாமி தவகணேஷ்: நான் 26 ஆண்டுகளாக சபரிமலைக்கு செல்கிறேன். சபரிமலையில் ஐயப்பன் பிரம்மச்சரிய விரதம் இருக்கிறார். 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு ஆண்கள் மட்டுமே புனித யாத்திரை செல்கின்றனர். 18 படி ஏறும்போது மனம் அமைதி அடையும். பாவங்களை தொலைத்து விட்டு துாய்மையாகவே சபரிமலைக்கு செல்கின்றனர். 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் நிச்சயம் செல்லலாம். அதுவரை காத்திருக்க வேண்டும். வயது குறைவான பெண்களுக்கு மாலை அணிவிக்க மாட்டோம், என்றார்.