பதிவு செய்த நாள்
17
நவ
2018
02:11
கன்னிவாடி: வழிபாட்டு முறையில், முன்னோர்களின் செயல்பாடுகளில் மலைக்கோயில், குகைக்கோயில், தரைக்கோயில் போன்ற வகைகளுண்டு. இந்த மூன்று அம்சங்களுடன், மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் கொண்ட சித்தர்களின் வழிபாட்டு அமைப்பையும் கொண்டுள்ளது கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில்.
கன்னிவாடி அருகே சோமலிங்கபுரத்தில், மேற்குத்தொடர்ச்சி மலைக்குன்றில் இக்கோயில் உள்ளது. சித்தர்கள் வாழ்ந்த, வழிபட்ட இடமாக இன்றளவும் பக்தர்களின் கூட்டத்தால் புகழ்பெற்று விளங்குகிறது. ஓங்கார வடிவில் விநாயகர், இவருக்கு வாகனமாய் உள்ள நந்திக்கு வலதுபுறம் ஒரு காலும், இடதுபுறத்தில் 3 கால்கள் கொண்ட சிற்ப அமைப்பும் உள்ளது. சோமலிங்க சுவாமியின் எதிரே உள்ள நந்தியும், இதே அமைப்புதான்.தல விருட்ச மாய் வில்வமரமும், தீர்த்தமாக வேதி நீரூற்றும் உள்ளது. சிறப்புகள் குறித்து அர்ச்சகர் ம.ஆண்டவர் கூறியதாவது: கரூரார் ஜலத்திரட்டு என்ற நூலின்படி, போகர் இங்கு வந்தபோது அவரது சீடர்களான கொங்கணரும், கருவூராரும், இங்கு வாழ்ந்தது உறுதிப் படுத்தப்பட்டு உள்ளது. மெய்கண்ட சித்தர், குண்டலினி, முத்தானந்தர், வாலையானந்தர் ஆகியோர் இங்கு வழிபட்டுள்ளனர். ஓம்கார வடிவில் நந்தியும், நந்தி கழுத்தில் சிவலிங்கமும் அமைந்துள்ளன. பூர்வ ஜென்ம தோஷம் நீங்கும் சிறப்பு உண்டு.மெய்கண்ட சித்தர் தவம் புரியும் குகையும், போகர் நவபாஷாணம் அரைத்த உரலும், ஆண்டுகள் பல கடந்தும் சரித்திரம் பேசுகின்றன என்றார். இத்தலத்தின் சிறப்புகளை மேலும் அறிய, 99769 -62536ல் அழைக்கலாம்.