பதிவு செய்த நாள்
20
நவ
2018
12:11
திருப்பூர்:ராயபுரம் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர்.திருப்பூர், ராயபுரம் மத்திய வீதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணன் சுவாமி (ஸ்ரீ கிருஷ்ணர்) கோவிலில், திருப்பணி செய்து புதுப்பிக்கப்பட்டது.
ராஜகோபுரம், ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி புதிதாக அமைக்கப்பட்டன. கோவில் கர்ப்பகிரஹம் உள்ளிட்ட சன்னதிகள் அனைத்தும் சீரமைப்பு செய்யப்பட்டு, சுற்றுப்பிரகாரம் அனைத்தும் கற்கள் பதித்தும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.திருப்பணி நிறைவடைந்து நேற்று (நவம்., 19ல்) கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
17 ம் தேதி, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் ஆகியன நடந்தன.நேற்று (நவம்., 19ல்) காலை மூன்றாம் கால யாக பூைஜகளையடுத்து, கடம் புறப்பாடும், காலை 9:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தேரழுந்தூர் ஸ்ரீனிவாச பட்டாச்சார்யார் தலைமையில், கோபுர மகா கும்பாபிஷேகம் நடந்தது. தச தரிசனம், சிறப்பு அலங்கார பூஜை மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி பக்தர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் வக்கீல் வீரராகவன், வெங்கடபதி, கார்த்திகேயன், ராஜேந்திரன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
விழாவில், இன்று (நவம்., 20ல்) காலை 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், பகல் 11:00 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.