விருத்தாசலம் :விருத்தாசலம் செல்லியம்மன் கோவிலில் செடல் திருவிழாவையொட்டி பக்தர்கள் விமான அலகு குத்தி ஊர்வலம் சென்றனர். விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றங்கரையில் செல்லியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் செடல் உற்சவ திருவிழா நடப்பது வழக்கம். முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் நேற்று நடந்தது. மணிமுக்தா ஆற்றின் கரையிலிருந்து பச்சை காளியம்மன், பரமசிவன், வினாயகர், முருகன், மாரியம்மன், பார்வதி உள்ளிட்ட தெய்வங்களின் உருவங்களை வேடமணிந்தும், 60 அடி நீளமுள்ள அலகுகளை குத்தியும், விமான அலகு குத்தியும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்குச் சென்றனர். மேலும் தீ கரகம் எடுத்தும், பால்குடம் சுமந்தும் உடுக்கை, பம்பை, மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். சுமை தூக்க பயன்படுத்தப்படும் கிரேனில் பக்தர்கள் விமான அலகு குத்தி தொங்கியவாறு பக்தியுடன் சென்றது பொதுமக்களை பரவசமடைய செய்தது. ஊர்வலத்தைத் தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் சாமி வீதியுலா நடந்தது.