பதிவு செய்த நாள்
24
நவ
2018
04:11
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு, காணிக்கையாக வழங்கிய யானையை, இரண்டு ஆண்டுகளாக கொண்டு வராமல், நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் இருந்த வள்ளி யானை, 2010, நவ., 29ம் தேதி, உடல் நலக்குறைவால் இறந்தது.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், அசாம் மாநிலத்திற்குச் சென்று, 16 லட்சம் ரூபாய் செலவில், புதிய பெண் யானை வாங்கி, இரண்டு ஆண்டுகளாக அங்கேயே பராமரித்து வருகிறார்.
மலைக்கோவிலில், படாசெட்டி குளம் அருகே, யானை மண்டபம், 33 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. ஆனால், இரண்டு ஆண்டுகளாக, யானை மலைக் கோவிலுக்கு கொண்டு வரப்படவில்லை.மாவட்ட வனத்துறையினர் தகுதிச் சான்று வழங்காததால், யானை கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது என, கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.கோவில் நிர்வாகம், கால்நடை மருத்துவரிடம் இருந்து, தகுதிச் சான்று வாங்கி, எங்களிடம் கொடுக்காததால் தகுதிச் சான்று வழங்குவதில் தாமதம் என, வனத்துறையினர் கூறுகின்றனர்.விரைவில் யானையைக் கொண்டு வர வேண்டும்
என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.