பதிவு செய்த நாள்
16
பிப்
2012
11:02
திருநெல்வேலி:பாளை., சிவன் கோயில் தெப்பக்குள ஆக்ரமிப்பை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் தெரிவித்தார்.பாளை., திரிபுராந்தீஸ்வரர்( சிவன்) கோயில் தெப்பக்குளம் பல ஆண்டுகளாக ஆக்ரமிப்பில் இருந்து வருகிறது. இதனால் பாரம்பரிய மிக்க தெப்பத்திருவிழா நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது.இதற்கிடையே இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பாஜ.,வினர் தெப்பக்குள ஆக்ரமிப்புகளை அகற்றி, தெப்பத்திருவிழாவை மீண்டும் நடத்த கோரி மாவட்ட நிர்வாகத்திற்கும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் பல முறை கோரிக்கை மனு அளித்ததோடு, பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் பாளை., சிவன் கோயில் தெப்பக்குளத்தை ஆய்வு செய்தார். அப்போது இந்து முன்னணி மாவட்ட தலைவர் பாலாஜிகிருஷ்ணசுவாமி, விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் செல்லப்பாண்டியன், பாஜ., பாளை., மண்டல தலைவர் சுவாமி.சுப்பிரமணியன், பொது செயலாளர் சரவணன், துணை தலைவர் ராமாராவ் போன்றோர் பாளை., சிவன் கோயில் தெப்பக்குளத்தில் உள்ள ஆக்ரமிப்பை அகற்றி,மீண்டும் தெப்பத் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணை ஆணையரிடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து இணை ஆணையர் சுதர்சன் கூறுகையில், பாளை. சிவன் கோயில் தெப்பக்குளம் தொடர்பாக சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. இருப்பினும் கோயில் நிலங்கள், குளங்களை ஆக்ரமித்தல் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை கோர்ட்டில் சிறப்பு பிரிவு 78ன் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நெல்லை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் உள்ள கோர்ட்டில் இணை ஆணையர் முன்னிலையில் பாளை., சிவன் கோயில் தெப்பக்குள ஆக்ரமிப்பு சம்பந்தமான வழக்கு விசாரணை வரும் 28ம்தேதி மாலை 3 மணிக்கு நடக்கிறது. எனவே தெப்பக்குள ஆக்ரமிப்பு பகுதியில் உள்ளவர்கள் தங்களது கருத்துக்களை நேரில் ஆஜராகி தெரிவிக்கலாம்.இந்த வழக்கை விரைந்து முடித்து, தெப்பக்குள ஆக்ரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.ஆய்வின் போது பாளை.,சிவன் கோயில் செயல் அலுவலர் சாமித்துரை பாண்டியன், பாளை.,திருச்சிற்றம்பல வழிபாட்டு குழு நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.