பதிவு செய்த நாள்
03
டிச
2018
11:12
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா, வரும், 7ம் தேதி, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, 21 நாட்கள் நடைபெறும் ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவம், 8ம் தேதி துவங்குகிறது. விழாவையொட்டி, ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் முகூர்த்தக்கால் நடப்பட்டு, பரமபத வாசல் வழியாக, சந்திரபுஷ்கரணி வழியாக, மணல் வெளிக்கு செல்லும் பகுதிகளிலும், வெள்ளைக் கோபுர அருகிலும், பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.பரமபத வாசல் திறப்புக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, எல்.இ.டி., டிவிக்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. ஏகாதசி விழாவின் போது, நம்பெருமாள் அர்ச்சுண மண்டபத்தில் எழுந்தருளி காட்சியளிப்பார்.வரும், 17ம் தேதி மோகினி அலங்காரத்தில் சேவை சாதிப்பார். 18ம் தேதி காலையில் பரமபத வாசல் திறப்பு நடைபெறும். அடுத்து வரும் ராப்பத்து உற்சவத்தின் போது, 24ம் தேதி திருக்கைத்தல சேவையும், 25ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறியும், 28ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறும்.