பதிவு செய்த நாள்
05
டிச
2018
03:12
இறைவனின் திருமணக் கோலங்களைத் தரிசிப்பதால் சர்வ மங்கலங்களும் உண்டாகும் என்கின்றன ஞானநூல்கள். புகழ்பெற்ற சில சிவன்கோயில்களில் அம்மையும் அப்பனும் அருளும் திருமணக் கோலத்தை ஐவகையாகச் சிறப்பிப்பார்கள். அவை: கன்னிகாதான திருக்கோலம், கைத்தலம் பற்றுதல், வேள்வித்தீயை வலம்வரும் கோலம், முளைப்பாலிகை இடச்சொல்லும் திருக்கோலம், வரதான கோலம். நல்லதொரு நாளில் உறவுகள் சுற்றத்தார் முன்னிலையில் பெண்ணை மாப்பிள்ளைக்குத் தானமாக அளிப்பார்கள் பெண்ணின் பெற்றோர். இதையே கன்னிகாதானம் என்பார்கள். மதுரையில் அமைந்துள்ள... மீனாட்சியம்மை சுந்தரேஸ்வரின் திருக்கல்யாண தரிசனம் கன்னிகாதான திருக்கோலம் ஆகும். தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜனின் தேவியார் செய்தளித்த கல்யாண சுந்தரர் வடிவமும் கன்னிகாதான கோலத்திலேயே திகழ்கிறது.
திருமணச் சடங்கின்போது மந்திரங்கள் முழங்க மணமகன் மணமகளின் கையைப் பற்றுவதை ‘பாணிக்கிரகணம்’ என்பர். இந்தக் கோலத்தில் கிடைக்கும் திருக்கல்யாண தரிசனத்தை கைத்தலம் பற்றும் திருக்கோலம் என்பார்கள் பெரியோர்கள். திருமணஞ்சேரி, திருவாரூர், வேள்விக்குடி, கோனேரி ராஜபுரம் முதலான தலங்களில் இந்தத் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம். சிவ- பார்வதியர் வேள்வித் தீயை வலஞ் சுழித்து எழுந்ததை திருக்குற்றாலப் புராணம் அருமையாக விவரிக்கிறது. வேள்வியை வலம் வரும் திருமணக் கோலத்தில் அருளும் கல்யாணசுந்தரரை அச்சுதமங்கலம் சிவன்கோயில் கோஷ்டத்தில் தரிசிக்கலாம். திருமணம், கும்பாபிஷேகம் மற்றும் பெரும் விழாக்களில் முளைப்பாலிகை விடுதல் ஓர்அங்கமாகத் திகழ்கிறது. சிவ-பார்வதி கல்யாணத்தின் போது சப்தமாதர்கள் பாலிகைகளை ஏந்தி உடன் வந்ததைப் புராணங்கள் விவரிக்கின்றன. திருவீழிமிழலை கோயில், திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோயில், திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில் ஆகிய தலங்களில் இந்தத் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.
திருக்கல்யாணம் முடிந்ததும் அம்மையும் அப்பனும் உயர்ந்ததோர் ஆசனத்தில் அமர்ந்து, கல்யாணத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் வேண்டிய வரங்களை அளித்தனர். இப்படியான திருக்கோலத்தை வரதான கோலம் (உமாமகேஸ்வர திருவடிவம்) என்பர். வேதாரண்யம், நல்லூர் முதலான அனேக தலங்களில் இந்தத் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.