பதிவு செய்த நாள்
05
டிச
2018
03:12
தானம் கொடுப்பதால் கிட்டும் பலன்களை ஆகமங்கள் தெரிவிக்கின்றன. அதைத் தரும்போது சொல்லவேண்டிய சுலோகங்களும் உள்ளன. அவற்றுள் சிலவற்றின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.
சகட தானம் (மாட்டு வண்டி தானம்)
மரத்தாலானதும், இரு சக்கரங்கள், பலகைகளுடன் கூடியதும், இரு எருதுகளுடன் இணைந்துள்ளதும், மேற்கூரை, கொடி இவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், பயணத்தில் நன்மை செய்வதுமான மாட்டு வண்டியை உமக்கு தானமாக அளிக்கிறேன். அதனால் எனக்கு சாந்தியைத் தாருங்கள். இதனை விசாகம், சித்திரையில் செய்வது உயர்ந்த பயன் தரும்.
உபவீத தானம் (பூணூல் தானம்)
யாகத்திலும் யோகத்திலும் கபில சாஸ்திரத்திலும் எப்பொழுதும் புனிமானதாய், பரம பவித்திரமாய்க் கூறப்படுவதும், பருத்தி நூல் கொண்டு கன்னியர்களால் தயாரிக்கப்பட்டதும், சகல தெய்வங்களுக்கும் விருப்பமானதும், பிரம்மாவை தேவதையாகக் கொண்டுள்ளதுமாக பூணூல் மகிமைபெற்றுள்ளபடியால், இந்த யக்ஞோபவீத தானத்தால் இறைவா, எனக்கு அனைத்திலும் புனிதத்தையும் அமைதியையும் அருள் வாய்.
சந்தன தானம் (யக்ஷகர்தம சந்தனச் சாந்து)
நறுமணமுள்ளதும், குங்குமப்பூ, அகில் ஆகியவற்றோடு சேர்ந்துள்ளதும், சந்தன மரக்கட்டையில் அரைத்தெடுத்ததும், யக்ஷகர்தமம் என்னும் பெயருள்ளதும், உடற்பூச்சுக்கு ஏற்றதும், ஆரோக்கியம் தருவதுமான அசல் சந்தன சாந்தினுடைய தானத்தால் இறைவன் எனக்கு அமைதியைத் தரட்டும். இதனை சதய நடசத்திரத்தன்று அளிப்பது சிறந்தது.
ஆதபத்ர தானம் (சத்ரதானம் - நிழற்குடை வழங்கல்)
மதிப்பளிக்கும் சின்னமாய் விளங்குவதும், நிழல் தருவதும், சூரியனின் வெப்பத்திலிருந்து நம்மைக் காப்பதும், தானமளிப்பவனுக்கு நோயைப் போக்குவதும், ஆயுளைத் தருவதும், ஆரோக்கிய வாழ்வுக்கு உதவுவதுமாக குடை உள்ளதால், இதனை தானம் செய்வதால் இறைவன் எனக்கு அமைதியை அளிக்கட்டும்.
தீப தானம் (ஒளிரும் விளக்கு வழங்குதல்)
இருளைப் போக்குவதாயும், அறியாமையை நீக்கி சகலவித்தைகளையும் தெரிவிப்பதாயும், இறைவனைக் காண உதவும் ஞானத்தைத் தருவதாயும், அனைத்து தெய்வங்களுக்கும் விருப்பமான உருவமாயும், உறைவிடமாய் விளங்குவதாயும், உயிரினங்களினுடைய அச்சத்தையும் ரோகத்தையும் போக்கியருள்வதாயும் திருவிளக்குப் பெருமை பல பெற்றுள்ளபடியால், தீப தானத்தினால் இறைவன் எனக்கு மனநிறைவை- அமைதியை அளிக்கட்டும். துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரின் அருள்பெறவும், புதன் கிரக தோஷம் அகலவும், தீபதானம் செய்யத்தக்கதாகும்.
புத்தக தானம் (கையேடு அல்லது புத்தகம்)
அனைத்துவகை கல்வியறிவுக்கும் மூலகாரணமானதும், அழகிய எழுத்துகளைக் கொண்டதும், சகல வித்தைகளை போதிப்பதும், தெய்வாம்சம் பொருந்தி தேவதா ரூபமாய் உள்ளதும், சரஸ்வதியின் கையில் விளங்குவதும், மந்திர மயமான எழுத்துகள் நிறைந்ததும், அறத்தை போதிப்பதும், வித்யாகாரகனாகிய புதன் கிரகத்தால் கையில் ஏந்தப்படுவதும், புதன் கிரகத்தை மகிழ்விப்பதுமான புத்தக தானத்தால் கலைமகள் மகிழ்ந்தவளாய் ஞான மளிக்கட்டும். புதன் கிரகம் மகிழ்ந்தவராய் அமைதியளிக்கட்டும்.
வ்யஜன தானம் (விசிறி வகை - பனையோலை, மூங்கில், மயில்தோகை)
வாயுதேவனைக் கொண்டிருப்பதாயும், கோடையின் துயரத்தைப் போக்குவதாயும், களைப்பு, வியர்வை, சோகம் ஆகியவற்றைப் போக்குவதாயும், பனைமர ஓலை முதலியவற்றாலானவையும், காற்றை அளிப்பதாயும், சகலருக்கும் உதவுவதாயும் விசிறியானது மகிமைபெற்றுள்ளதால், இதன் தானம் எனக்கு அமைதியளிக்கட்டும். ரோகம் அகலவும், ஆரோக்கியம் பெறவும் விசிறிதானம் செய்யத்தக்கதாகும்.
க்ஷீர தானம் (பசுவின்பாலை தானம் செய்தல்)
அறவழியில் முறையே பெறப்பட்டதும், உலகத்தோரால் வேண்டப்படுவதும், புண்ணியமானதும், யாகபூஜைகளுக்கு ஏற்ற கவ்ய பவித்ரமானதும், காரணமானதும், அனைத்தையும் புனிதப்படுத்தவல்லதுமான பசுவின் பாலானது காமதேனுவின் அமுதமாக மகிமைபெற்று விளங்குவதால், இந்தப் பால் தானத்தால் இறைவன் எனக்கு அமைதியை அளிக்கட்டும்.
ததி தானம் (தயிரை தானமாயளித்தல்)
பசும்பாலின் பரிணாமமாகத் தோன்றியதாகத் தயிர் விளங்குகிறது. அதன் தானம் எனது முன்ஜென்மங்களில் செய்த பாவங்களை நீக்கி உதவட்டும்.
க்ருத தானம் (ஆஜ்ய தானம் - பசுவின் நெய் தானம்)
பசுவின் வெண்ணெய்யில் தோன்றியதும், அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருவதுமான பசு நெய்யை உமக்கு அளிக்கிறேன். அதனால் எனக்கு அமைதியை அளித்திடுங்கள்.
பல தானம் (பழங்களின் தானம்)
எப்பொழுதும் மக்கள் மனம் விரும்புவதாகவுள்ள பழவகைகளையோ, ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள ஒருவகைப் பழத்தையோ (ஒருவகை உயர்ந்த பழத்தை) உகந்து மகன், பேரன் வம்ச வளர்ச்சியின் பொருட்டு உமக்கு தானமளிக்கிறேன், ஆதலால் எனக்கு இறைவன் சாந்தியை அளிக்கட்டும்.
ஓஷதீ தானம் (பச்சிலை மூலிகை தானம்)
சகல மரங்களின் இலைகளும் பலவகை மூலிகைகளாகும். அவ்வாறே புல், பூண்டு, புதர் கொடி, முதலியவையும்; அறுகம்புல், வெண்கடுகு முதலியனவும் புண்ணிய அரிய மூலிகைகளாய் உள்ளன. இவற்றின் தானத்தால் இவை என்னைப் புனிதப்படுத்தட்டும். (சீதேவியார், செங்கழு நீர், ஓரிதழ்தாமரை, பூனைப் பூண்டு, விஷ்ணு கிராந்தி முதலியன)
தைல தானம் (நல்லெண்ணெய் மண்சட்டியில் தருதல்)
எள்ளிலிருந்து பெறப்பட்ட நல்லெண்ணெய் என்பது, மக்களுக்கு உடல்வளத்தைத் தருவதும், ஆயுளைத் தருவதும், பாவத்தை அழிப்பதும், தீயவற்றை அழிப்பதும், உடலில் கூடாதவற்றை நீக்கி நன்மை தருவதுமாக சிறப்புற்று விளங்குவதால், இதனை தானம் செய்வதால் செழிப்பையும் சாந்தியையும் வளர்க்கட்டும்.
அயக்கண்ட தானம் (இரும்புத்துண்டு உக்ரதான வகை)
நிலத்தை உழுதிடும் கலப்பை முதலான பல ஆயுதங்களும், பிற இரும்பு வேலை முழுவதும் உனதுவசமாக உள்ளதால், பல பொதுநலப் பணிகளும் இரும்பாகிய உன்னாலேயே வலிமையும் நிறைவும் பெறுவதால், ஓ இரும்புத்தூண்டே! உன்னைப் பாராட்டி வணங்குகிறேன். ஆயுள்காரகரான சூரிய புத்திரரான சனியின் உலோகமான இரும்பு உலோகமே, நீ எனக்கு அனைத்துவித விரும்பாதவற்றைப் போக்கி அமைதியைத் தந்திடு. இது 61-வது ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யத்தக்கது. இதனை சுத்தி முதலிய சிறுகருவியாகவோ, கம்பித்துண்டாகவோ, தானம் செய்க. சனி கிரக பீடை, ராகு கிரக பீடைகள், துர்மரணபயம், கண்டம், விபத்து போன்றவை நீங்கவும் இரும்புதானம் செய்யத்தக்கதாகும்.
கம்பள தானம் (ஆட்டுரோம கம்பளித்துணி)
ஆட்டுரோமத்திலிருந்து உருவானதும், குளிர், நடுக்கம், பயம் ஆகியவற்றைப் போக்குவதும், உடலுக்கு வலிமை சேர்ப்பதும், நோய் போக்குவதுமான ஆட்டு கம்பளித் துணியை தானம் செய்வதால் இறைவா, எனக்கு வலிமையையும் அமைதியையும் அளித்திடுவீர்.
பீஜ தானம் (விதை தானியம் - விதை நெல்)
பாற்கடலிலுதித்த காமதேனுவின் பாலிலிருந்து வெளிப்பட்ட வழித்தோன்றலான வையும், வழிவழியாகத் தொடர்ந்துவந்து செல்வத்தையும் தானியங்களையும் கொடுப்பவையும், உயிர்ச்சத்து நிரம்பியவையும், விதைத்திடத் தகுதி பெற்றுள்ளவையும், இனப்பெருக்கத்தை அளிப்பவையுமாக விதைகள் விளங்குவதால், இறைவன் எனக்கு குலவிருத்தியுடன் சாந்தியை அளிக்கட்டும். குழந்தைப்பிறப்பு, விவாக புண்ணியகாரியம், பித்ருகாரியம் இவற்றில் இந்த தானம் செய்யத்தக்கதாகிறது.