பதிவு செய்த நாள்
15
டிச
2018
12:12
ஆர்.கே.பேட்டை: கடிகாசலம் சேத்திரம் மலை மீது அமைந்துள்ள நரசிம்ம பெருமாள் கோவிலில், வரும் ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை மாத முடிவும், மார்கழி முதல் தேதியாகவும் இருப்பதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த, கடிகாசலம் சேத்திரத்தில் அமைந்துள்ள பெரிய மலை மீது, நரசிம்ம பெருமாளும், அதன் கிழக்கில் உள்ள சின்ன மலையில், ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை தோறும், இங்கு சிறப்பு தரிசனம் நடைபெறும், குறிப்பாக, கார்த்திகை மாதம், ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெகுசிறப்பான தரிசனம் நடைபெறும்.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மலைக்கோவிலுக்கு நடந்தே வந்து, பெருமாளை தரிசனம் செய்வர்.நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் முடிவடைந்த நிலையில், வரும் ஞாயிற்றுக் கிழமை, மார்கழி முதல் தேதியாக அமைகிறது.மார்கழி மாதம் முழுவதுமே, பெருமாளுக்கு சிறப்பு நித்திய வழிபாடு நடைபெறும்.அதன் துவக்கமாக, மார்கழி முதல் தேதியும், கார்த்திகையின் ஐந்தாம் ஞாயிறும் இணைவதால், வரும் ஞாயிற்றுக்கிழமை, பெருமாள் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.