பதிவு செய்த நாள்
17
டிச
2018
03:12
சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மார்கழி பிற்ப்பையொட்டி, அதிகாலை 5:30 மணிக்கு கோமாதா பூஜையுடன், தனுர் மாத சிறப்பு வழிபாடு தொடங்கியது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று (டிசம்., 16ல்) நடந்த மார்கழி மாத வழிபாட்டில், ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மார்கழி மாத விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
* புன்செய்புளியம்பட்டி, ஐயப்பன் கோவில், அண்ணாமலையார், கரிவரதராஜ பெருமாள் ஊத்துக்குளி அம்மன், சவுடேஸ்வரி அம்மன், சுப்ரமணியர் உள்ளிட்ட கோவில்களில், அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. சித்தி விநாயகர் - ஐயப்பன் கோவிலில், குருசாமி முன்னிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் சபரிமலைக்கு மாலை அணிந்து, விரதம் துவக்கினர். அண்ணாமலையார் கோவிலில், அதிகாலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், திருவெம்பாவை பாடப்பட்டது.
* கிருஷ்ணராயபுரம்: மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, லாலாப்பேட்டையை சேர்ந்த சிவனடியார்கள், காவிரியில் குளித்துவிட்டு அதிகாலையில் வீதிகளில், பக்தி பாடல்கள் பாடி ஊர்வலமாக சென்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டையில் உள்ள சிவனடியார்கள் குழுவினர் சார்பில் நேற்று(டிசம்., 16ல்) அதிகாலையில் மார்கழி மாதம் பிறப்பு முன்னிட்டு காவிரி ஆற்றில் நீராடி, செம்பொற்ஜோதீஸ்வரர் கோவிலில், சிறப்பு வழிபாடு செய்தனர். பின் திருவெம்பாவை பாடல்களைப் பாடியபடி, லாலாப்பேட்டை வீதிகள் வழியாக ஊர்வலமாக, கொடிக்கால் தெரு மாரியம்மன் கோவில் வரை சென்றனர்.
* கோபிசெட்டிபாளையம்: மார்கழி மாத பிறப்பை ஒட்டி, கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், நேற்று (டிசம்., 16ல்) அதிகாலை 5:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மார்கழி துவக்கத்தை ஒட்டி, சாரதா மாரியம்மனுக்கு, நேற்று( டிசம்., 16ல்) முதல், ஜன., 13 வரை, சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் நடக்கிறது. இதேபோல், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், ஏராளமான பெண் பக்தர்கள், அம்மன் சன்னதி எதிரே, குண்டத்தில் தீபமேற்றி வழிபட்டனர். பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.
* சங்கராபுரம்:மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சங்கராபுரம் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று 16ல் சங்கராபுரம் கடைவீதி வினாயகர் கோவில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பாண்டுவனேஸ்வரர் கோவில், முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், பெருமாள் கோவில்களில் விடியற்காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. அதிகாலையில் பெண்கள் நீராடி கோவில்களில் விளக்கேற்றி, திருப்பாவை, திருவெம்பாவை பாடினர்.