சபரிமலை, சபரிமலை மூலவருக்கு சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி நேற்று அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இன்று பகல் 12:00-க்கு மண்டலபூஜை நடக்கிறது.மண்டலபூஜைக்காக டிச. 23-ம் தேதி ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி நேற்று பகல் 2:00மணிக்கு பம்பை வந்தது. கணபதி கோயில் முன் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. மாலை 3:30 மணிக்கு சன்னிதானத்திற்கு ஐயப்பா சேவா சங்கத்தினர் தலைச்சுமையாக எடுத்து வந்தனர். 6:00மணிக்கு சரங்குத்திக்கு வந்த அங்கிக்கு தேவசம்போர்டு சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
6:25 மணிக்கு 18-ம் படி வழியாக வந்த அங்கியை தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மூலவருக்கு அங்கியை அணிவித்து தீபாராதனை நடைபெற்றது.தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், உறுப்பினர்கள், சங்கரதாஸ், ராதாகிருஷ்ணன், பி.ஆர்.ஓ. சுனில் கலந்து கொண்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்தனர்.இன்று மண்டலபூஜைஇன்று பகல் 12:00 மணிக்கு மண்டலபூஜை நடக்கிறது. கோயில் மண்டபத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜித்த கலசத்தை மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி எடுத்து வர ஊர்வலம் கோயிலை வலம் வரும். ஐயப்பனுக்கு கலச அபிஷேகம் செய்த பின்னர் தங்க அங்கி அணிவித்து மண்டலபூஜை நடைபெறும்.பகல் 1:30 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11:00 மணிக்கு அடைக்கப்படும்.அதன் பின் 30-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். அன்று வேறு பூஜைகள் கிடையாது. 31-ம் அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்து நெய்யபிஷேகம் துவங்கும்.