பதிவு செய்த நாள்
28
டிச
2018
11:12
சபரிமலை: சபரிமலையில் நேற்று(டிச.,27) நடந்த மண்டல பூஜையுடன், இந்த ஆண்டுக்கான மண்டல காலம், நிறைவு அடைந்தது. கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவிலில், கார்த்திகை முதல் நாளில் துவங்கிய மண்டல காலம், 41 நாளான நேற்று, நிறைவு அடைந்தது. நேற்று மண்டல பூஜை நடந்தது. காலை, 11:30 மணிக்கு சன்னிதானத்தில், தந்திரி கண்டரரு ராஜீவரரு, களபம் எனப்படும் சந்தனத்தை பூஜித்து, பிரம்ம கலசத்தில் நிறைத்தார். அது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஆரன்முளாவில் இருந்து எடுத்துவரப்பட்ட தங்க அங்கி, அய்யப்பனுக்கு சார்த்தப்பட்டு, மண்டல பூஜை நடந்தது. பகல், 1:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பின், பகல், 3:00 மணிக்கு திறக்கப்பட்ட நடை, இரவு, 11:00க்கு அடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்வது தடை செய்யப்பட்டது. இனி மகரவிளக்கு காலத்துக்கான ஆயத்த பணிகள் நடக்கும். டிச., 30, மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கும்.