பதிவு செய்த நாள்
28
டிச
2018
12:12
சிவகங்கை: சிவகங்கை விஸ்வநாதசுவாமி கோயில் ஐயப்ப சுவாமி சன்னதியில் நேற்றுமுன்தினம் மண்டல பூஜை விழா துவங்கியது. இரவு முதல்கால சங்காபிஷேக பூஜை நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால சங்காபிஷேக பூஜை, தொடர்ந்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் நடந்தன. மாலை 6:30 மணிக்கு மின் அலங்காரத்தில் யானை வாகனத்தில் ஐயப்பன் சுவாமி திருவீதி உலா நடந்தது. இரவு 9:00 மணிக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேல்முருகன், ஸ்தானிகம் சந்திசேகர் மற்றும் ராமசாமி, ஐயப்ப பக்தர்கள் செய்தனர்.
திருப்புத்துார்: திருப்புத்துார் தர்மசாஸ்தா கோயிலில் மகரஜோதி யாத்திரையை முன்னிட்டு நேற்று மண்டலாபிஷேகம் நடந்தது. டிச.,16 காலை யாகசாலையில் கணபதி, சாஸ்தா ேஹாமத்துடன் மண்டலாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை லட்சார்ச்சனை நடந்தது. மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று மூலவர் சன்னதி முன், கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைந்தன. சுவாமி வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் மின் விளக்குகள் அலங்கரித்த ரதத்தில் சுவாமி திருவீதி வந்தார். திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள், ஐயப்ப சேவா சங்கம், மகரஜோதி யாத்திரை குழுவினர் செய்தனர்.